புதுடெல்லி: மணிப்பூரில் அமலில் உள்ள குடியரசுத் தலைவர் ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவந்து, மீண்டும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய அரசை அமைப்பது தொடர்பாக ஆலோசனை நடத்த பாஜக மேலிடம் அக்கட்சி எம்எல்ஏக்களை டெல்லிக்கு அழைத்துள்ளது. மணிப்பூரில் கடந்த 2023ம் ஆண்டு மே மாதம் தொடங்கிய இனக்கலவரம் காரணமாக சட்டம் ஒழுங்கு பாதிக்கப்பட்ட சூழலில், முதல்வர் என்.பிரேன் சிங் பதவி விலகியதைத் தொடர்ந்து கடந்த பிப்ரவரி 13ம் தேதி முதல் அங்கு குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளது. நீண்ட நாட்களாக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு இல்லாததால், மக்களின் குறைகளைத் தீர்க்கவும், முகாம்களில் தங்கியுள்ளவர்களின் நலனைப் பேணவும் முடியாமல் நிர்வாகச் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன. தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு அமைந்தால் மட்டுமே தற்போதைய மனிதாபிமான நெருக்கடிக்குத் தீர்வு காண முடியும் எனப் பல எம்எல்ஏக்கள் வலியுறுத்தி வந்தனர்.
இந்நிலையில், மாநிலத்தின் அரசியல் சூழல் குறித்தும், மீண்டும் ஆட்சியமைப்பது குறித்தும் விவாதிக்க பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா தலைமையில் நாளை (டிச. 14) டெல்லியில் மிக முக்கியமான ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்க முன்னாள் முதல்வர் என்.பிரேன் சிங் மற்றும் தனி நிர்வாகம் கோரி வரும் குகி-சோ பழங்குடியினத்தைச் சேர்ந்த 7 எம்எல்ஏக்கள் உட்பட அனைத்து பாஜக சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கும் மேலிடம் அழைப்பு விடுத்துள்ளது. குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு மணிப்பூருக்குச் சென்றுள்ள நிலையில், ‘மாநிலத்தில் நிலவும் நிர்வாகத் தேக்கத்தை முடிவுக்குக் கொண்டுவரவே இந்த அவசரக் கூட்டம் கூட்டப்பட்டுள்ளது’ என்று கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எம்எல்ஏக்கள் அனைவரும் இன்றே டெல்லி சென்றடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
