சிதம்பரம் நடராஜர் கோவிலுக்குச் சொந்தமான 2,000 ஏக்கர் நிலத்தை தீட்சிதர்கள் விற்றுவிட்டதாக அறநிலையத் துறை குற்றச்சாட்டு!


சென்னை: சிதம்பரம் கோவிலுக்கு சொந்தமான 2000 ஏக்கர் நிலத்தை தீட்சிதர்கள் விற்பனை செய்துவிட்டதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் இந்து சமய அறநிலையத்துறை அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளது. சிதம்பரம் நடராஜர் கோவிலில் வருவாய் கணக்கை தாக்கல் செய்ய உத்தரவிடக் கோரிய வழக்கு நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார், எஸ்.சவுந்தர் அடங்கிய சிறப்பு அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது தீட்சிதர்கள் தரப்பில் கோவிலில் தணிக்கை செய்யப்பட்ட வரவு, செலவு கணக்கு விவரங்கள் மூடி முத்திரையிடப்பட்ட உரையில் தாக்கல் செய்யப்பட்டது.

இதற்கு திருப்தி தெரிவிக்காத நீதிபதிகள் இந்த அறிக்கை வருமான வரிக்காக ஆண்டறிக்கை என்றும் நாங்கள் கேட்டது முழுமையான கணக்கு புத்தகம் என்றும் கூறினர். தொடர்ந்து அறநிலையத்துறைக்கு சொந்தமாக 3000 ஏக்கர் நிலம் இருந்த நிலையில் அதில் 2000 ஏக்கர் நிலத்தை தீட்சிதர்கள் தனி நபர்களுக்கு விற்பனை செய்ததாக குற்றம் சாட்டினர். 2000 ஏக்கர் நிலம் விற்கப்பட்டது குறித்தும், 1000 ஏக்கரில் இருந்து 1 லட்சத்துக்கு குறைவாகவே, வருமானம் வருவது மற்றும் பக்தர்கள் கொடுக்கும் காணிக்கையை கணக்கில் சேர்க்காதது குறித்தும் நீதிபதிகள் அதிர்ச்சி தெரிவித்தனர்.

மேலும் 2017-18ம் ஆண்டில் இருந்து 2021-22 வரையிலான வரவு செலவு கணக்குகளை தாக்கல் செய்ய உத்தரவிட்டனர். தொடர்ந்து கோவிலுக்கு சொந்தமாக தற்போது உள்ள நிலம் குறித்து தாசில்தாரும், 2000 ஏக்கர் நிலத்தை தீட்சிதர்கள் விற்பனை செய்த குற்றச்சாட்டுக்கான ஆவணங்களை அறநிலையத்துறையும் அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கு விசாரணையை அக்.3ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

The post சிதம்பரம் நடராஜர் கோவிலுக்குச் சொந்தமான 2,000 ஏக்கர் நிலத்தை தீட்சிதர்கள் விற்றுவிட்டதாக அறநிலையத் துறை குற்றச்சாட்டு! appeared first on Dinakaran.

Related Stories: