வேலூரில் அசைவ பிரியர்கள் திரண்டனர் மீன் மார்க்கெட்டில் விற்பனை களைக்கட்டியது

*விலை கடந்த வாரத்தை விட அதிகரித்தது

வேலூர் : வேலூர் மீன் மார்க்கெட்டில் நேற்று காலை முதலே ஏராளமானோர் மீன்கள் வாங்க திரண்டதால் விற்பனை களைக்கட்டியது. மேலும் விலையும் சற்று அதிகரித்திருந்தது.
வேலூர் புதிய மீன் மார்க்கெட்டிற்கு தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், கர்நாடகா, ஆந்திரா மற்றும் கேரளா போன்ற வெளிமாநிலங்களில் இருந்தும் திங்கள் முதல் சனிக்கிழமை வரை நாள் ஒன்றுக்கு 50 டன் வரை மீன்கள் கொண்டு வரப்படுகின்றன.

ஞாயிற்றுக்கிழமையில் மட்டும் 70 முதல் 100 டன் வரை மீன்கள் விற்பனை செய்யப்படுகின்றன. காலை முதல் இரவு வரை சில்லறை விற்பனை நடக்கிறது. இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமையான நேற்று மீன்கள் விலை கடந்த வாரத்தை விட சற்று அதிகரித்துள்ளது. இருப்பினும் அசைவ பிரியர்கள் மீன்கள் வாங்க திரண்டதால் விற்பனை களைக்கட்டியது.

இதுகுறித்து வியாபாரிகள் கூறியதாவது: வேலூர் மீன் மார்க்கெட்டில் கடந்த வாரம் 2 லோடு மீன்கள் வந்தது. இந்த வாரம் 3 லோடு வந்துள்ளது. ஆனால் மீன்களை வாங்க அதிகளவிலான அசைவ பிரியர்கள் வந்தனர். நுகர்வு அதிகரித்துள்ளதால் கடந்த வாரத்தைவிட மீன்களின் விலையும் சற்று உயர்ந்துள்ளது. வஞ்சிரம் கிலோ ரூ.1,000 முதல் ரூ.1,200 வரை விற்றது. இறால் கிலோ ரூ.400 முதல் ரூ.500 வரையும், நண்டு கிலோ ரூ.300 முதல் ரூ.400 வரையும் விற்றது. சங்கரா கிலோ ரூ.400 வரையும், ஷீலா கிலோ ரூ.500 வரையும், மத்தி ரூ.140, விரால் ரூ.600, கடல் வவ்வால் கிலோ ரூ.800 வரை விற்பனை செய்யப்படுகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

The post வேலூரில் அசைவ பிரியர்கள் திரண்டனர் மீன் மார்க்கெட்டில் விற்பனை களைக்கட்டியது appeared first on Dinakaran.

Related Stories: