தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளில் 6 முதல் 12ம் வகுப்பு மாணவர்கள் பங்கேற்கும் வினாடி-வினா போட்டி: வரும் 9ம் தேதி தொடக்கம்

வேலூர்: தமிழகம் முழுவதும் உள்ள அரசு பள்ளி மாணவர்களுக்கான வினாடி வினா போட்டிகள் வரும் 9ம் தேதி தொடங்கி, பிப்ரவரி மாதம் வரை 4 கட்டமாக கணினி வழியில் நடத்தப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதுதொடர்பாக ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி இயக்குனரகம் சார்பில், அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் கற்றல் திறனை மேம்படுத்தும் வகையில் மாநில மதிப்பீட்டு புலம் திட்டம் கொண்டு வரப்பட்டது. இதன்மூலம் அரசு பள்ளிகளில் 6ம் முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளின் கற்றல் திறனை அறிந்து கொள்ள வினாடி-வினா போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன்படி நடப்பு கல்வி ஆண்டில் வினாடி வினா போட்டிகள் ஜூலை முதல் பிப்ரவரி மாதம் வரை 4 கட்டங்களாக கணினி வழியில் நடைபெற உள்ளது.

அதன்படி, முதற்கட்டமாக வரும் 9ம் தேதி முதல் 18ம் தேதி வரையும், 2ம் கட்டமாக ஆகஸ்ட் 6ம் தேதி முதல் 14ம் தேதி வரையும், 3ம் கட்டமாக நவம்பர் 5ம் தேதி முதல் 15ம் தேதி வரையும், 4ம் கட்டமாக பிப்ரவரி 10ம் தேதி முதல் 14ம் தேதி வரையும் வினாடி வினா போட்டிகள் நடத்தப்பட உள்ளன. இந்த வினாடி வினாவுக்கான வினாத்தாளை அந்தந்த வகுப்பு ஆசிரியர்கள் மட்டுமே உருவாக்க வேண்டும். மேலும் மதிப்பீடு முடிந்தபின் விடைத்தாளை பதிவிறக்கம் செய்து வகுப்பில் மாணவர்களுடன் விவாதிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளன. அவற்றை பின்பற்றி போட்டிகளை சிறந்த முறையில் நடத்தி முடிக்க பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தல்களை அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இப்போட்டியில் மாநில அளவில் சிறந்து விளங்கும் மாணவர்கள் வெளிநாடுகளுக்கு கல்வி சுற்றுலா அழைத்து செல்லப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

 

The post தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளில் 6 முதல் 12ம் வகுப்பு மாணவர்கள் பங்கேற்கும் வினாடி-வினா போட்டி: வரும் 9ம் தேதி தொடக்கம் appeared first on Dinakaran.

Related Stories: