தேர்தலுக்கு இன்னும் 6 நாட்களே உள்ள நிலையில் விக்கிரவாண்டியில் அனல் பறக்கும் பிரசாரம்!

விழுப்புரம்: விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்கு இன்னும் 6 நாட்களே உள்ள நிலையில் தேர்தல் பிரசாரம் சூடு பிடித்துள்ளது. திமுக, பாமக வேட்பாளர்களுக்கு ஆதரவாக கட்சி தலைவர்கள் தொகுதியில் முகாமிட்டு வாக்கு சேகரித்து வருகின்றனர். விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதி திமுக எம்எல்ஏ புகழேந்தி காலமானதை தொடர்ந்து இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு வரும் 10ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்தியா கூட்டணியில் திமுக வேட்பாளராக அன்னியூர் சிவா, தேஜ கூட்டணியில் பாமக வேட்பாளர் சி. அன்புமணி, நாம் தமிழர் கட்சி சார்பில் அபிநயா மற்றும் சுயேச்சைகள் உள்ளிட்ட 29 பேர் போட்டியிடுகின்றனர். தேர்தல் பிரசாரம் வரும் 8ம் தேதி மாலை 5 மணியுடன் முடிவடைவதால் இன்னும் பிரசாரம் செய்ய 4 நாட்களே உள்ள நிலையில் அரசியல் கட்சி தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

விக்கிரவாண்டி தொகுதியில் திமுக சார்பில் தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள அமைச்சர் பொன்முடி, திமுக கொள்கை பரப்பு செயலாளர் ஜெகத்ரட்சகன் எம்.பி, தலைமையில் தேர்தல் பணிக்குழு அமைக்கப்பட்டது. இதில் அமைச்சர்கள் கே.என். நேரு, எ.வ.வேலு, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், அர.சக்கரபாணி, தா.மோ. அன்பரசன், எஸ்.எஸ் சிவசங்கர், சி.வி கணேசன், அன்பில் மகேஷ் பொய்யாமொழி மற்றும் லட்சுமணன் எம்எல்ஏ ஆகியோர் அடங்குவர். இந்த தேர்தல் பணிக்குழுவினர் தீவிர பிரசாரம் செய்து வருகின்றனர். அமைச்சர்கள் துரைமுருகன், மா.சுப்பிரமணியன் உள்ளிட்ட திமுகவின் முக்கிய நிர்வாகிகளும் தீவிர ஓட்டு வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழக அரசின் 3 ஆண்டு கால சாதனைகளை கூறி அவர்கள் ஓட்டு சேகரித்து வருகின்றனர்.

திமுக வேட்பாளருக்கு ஆதரவாக திமுக இளைஞரணி செயலாளரும் அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் வரும் 7, 8ம் தேதிகளில் பிரசாரம் மேற்கொள்ள உள்ளார். கூட்டணி கட்சி தலைவர்களும் அன்னியூர் சிவாவுக்கு ஆதரவாக பிரசாரம் செய்து வருகின்றனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வபெருந்தகை ஆகியோர் பிரசாரம் செய்துள்ளனர். இன்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் பிரசாரம் செய்ய உள்ளார். தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பில் போட்டியிடும் பாமக வேட்பாளர் சி. அன்புமணிக்கு ஆதரவாக கட்சியின் நிறுவனர் ராமதாஸ், தலைவர் அன்புமணி, அவரது மனைவி சவுமியா அன்புமணி, ஜி.கே.மணி உள்ளிட்டவர்கள் பிரசாரம் செய்து வருகின்றனர்.

பாமக சார்பில் வாக்கு சேகரிக்கும் போது, முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் புகைப்படம் அச்சிடப்பட்ட நோட்டீஸ், பேனர்களை பாமகவினர் எடுத்து சென்று வாக்கு சேகரிக்கின்றனர். பாஜ மாநில தலைவர் அண்ணாமலை மற்றும் ஓ. பன்னீர்செல்வம், அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன், தமாகா தலைவர் ஜி.கே. வாசன் உள்ளிட்டோர் இன்று மாலை விக்கிரவாண்டியில் நடக்கும் தேர்தல் பிரசார கூட்டத்தில் பங்கேற்று பாமக வேட்பாளர் சி. அன்புமணிக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய உள்ளனர். நாம் தமிழர் வேட்பாளர் அபிநயாவுக்கு ஆதரவாக கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பிரசாரம் செய்து வருகிறார். தேர்தலுக்கு இன்னும் 6 நாட்கள், பிரசாரம் ஓய இன்னும் 4 நாட்களே இருப்பதால் தலைவர்களின் தேர்தல் பிரசாரத்தால் விக்கிரவாண்டியில் அனல் பறக்கிறது.

 

The post தேர்தலுக்கு இன்னும் 6 நாட்களே உள்ள நிலையில் விக்கிரவாண்டியில் அனல் பறக்கும் பிரசாரம்! appeared first on Dinakaran.

Related Stories: