இணை செயலாளர் பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் 15 ஆண்டு அனுபவமும் 40 முதல் 55 வயதுக்கு உட்பட்டவர்களாகவும் இருக்க வேண்டுமெனவும், மாத சம்பளம் ரூ.2.70 லட்சம், 3 ஆண்டு ஒப்பந்த அடிப்படையில் பணி, அதிகபட்சம் 2 ஆண்டுகள் நீட்டிக்கப்படும் எனவும் யுபிஎஸ்சி தெரிவித்திருந்தது. இப்பணியிடங்கள், அரசு துறையின் நிர்வாக தலைவராகவும், முக்கிய முடிவுகளை எடுக்கும் அதிகாரமும் கொண்ட உயர் பதவிகளாகும். வழக்கமாக ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட இந்திய குடிமைப்பணி அதிகாரிகளே இப்பதவிகளில் நியமிக்கப்படுவார்கள்.
ஆனால், இவற்றில் நேரடி நியமனம் செய்வதன் மூலம் எஸ்சி, எஸ்டி, ஓபிசிகளுக்கான எந்த இடஒதுக்கீடு முறையும் பின்பற்றப்படாது. கடந்த 2018ம் ஆண்டில் இருந்தே பலமுறை இதுபோன்ற நேரடி நியமனங்களை ஒன்றிய பாஜ அரசு மேற்கொண்டுள்ளது. கடந்த 10 ஆண்டுகளும் மோடி அரசு தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி செய்ததால் நேரடி நியமனம் போன்ற தன்னிச்சையான முடிவுகளை எடுத்தது. ஆனால் இம்முறை எதிர்க்கட்சிகள் வலுவடைந்துள்ளதால், ஒன்றிய அரசின் இந்த நடவடிக்கைக்கு நாடு முழுவதும் எதிர்க்கட்சிகளும், இந்தியா கூட்டணி கட்சிகளும் கடும் கண்டனம் தெரிவித்தன.
இது தலித்துகள், ஓபிசிக்கள் மீதான நேரடி தாக்குதல் என்றும், ஆர்எஸ்எஸ்காரர்களை பின்வாசல் வழியாக உயர் பதவிகளில் அமர வைக்க செய்யப்படும் சதி என்றும் மக்களவை எதிர்க்கட்சி தலைவரான காங்கிரசின் ராகுல் காந்தி குற்றம்சாட்டினார். தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு மாநில முதல்வர்களும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த விவகாரத்தில் பாஜ கூட்டணி கட்சிகள் கூட எதிராக திரும்பின. பாஜ தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம், சிராக் பஸ்வான் கட்சிகளும் நேரடி நியமன அறிவிப்புக்கு எதிராக போர்க்கொடி தூக்கின.
ஆனாலும் இந்த நடைமுறையை நியாயப்படுத்தி ஒன்றிய அமைச்சர்கள் பலர் பதிலளித்து வந்தனர். இவ்வாறு ஆளும், எதிர்க்கட்சிகள் இடையே வார்த்தை மோதல்கள் வலுத்து வந்த நிலையில், திடீர் திருப்பமாக எதிர்க்கட்சிகளின் எதிர்ப்புக்கு ஒன்றிய அரசு நேற்று அடிபணிந்தது. உயர் பதவிகளில் நேரடி நியமன விளம்பர அறிவிப்பை ரத்து செய்யுமாறு யுபிஎஸ்சியை கேட்டுக் கொண்டது.
இதுதொடர்பாக, ஒன்றிய பணியாளர் நலத்துறை இணை அமைச்சர் ஜிதேந்திர சிங், யுபிஎஸ்சி தலைவர் பிரீத்தி சுதனுக்கு எழுதிய கடிதத்தில், ‘‘உயர் பதவிகளில் நேரடி நியமன செயல்முறையிலும் சமத்துவம், சமூக நீதியின் கொள்கைகளுடன், குறிப்பாக இடஒதுக்கீடு விதிகள் பின்பற்றப்பட வேண்டும் என்பதில் பிரதமர் மோடி உறுதியாக நிற்கிறார்.
அரசுப் பணிகளில் இடஒதுக்கீடு என்பது நமது சமூக நீதி கட்டமைப்பின் ஆதாரமாகும். சமூக நீதியை உறுதி செய்வதில் பிரதமர் மோடி கவனம் செலுத்தும் சூழலில், நேரடி நியமன செயல்முறைகள் ஆய்வு செய்யப்பட்டு சீர்திருத்தப்பட வேண்டும். எனவே, 17.8.2024 அன்று வெளியிடப்பட்ட நேரடி நியமன விளம்பரத்தை ரத்து செய்யுமாறு வலியுறுத்துகிறேன். இந்த நடவடிக்கை, சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தலில் குறிப்பிடத்தக்க முன்னேற்றமாக இருக்கும்’’ என கூறி உள்ளார்.
இதைத் தொடர்ந்து, 45 உயர் பதவிகளுக்கான நேரடி நியமன ஆட்தேர்வு அறிவிப்பை யுபிஎஸ்சி ரத்து செய்வதாக அறிவித்தது. இந்த விவகாரத்தில் இந்திய கூட்டணி கட்சிகளின் ஒற்றுமையால் ஒன்றிய பாஜ அரசு அடிபணிந்திருப்பதாக பல்வேறு எதிர்க்கட்சிகள் கருத்து தெரிவித்துள்ளன. அதே சமயம், நேரடி நியமன நடைமுறையில் இடஒதுக்கீட்டையும் உறுதி செய்யும் வகையில் சீர்த்திருத்தங்கள் மேற்கொள்ள நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது.
* விழிப்புணர்வுக்கு கிடைத்த வெற்றி
மல்லிகார்ஜூன கார்கே (காங். தலைவர்): தலித்துகள், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்ட மற்றும் நலிந்த பிரிவினருக்காக சமூக நீதிக்கான காங்கிரஸ் கட்சியின் போராட்டம், இடஒதுக்கீட்டைப் பறிக்கும் பாஜவின் திட்டங்களை முறியடித்துள்ளது. அரசியலமைப்பின் அதிகாரத்தால் மட்டுமே சர்வாதிகார ஆட்சியின் ஆணவத்தை முறியடிக்க முடியும் என்பதை இது காட்டுகிறது. நமது ஒற்றுமையால் பாஜ அரசு பின்வாங்கி உள்ளது. ஆனால் பாஜ-ஆர்எஸ்எஸ் ஆட்சியில் இருக்கும் வரை, இடஒதுக்கீட்டைப் பறிக்க புதிய யுக்திகளை தொடர்ந்து முயற்சிப்பார்கள். நாம் அனைவரும் கவனமாக இருக்க வேண்டும்.
அகிலேஷ் யாதவ் (சமாஜ்வாடி தலைவர்): யுபிஎஸ்சியின் நேரடி நியமனம் மூலம் இடஒதுக்கீட்டை நிராகரிக்கும் சதி, பிற்படுத்தப்பட்டோர், தலித்கள், சிறுபான்மையினரின் ஒற்றுமைக்கு அடிபணிந்துள்ளது. பாஜவின் சதிகள் இனி வெற்றி பெறாது. மக்கள் விழிப்படைந்துள்ளனர். அவர்களின் விழிப்புணர்வுக்கு கிடைத்த வெற்றி இது. நேரடி நியமன விவகாரம் இடஒதுக்கீட்டுக்கு எதிரான பாஜவின் முகத்தை அம்பலப்படுத்தி உள்ளது.
மாயாவதி (பகுஜன் சமாஜ் தலைவர்): வழக்கமான இடஒதுக்கீடு சலுகையுடன் பதவி உயர்வு மற்றும் நியாயமான தேர்வு மூலம் நிரப்பப்பட வேண்டிய உயர் பதவி பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்புவதை பகுஜன் சமாஜ் வன்மையாக கண்டித்தது. தற்போது இது ரத்து செய்யப்பட்டிருந்தாலும், இதுபோன்ற இடஒதுக்கீட்டுக்கு எதிரான அனைத்து நடவடிக்கைகளையும் முடிவுக்கு கொண்டு வர வேண்டியது அவசியம்.
பிரகாஷ் அம்பேத்கர் (விபிஏ கட்சி தலைவர்): முன்பு தனிப்பெரும்பான்மையுடன் இருந்ததால் பாஜ தன்னிச்சையாக முடிவெடுத்தது. இனி அப்படியெல்லாம் செய்ய முடியாது. எதிர்ப்புகளுக்கு அவர்கள் பணிந்துதான் தீர வேண்டும்.
தேஜஸ்வி யாதவ் (பீகார் முன்னாள் துணை முதல்வர்): ஆர்எஸ்எஸ்காரர்களை பின்வாசல் வழியாக உயர் பதவிகளுக்கு கொண்டு வருவதற்காக யுபிஎஸ்சி மூலம் நேரடி நியமன அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதால் சமூக நீதி எனக் கூறி ஒன்றிய பாஜ அரசு நாடகம் ஆடுகிறது. பாஜ அரசின் இதுபோன்ற திரைமறைவு செயல்களை நாங்கள் தொடர்ந்து முறியடிப்போம்.
* அரசியலமைப்பையும் இடஒதுக்கீட்டையும் என்றும் பாதுகாப்போம்
ஒன்றிய அரசின் அறிவிப்பைத் தொடர்ந்து காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தனது எக்ஸ் தள பதிவில், ‘‘அரசியலமைப்புச் சட்டத்தையும் இடஒதுக்கீடு முறையையும் நாங்கள் எப்போதும் பாதுகாப்போம். லேட்டரல் என்ட்ரி (நேரடி நியமனம்) போன்ற பாஜவின் சதிகளை தொடர்ந்து முறியடிப்போம். நான் மீண்டும் ஒருமுறை சொல்கிறேன். 50% இடஒதுக்கீடு வரம்பை நீக்குவதன் மூலம், சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் சமூக நீதியை உறுதி செய்வோம்’’ என சூளுரைத்துள்ளார்.
பாஜ தலைவர்கள் கூறுவது என்ன? ஒன்றிய இணை அமைச்சர் ஜிதேந்திர சிங், யுபிஎஸ்சி தலைவர் பிரீத்தி சுதனுக்கு எழுதிய கடிதத்தில், காங்கிரஸ் தலைமையிலான ஆட்சியில் கடந்த 2005ம் ஆண்டு வீரப்ப மொய்லி தலைமையில் அமைக்கப்பட்ட 2வது நிர்வாக சீர்திருத்த ஆணையம், நேரடி நியமன செயல்முறையை அங்கீகரித்ததாக குறிப்பிட்டுள்ளார்.
அதற்கு முன்னும் பின்னும் நேரடி நியமனம் மூலமாக பல உயர் பதவிகள் நிரப்பப்பட்டுள்ளதாகவும், முந்தைய அரசாங்கங்களில், பல்வேறு அமைச்சகங்களில் செயலர்கள், உதய் அமைப்பின் தலைவர் போன்ற முக்கிய பதவிகள், எந்த இடஒதுக்கீடு செயல்முறையையும் பின்பற்றாமல் நேரடி நியமனம் மூலம் நிரப்பபட்டுள்ளதாகவும் ஜிதேந்திர சிங் கூறி உள்ளார்.
கடந்த 2014ம் ஆண்டுக்கு முன்னர் நேரடி நியமனங்கள் எந்த திட்டமிடலும் இல்லாமலும், வேண்டப்பட்ட நபர்கள் உயர் பதவியில் அமர வைக்கப்பட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில், இதை நிறுவன ரீதியாக, வெளிப்படைத்தன்மையுடன் நேரடி நியமனங்கள் மேற்கொள்ள பாஜ அரசு முயற்சி எடுத்ததாக குறிப்பிட்டுள்ள அமைச்சர் ஜிதேந்திர சிங், அதனால் யுபிஎஸ்சி மூலமாக நேரடி நியமன அறிவிப்புகள் வெளியிடப்பட்டதாக கூறி உள்ளார். முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், மாண்டேக் சிங் அலுவாலியா, விஜய் கேல்கர் போன்றவர்கள் அனைவரும் நேரடி நியமனம் மூலம் நிதிச் செயலாளர்கள் ஆனவர்கள் என ஒன்றிய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறி உள்ளார்.
ஒன்றிய அமைச்சர்களுக்கு ஜெய்ராம் ரமேஷ் பதிலடி
காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது எக்ஸ் தள பதிவில், ‘‘நேற்று மாலை வரை ஒன்றிய அமைச்சர்கள் பலரும் மன்மோகன் சிங் உள்ளிட்டவர்கள் நேரடி நியமனம் மூலம் உயர் பதவிக்கு வந்தவர்கள் என்று குற்றம்சாட்டி வந்தனர். காங்கிரஸ் பாசாங்கு செய்வதாக கூறினார்கள். இப்போது அதே அமைச்சர்கள் திடீரென தடம் புரண்டுள்ளார்கள். பிரதமர் மோடியை சமூக நீதியின் சாம்பியன் என போற்ற வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டிருக்கிறார்கள். உங்கள் பாசாங்குக்கு எல்லையே இல்லையா?’’ என கிண்டலடித்துள்ளார்.
* 5 ஆண்டில் 63 நியமனம்
பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சிக் காலத்தில், கடந்த 2017ல் நிதி ஆயோக் பரிந்துரையின் படி, 2018ல் உயர் பதவிகளில் நேரடி நியமனம் செய்யும் நடைமுறை கொண்டு வரப்பட்டது. கடந்த 5 ஆண்டுகளில் 63 பேர் நேரடி நியமனம் மூலம் உயர் பதவிகளில் பணி அமர்த்தப்பட்டனர். அவர்களில் 57 பேர் தற்போது பல்வேறு அமைச்சகங்கள், அரசு துறைகளில் பணியாற்றி வருகின்றனர்.
* லேட்டரல் என்ட்ரி கொண்டு வந்தது ஏன்?
நவீன, எதிர்கால தொழில்நுட்பம், குறிப்பிட்ட துறைகளில் நிபுணத்துவம் பெற்ற வல்லுநர்களின் தேவை அரசு துறைகளில் ஏற்படும் போது, அதற்கு ஏற்ற ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட குடிமைப்பணி அதிகாரிகள் இல்லாவிட்டால், தற்காலிக அடிப்படையில் வெளியில் இருந்து நிபுணர்களை நியமிக்க லேட்டரல் என்ட்ரி எனும் நேரடி நியமனம் கொண்டு வரப்பட்டது. ஐஏஎஸ் அதிகாரிகள் போதுமான தகுதியை பெறும் வரையிலும் நேரடி நியமனம் மூலம் பணியமர்த்தப்பட்ட அதிகாரிகள் அரசு துறைகளில் பணி செய்வார்கள். அவர்களின் ஒப்பந்த காலம் 3 ஆண்டுகள். அதிகபட்சம் மேலும் 2 ஆண்டுகள் வரை நீட்டிக்க முடியும்.
* சமூக நீதிக்கு கிடைத்த வெற்றி முதல்வர் மு.க.ஸ்டாலின் கருத்து
முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது சமூக வலைதளப் பதிவில் கூறியிருப்பதாவது: சமூக நீதிக்கு வெற்றி. நமது இந்தியா கூட்டணியின் கடும் எதிர்ப்பிற்குப் பிறகு, இடைநுழைவு ஆட்சேர்ப்பை (லேட்டரல் என்ட்ரி ரெக்ரூட்மென்ட்) ஒன்றிய அரசு திரும்பப் பெற்றுள்ளது. ஒன்றிய பாஜ அரசு பல்வேறு வடிவங்களில் இடஒதுக்கீட்டை பலவீனப்படுத்த முயற்சி செய்யும் என்பதால், நாம் விழிப்புடன் இருக்க வேண்டும். இட ஒதுக்கீட்டுக்குத் தன்னிச்சையாக விதிக்கப்பட்டுள்ள 50 விழுக்காடு உச்சவரம்பு உடைக்கப்பட வேண்டும். மேலும், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் ஒடுக்கப்பட்டவர்களின் உரிமைகளைப் பாதுகாக்க நாடு முழுவதும் சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டியது அவசியம் என கூறியுள்ளார்.
The post ஒன்றிய அரசின் உயர் பதவிகளுக்கு தனியார் நிறுவன அதிகாரிகளை நேரடியாக நியமிக்கும் முறை ரத்து: எதிர்க்கட்சிகளின் எதிர்ப்புக்கு பணிந்தது மோடி அரசு appeared first on Dinakaran.