நரிக்குறவ பெண் பொய் புகார்; வியாபாரிகள் சங்கத்தினர் காவல்நிலையத்தை முற்றுகை: மாமல்லபுரத்தில் பரபரப்பு

மாமல்லபுரம்: மாமல்லபுரத்தில் நரிக்குறவ பெண் போலீசில் பொய் புகார் அளித்ததாக கூறி, விசாரணைக்கு வந்த வியாபாரிகள் சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்து காவல்நிலையத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.  மாமல்லபுரம் அடுத்த பூஞ்சேரி நரிக்குறவர் குடியிருப்பை சேர்ந்தவர் அஸ்வினி (24). இவர், சமூக வலைதளம் மூலம் பிரபலமானார். நரிக்குறவரான இவர், கடந்தாண்டு எங்கள் சமுதாயத்தை சேர்ந்தவர்கள் பிழைப்பு நடத்த கடை ஒதுக்கி தர வேண்டுமென மாவட்ட நிர்வாகத்துக்கு கோரிக்கை விடுத்திருந்தார். அதன்படி செங்கல்பட்டு கலெக்டர் ராகுல்நாத், மாமல்லபுரத்தில் 3 கடைகள் ஒதுக்கி ஆணை வழங்கினார்.

இந்த நிலையில் அஸ்வினி, ஒதுக்கி கொடுத்த கடையைவிட்டு விட்டு கடற்கரைக்கு செல்லும் குறுகலான பாதையை ஆக்கிரமித்து கடைபோட்டு வியாபாரம் செய்ததாக கூறப்படுகிறது. இதனால் அஸ்வினிக்கும், அங்குள்ள சில வியாபாரிகள் சங்கத்தை சேர்ந்தவர்களுக்கும் வாய்தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் அவர், வியாபாரிகள் சங்கத்தை சேர்ந்த பெண் மீது கடந்த 10 நாட்களுக்குமுன் மாமல்லபுரம் போலீசில் புகார் அளித்துள்ளார். இதையடுத்து நேற்று போலீசார் இரு தரப்பையும் அழைத்து விசாரித்தனர். அப்போது, விசாரணைக்கு வந்த வியாபாரிகள் சங்கத்தினர் 30க்கும் மேற்பட்டோர், நரிக்குறவ பெண் பொய் புகார் கொடுத்துள்ளதாக கூறி, காவல் நிலையத்தை முற்றுகையிட்டு எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த சம்பவத்தால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து வியாபாரிகள் சங்கத்தினர் கூறுகையில்,’நரிக்குற பெண் அஸ்வினி, வியாபாரிகள் மீது தொடர்ந்து போலீசில் பொய் புகார் அளிப்பது, வியாபாரிகளை வியாபாரம் செய்யவிடாமல் மிரட்டுவது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகிறார். எனவே, அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும். இல்லை என்றால் அடுத்த வாரம் வியாபாரிகள் சங்கம் சார்பில் 3 நாட்கள் கடைகளை அடைத்து போராட்டம் நடத்துவோம்’ என தெரிவித்துள்ளனர்.

The post நரிக்குறவ பெண் பொய் புகார்; வியாபாரிகள் சங்கத்தினர் காவல்நிலையத்தை முற்றுகை: மாமல்லபுரத்தில் பரபரப்பு appeared first on Dinakaran.

Related Stories: