சுற்றுலா விருதுக்கு தொழில் முனைவோர் விண்ணப்பிக்கலாம்: சென்னை கலெக்டர் தகவல்

சென்னை: சுற்றுலாத்துறையுடன் தொடர்புடைய தொழில் முனைவோர் சுற்றுலா விருது பெற ஆகஸ்ட் 15ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று சென்னை கலெக்டர் அருணா தெரிவித்துள்ளார். இதுகுறித்து, சென்னை கலெக்டர் அருணா நேற்று வெளியிட்ட அறிவிப்பு:தமிழ்நாடு சுற்றுலாத்துறை, உலக சுற்றுலா தினக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக ஆண்டுதோறும் சுற்றுலா தொழில் முனைவோருக்கு தமிழ்நாடு சுற்றுலா விருதுகள் வழங்கப்படுகிறது.

இந்த விருதுகள் பல்வேறு சுற்றுலா தொழில் முனைவோர், விமான நிறுவனங்கள், ஓட்டல்கள், உணவகங்கள், சுற்றுலா வழிகாட்டிகள் மற்றும் மாநிலத்தின் சுற்றுலாவை மேம்படுத்துவதில் சாதகமாக பங்களிக்கும் பிற சுற்றுலா நிறுவனங்களுக்கு வழங்கப்படும். வெளிநாட்டினருக்கான சுற்றுலா நடத்துபவர், உள்நாட்டு சுற்றுலா நடத்துபவர், சிறந்த பயண பங்குதாரர், சிறந்த விமான பங்குதாரர், சிறந்த தங்குமிடம், சிறந்த உணவகம், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழக விடுதி, சிறந்த முக்கிய சுற்றுலா நடத்துனர்கள், சிறந்த சாகச சுற்றுலா மற்றும் முகாம் தள நடத்துனர்கள், சிறந்த கூட்டங்கள், ஊக்கத் தொகைகள், மாநாடு மற்றும் கண்காட்சி அமைப்பாளர்,

சிறந்த சமூக ஊடக செல்வாக்கு செலுத்துபவர், சிறந்த சுற்றுலா வழிகாட்டி, தமிழ்நாட்டின் சிறந்த விளம்பரம், சிறந்த சுற்றுலா விளம்பர பொருள், சுற்றுலா மற்றும் விருந்தோம்பலுக்கு சிறந்த கல்வி நிறுவனம், மாவட்டத்திலுள்ள அனைத்து சுற்றுலா தொழில் முனைவோரும் உரிய பிரிவுகளில் தமிழ்நாடு சுற்றுலா விருதுகளுக்கு விண்ணப்பிக்கலாம். இந்த விருதுகள் உலக சுற்றுலா தினமான செப்டம்பர் 27ம்தேதி சென்னையில் வழங்கப்படும். அதற்கான இடம் பின்னர் அறிவிக்கப்படும். விண்ணப்பங்களை www.tntourismawards.com என்ற இணையத்தளத்தில் பதிவிறக்கம் செய்ய வேண்டும். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வரும் ஆகஸ்ட் 15ம் தேதி கடைசி நாளாகும் இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post சுற்றுலா விருதுக்கு தொழில் முனைவோர் விண்ணப்பிக்கலாம்: சென்னை கலெக்டர் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: