மக்களவைத் தேர்தல் முடிவுகள் எதிரொலி :தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சி என்ற அந்தஸ்தை பெறும் விடுதலை சிறுத்தைகள், நாம் தமிழர் கட்சிகள்!!

டெல்லி : மக்களவை தேர்தலில் களம் கண்ட விடுதலை சிறுத்தைகள், நாம் தமிழர் கட்சிக்கு மாநில கட்சி அங்கீகாரம் கிடைக்கிறது. பொதுவாக ஒரு கட்சி, மாநில கட்சி அந்தஸ்து பெற வேண்டும் என்றால் பொதுத்தேர்தலில் மாநிலத்தில் மொத்த செல்லுபடியாகும் வாக்குகளில் 8%-க்கு மேல் பெற்றிருக்க வேண்டும். அதன்படி, மக்களவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்ட நிலையில், தமிழகத்தில் 39 தொகுதிகளில் தனித்து போட்டியிட்ட நாம் தமிழர் கட்சி 8.19% வாக்குகளை பெற்று மாநில கட்சி அந்தஸ்தை பெற தகுதி அடைந்துள்ளது. குறிப்பாக ஈரோடு, கள்ளக்குறிச்சி, கன்னியாகுமரி, நாகப் பட்டினம் ஆகிய 4 தொகுதிகளில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அதிமுக, பாஜவை பின்னுக்குத் தள்ளி 3வது இடத்தைப் பிடித்துள்ளனர். மேலும் 12 தொகுதிகளில் நாம் தமிழர் கட்சி ஒரு லட்சத்திற்கும் மேலான வாக்குகளை பெற்றுள்ளது.

இதனிடையே திமுக கூட்டணியில் விழுப்புரம், சிதம்பரம் தொகுதிகளில் தனி சின்னத்தில் நின்று வெற்றி பெற்றதன் மூலம் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கும் மாநில கட்சி அங்கீகாரம் கிடைக்க உள்ளது. அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சி என்ற அந்தஸ்தை பெற சில நிபந்தனைகளை பூர்த்தி செய்ய வேண்டியது அவசியம். பேரவை தேர்தலில் பதிவாகிய வாக்குகளில் 6% வாக்கு பெற வேண்டும்; அத்துடன் 2 இடங்களில் வெற்றி பெற்றிருக்க வேண்டும். மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகளில் 6% வாக்கு பெற்றிருக்கவேண்டும்; அந்த தேர்தலில் 1 தொகுதியில் வெல்ல வேண்டும். மாநில சட்டப்பேரவை தேர்தலில் மொத்த தொகுதிகளில் 3 சதவீத இடங்களில் வெற்றி பெற வேண்டும். விழுப்புரம், சிதம்பரம் தொகுதியில் வென்று நிபந்தனையை பூர்த்தி செய்ததால் அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சியாகிறது வி.சி.க. இதையடுத்து, இந்த இரு கட்சிகளும் வாக்கு சதவீதம் தொடர்பான விவரங்களை தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிக்க வேண்டும். தேர்தல் ஆணையம் அதை உறுதி செய்து 15 நாட்கள் முதல் ஒரு மாத காலத்துக்குள் அதற்கான அங்கீகாரத்தை அதிகாரப்பூர்வமாக வழங்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

The post மக்களவைத் தேர்தல் முடிவுகள் எதிரொலி :தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சி என்ற அந்தஸ்தை பெறும் விடுதலை சிறுத்தைகள், நாம் தமிழர் கட்சிகள்!! appeared first on Dinakaran.

Related Stories: