உத்தண்டி அருகே நேற்றிரவில் பைக் மீது சினிமா கேரவன் வாகனம் உரசியதில் சாலையில் விழுந்த மனைவி, 4 மாத குழந்தை பஸ் மோதி பலி

துரைப்பாக்கம்: உத்தண்டி அருகே பைக் உரசியபடி சினிமா கேரவன் வாகனம் சென்றதால் ஏற்பட்ட விபத்தில், அரசு பேருந்து ஏறி இறங்கியதில் மனைவி, 4 மாத கைக்குழந்தை பலியாகினர். கணவர் மற்றும் 2 குழந்தைகள் உயிர் தப்பினர். சம்பவத்தை கண்டித்து அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. புதுச்சேரி கோட்டைக்குப்பம் பகுதியை சேர்ந்தவர் முத்தக்காஸ் அகமத் (40). இவரது மனைவி பெனாசிற்பி (30). இவர்களுக்கு அசியான் என்ற 4 மாத குழந்தை உள்ளிட்ட 3 பிள்ளைகள் உள்ளனர். கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு கானத்தூர் கலைஞர் தெருவில் குடியேறினர்.

இந்நிலையில் நேற்றிரவு 5 பேரும் ஒரே பைக்கில் கிழக்கு கடற்கரை சாலை வழியாக மாமல்லபுரம் நோக்கி சென்றனர். உத்தண்டி பஸ் நிறுத்தம் அருகே சென்றபோது, அதிவேகமாக வந்த சினிமா கேரவன் வாகனம் பைக் மீது உரசியபடி சென்றுள்ளது. இதனால் நிலைதடுமாறி சாலையில் பைக்குடன் விழுந்தனர். இதில், பெனாசிற்பி, 4 மாத கைக்குழந்தை அசியான் வலது புறத்தில் விழுந்தனர். கணவர் மற்றும் 2 குழந்தைகள் இடது புறத்திலும் விழுந்தனர். அந்த நேரத்தில் பின்னால் வந்த அரசு பேருந்து பெனாசிற்பி, 4 மாத குழந்தை மீது மோதியது. பஸ்சின் சக்கரம் ஏறி இறங்கியதில் தலை நசுங்கி பெனாசிற்பி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். 4 மாத குழந்தை படுகாயத்துடன் அலறி துடித்தது.

இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக ஓடி வந்து படுகாயமடைந்த குழந்தையை மீட்டு அங்குள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி குழந்தை பரிதாபமாக இறந்தது. முத்தக்காஸ் அகமத் மற்றும் 2 குழந்தைகள் லேசான காயத்துடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். தகவலறிந்து பள்ளிக்கரணை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பெனாசிற்பி மற்றும் குழந்தையின் சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கணவன் கண்ணெதிரே மனைவி மற்றும் 4 மாத கைக்குழந்தை இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையறிந்ததும் அப்பகுதி மக்கள் 50க்கும் மேற்பட்டோர் கிழக்கு கடற்கரை சாலையில் திரண்டு மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதையடுத்து கானத்தூர் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து மறியலில் ஈடுபட்ட மக்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். விபத்து தொடர்பாக உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியதைடுத்து அனைவரும் கலைந்து சென்றனர். போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பிய அரசு பேருந்து டிரைவரை தேடி வருகின்றனர்.

இதுகுறித்து பகுதி மக்கள் கூறுகையில், விபத்து நடந்த இடம் மிக வளைவான சாலையாகும். இங்கு அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. இந்த இடத்தில் சாலை தடுப்பு அல்லது வேகத்தடை அமைக்க வேண்டும் என அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. வேகத்தடை அமைத்திருந்தால் விபத்து ஏற்பட்டிருக்காது. எனவே, இந்த இடத்தில் வேகத்தடை அமைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றனர்.

The post உத்தண்டி அருகே நேற்றிரவில் பைக் மீது சினிமா கேரவன் வாகனம் உரசியதில் சாலையில் விழுந்த மனைவி, 4 மாத குழந்தை பஸ் மோதி பலி appeared first on Dinakaran.

Related Stories: