தண்ணீர் பாய்ச்ச சென்றபோது பயங்கரம் வாழை தோட்டத்தில் விவசாயியை மிதித்து கொன்ற யானைகள்

*ஆந்திராவில் சோகம்

திருமலை : ஆந்திர மாநிலம் பார்வதிபுரம் மான்யம் மாவட்டம் வனப்பகுதியையொட்டி ஏராளமான கிராமங்கள் உள்ளன. அவ்வப்போது வனப்பகுதியில் வசிக்கும் யானைகள், சிறுத்தை, புள்ளிமான் ஆகியவை கிராமத்திற்குள் நுழைவது வழக்கம். இந்நிலையில் நேற்றுமுன்தினம் மாலை வண்ணம் கிராமத்தை சேர்ந்த சிவநாயுடு(62) தனது வாழை தோட்டத்திற்கு தண்ணீர் பாய்ச்ச சென்றார்.

பின்னர் அங்குள்ள ஓடையில் குளித்துவிட்டு திரும்பியது தோட்டத்திற்குள் ஏதோ சத்தம் கேட்டது. இதனால் அருகில் சென்று பார்த்தபோது அங்கு 3 குட்டிகள் உட்பட 6 யானைகள் கூட்டமாக வாழை மரங்களை முறித்து அட்டகாசம் செய்து கொண்டிருந்தது.

இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த சிவநாயுடு கூச்சலிட்டபடி அங்கிருந்து ஓடினார். ஆனால் யானைகள் அவரை விரட்டிச்சென்று மிதித்து கொன்றது. இதையறிந்த கிராம மக்கள் அங்கு திரண்டனர். மேலும் தகவலறிந்து வனத்துறையினர் விரைந்து வந்து யானைகளை பட்டாசு வெடித்து, வனப்பகுதிக்குள் விரட்டியடித்தனர்.

பின்னர் உயிரிழந்த சிவநாயுடுவின் சடலத்தை மீட்டு மான்யம் அரசு மருத்துமவனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து கிராம மக்கள் கூறுகையில், ‘மான்யம் மாவட்டத்தில் வனப்பகுதிகளையொட்டி உள்ள பகுதிகளில் அடிக்கடி காட்டுயானைகள் புகுந்து தாக்குதல் நடத்துகிறது.

கடந்த சில ஆண்டுகளில் 10க்கும் மேற்பட்டோர் யானைகள் தாக்கி பலியாகி உள்ளனர். எனவே யானைகள் நடமாட்டத்தை தடுக்க வனத்துறையினர் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.வாழைத்தோட்டத்தில் யானை மிதித்து விவசாயி பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

The post தண்ணீர் பாய்ச்ச சென்றபோது பயங்கரம் வாழை தோட்டத்தில் விவசாயியை மிதித்து கொன்ற யானைகள் appeared first on Dinakaran.

Related Stories: