திருவண்ணாமலை: “அமித்ஷா அவர்களே, நீங்கள் அல்ல.. உங்கள் சங்கிப் படையையே கூட்டிட்டு வந்தாலும் உங்களால் இங்க ஒன்னும் பண்ண முடியாது. இது தமிழ்நாடு, எங்களோட கேரக்டரையே புரிஞ்சிக்க மாட்டேங்கிறீங்களே!” என திருவண்ணாமலையில் வடக்கு மண்டல திமுக இளைஞர் அணி நிர்வாகிகள் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.
மேலும் “திமுகவை அண்ணா தொடங்கியபோது அவருக்கு வயது 40தான், கலைஞருக்கு 25 வயதுதான். ஃபயர் பிராண்டுதான் நமது திமுக. திமுக இளைஞரணியினரை பார்க்கும்போது 50 ஆண்டுகள் டைம் டிராவல் மூலம் பின்னால் போனது போல் உள்ளது. தமிழ்நாடு முழுவதும் பயணம் சென்று இளைஞரணியை வளர்த்தெடுத்த ஞாபகங்கள் எல்லாம் வருகிறது.
திண்ணைப் பிரச்சாரம், நாடகம் என திமுகவை மக்களிடம் கொண்டு சேர்த்துள்ளோம். இரவு பகல் பார்க்காமல் தூக்கம் இல்லாமல் உழைத்து வளர்த்த திமுக 75 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. புது ரத்தமாக வந்திருக்கக் கூடிய இளைஞரணியை பார்க்கும் போது புது மகிழ்ச்சியும் நம்பிக்கையும் பிறக்கிறது. ஏ தாழ்ந்த தமிழகமே என கவலைப்பட்ட காலத்தை மாற்றி, இப்போது திரும்பிப் பாருங்கள் தமிழ்நாட்டை என சொல்லுகிற காலத்திற்கு நாம் வந்துள்ளோம்.
தமிழ்நாட்டை இருட்டுக்குள் தள்ளும் அனைத்தையும் எதிர்த்து தோற்கடித்து புது வரலாறு படைத்தோம். திமுக எடுத்தோம், கவிழ்த்தோம் என்று எதையும் செய்துவிடவில்லை. திமுகவினர் தெருத்தெருவாக சென்று பேசியதோடு சலூனையும் அரசியல் மேடைகளாக மாற்றி மக்களை எஜுகேட் செய்தனர். திராவிட இன உணர்வை வளர்த்ததோடு, தமிழை நசுக்க வந்த இந்தி ஆதிக்கத்தை விரட்டினார்கள். தாழ்ந்த தமிழகமே என்று கவலைப்பட்டதை மாற்றி, தமிழ்நாட்டை திரும்பிப் பாருங்கள் என்ற நிலைக்கு மாற்றி உள்ளோம்.
உழைப்பு, தியாகம், கொள்கை உணர்வை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லவே திமுக இளைஞரணி உருவாக்கப்பட்டது. 1980 ஜூலை 20ஆம் தேதி மதுரை ஜான்சிராணி பூங்காவில் இளைஞரணியைத் தொடங்கினோம். இளைஞரணி பயணத்தில் நாங்கள் சந்திக்காத சோதனைகள், துன்பங்கள் இல்லை. சோதனைகள், துரோகங்கள், துன்பங்களை தாண்டி திமுகவின் லட்சியப் பயணத்துக்கு துணை நின்றது இளைஞரணி. இளைஞரணிப் பணியை உதயநிதியிடம், உங்களிடமும் ஒப்படைத்துள்ளோம்.
தன்னுடைய பொறுப்பை உணர்ந்து இன்னும் பவர்ஃபுல்லா உதயநிதி செயல்படுகிறார். இறங்கி அடிக்கிறார் உதயநிதி ஸ்டாலின், கொள்கை எதிரிகள் உதயநிதி மோஸ்ட் டேஞ்சரஸ் என புலம்புகிறார்கள். திமுகவிற்கு எது தேவை என்று உணர்ந்து செயல்படுகிறார் உதயநிதி. கொள்கையில் மிகவும் பலமாக இருக்கிறார். திமுகவை வலுப்படுத்த லட்சக்கணக்கான இளைஞர்களை கட்சியில் உதயநிதி சேர்த்துள்ளார்.
பாஜக அரசு மூன்றாவது முறையாக ஆட்சி அமைத்த ஆணவத்தில் ஆக்ரோஷத்தோடு செயல்பட தொடங்கி இருக்கிறது. வெளுத்ததெல்லாம் பால் என்று நம்பக் கூடிய மக்களிடம் பொய்களை கொண்டு சேர்க்க முயற்சிக்கிறார்கள். இந்தியாவில் சித்தாந்த ரீதியில் பாஜகவை எதிர்கொள்ளும் ஒரே கட்சி திமுகதான். பாஜகவால் வெற்றிபெற முடியாதது தமிழ்நாட்டில் மட்டும்தான், அதனால்தான் அமித்ஷா போன்றோருக்கு நம் மீது எரிச்சல்.
அமித்ஷா அவர்களே, நீங்கள் அல்ல.. உங்கள் சங்கிப் படையையே கூட்டிட்டு வந்தாலும் உங்களால் இங்க ஒன்னும் பண்ண முடியாது. அன்போட வந்தா அரவணைப்போம், ஆணவத்தோடு வந்தா அடிபணிய மாட்டோம். இது தமிழ்நாடு, எங்களோட கேரக்டரையே புரிஞ்சிக்க மாட்டேங்கிறீங்களே!” என உரையாற்றினார்.
