விழுப்புரத்தில் சூறாவளிக்காற்றுடன் மழை மின் கம்பங்கள், மரங்கள் வேரோடு சாய்ந்தன

விக்கிரவாண்டி: விழுப்புரம் மாவட்டத்தில் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வந்த நிலையில் கடந்த சில நாட்களாக மழை பெய்தும் வருகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில் இரவு மழை பெய்ய தொடங்கியது. தொடர்ந்து சூறாவளி காற்று மற்றும் மின்னலுடன் இரவு முழுவதும் மழை பெய்தது. இந்நிலையில் காணை பகுதியில் சூறாவளி காற்றால் மின்கம்பங்கள், மரங்கள் வேரோடு சாய்ந்தன. திருக்கோவிலூர் செல்லும் சாலையில் பெருமளவு மரங்கள் சாய்ந்ததால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. இதனை மின் ஊழியர்கள், பொதுமக்கள் உதவியோடு அப்புறப்படுத்தினர். கனமழை காரணமாக தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளில் மழைநீர் புகுந்தது.

பல இடங்களில் வீட்டின் மேற்கூரைகள் காற்றில் பறந்தன. திடீரென சூறாவளி காற்று வீசியதால் மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்து இரவு முழுவதும் மின்தடையால் அப்பகுதி மக்கள் கடும் சிரமத்துக்குள்ளாகினர். பின்னர் மின் கம்பம் மற்றும் மின் வயர்களை சரிசெய்து மீண்டும் மின்சாரம் வழங்கினர். கல்வராயன்மலை: கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன்மலையில் தாழ் வெள்ளாறு கிராமத்தில் நேற்று பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக தாழ் வெள்ளாறு, மேல் வெள்ளாறு கிராமத்துக்கு இடையே உள்ள சாலையில் பழமை வாய்ந்த புளியமரம் வேரோடு சாய்ந்து விழுந்து பல கிராமங்களுக்கு போக்குவரத்து மற்றும் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனை சரிசெய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர்.

 

The post விழுப்புரத்தில் சூறாவளிக்காற்றுடன் மழை மின் கம்பங்கள், மரங்கள் வேரோடு சாய்ந்தன appeared first on Dinakaran.

Related Stories: