வேலூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, திருப்பத்தூர் உட்பட 12 மாவட்டங்களுக்கு 1,340 டன் உரம் ஆந்திராவிலிருந்து காட்பாடிக்கு வருகை: லாரிகள் மூலம் பிரித்து அனுப்பி வைப்பு


வேலூர்: தமிழகத்தில் விவசாய பணிகளுக்காக உரம், பூச்சி மருந்துகள், அடி உரம், தெளிப்பு மருந்துகள் போன்றவை வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து கப்பல்கள் மூலமாக அதிகளவில் இறக்குமதி செய்யப்படுகிறது. மேலும், சென்னை, தூத்துக்குடி நகரங்களில் இருந்து யூரியா, டிஏபி, காம்ப்ளக்ஸ் உரங்கள் சரக்கு ரயில்கள் மூலமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இந்த உரங்கள் வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் உள்ள கூட்டுறவு உரக்கிடங்குகள் மற்றும் தனியார் உரக்கடைகள் மூலம் விவசாயிகளுக்கு நிர்ணயிக்கப்பட்ட விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இந்நிலையில் ஆந்திர மாநிலம் கிருஷ்ணாவரம் துறைமுகத்திலிருந்து வேலூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவள்ளுர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், பெரம்பலூர், திருச்சி, மயிலாடுதுறை, தஞ்சாவூர் ஆகிய 12 மாவட்டங்களில் உள்ள தனியார் உரக்கடைகளில் விவசாயிகளுக்கு தேவையான பொட்டாசியம் உரம் தட்டுப்பாடின்றி கிடைக்கும் வகையில் 1,340 டன் பொட்டாசியம் நேற்று ரயிலில் காட்பாடிக்கு கொண்டு வரப்பட்டது.

இந்த உரமூட்டைகள் லாரிகள் மூலம் அந்தந்த மாவட்டங்களுக்கு பிரித்து அனுப்பப்பட்டது. இதுகுறித்து வேளாண் அதிகாரிகள் கூறியதாவது: காட்பாடி ரயில் நிலையத்திற்கு பொட்டாசியம் 1340 டன் உரம் ரயலில் வந்துள்ளது. இவை தனியார் உரக்கடைகளுக்கும், தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளுக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி வேலூருக்கு 159 டன்னும், ராணிப்பேட்டைக்கு 9 டன்னும், திருப்பத்தூருக்கு 82 டன்னும், திருவண்ணாமலைக்கு 122 டன்னும், திருவள்ளூர் மாவட்டத்துக்கு 30 டன்னும், விழுப்புரத்துக்கு 107 டன்னும், கள்ளக்குறிச்சிக்கு 132 டன்னும், கடலூருக்கு 65 டன்னும், பெரம்பலூருக்கு 25 டன்னும், திருச்சிக்கு 299 டன்னும், தஞ்சாவூருக்கு 60 டன்னும், மயிலாடுதுறைக்கு 30, தமிழ்நாடு உர கிடங்கிற்கு 218 டன் என மொத்தம் 1340 டன் உரங்கள் லாரிகள் மூலம் பிரித்து அனுப்பப்பட்டது.

விரைவில் வடகிழக்கு பருவ மழை தொடங்க உள்ளதால் அதற்குள் தேவையான உரங்கள் இருப்பு வைக்கப்படுகிறது. இதன் மூலம் விவசாயிகளுக்கு தட்டுப்பாடின்றி உரம் கிடைக்க தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. விவசாயிகள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி மற்றும் தனியார் உரக்கடைகளில் பெற்று கொள்ளலாம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

The post வேலூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, திருப்பத்தூர் உட்பட 12 மாவட்டங்களுக்கு 1,340 டன் உரம் ஆந்திராவிலிருந்து காட்பாடிக்கு வருகை: லாரிகள் மூலம் பிரித்து அனுப்பி வைப்பு appeared first on Dinakaran.

Related Stories: