திருப்பதி மலைப்பாதையில் சுற்றித்திரிந்த 5வது சிறுத்தை வனத்துறை வைத்திருந்த கூண்டில் சிக்கியது..!!


ஆந்திரா: திருப்பதி மலைப்பாதையில் பக்தர்களை அச்சுறுத்தும் வகையில் சுற்றி திரிந்த 5வது சிறுத்தையும் வனத்துறை வைத்திருந்த கூண்டில் சிக்கியது. திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு பாதையாத்திரையாக செல்லும் அளிவிரி நடைபாதையில் சிறுத்தைகள் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. கடந்த ஜூலை 12ம் தேதி 4வயது சிறுவன் கௌஷீகை கவ்வி சென்ற சிறுத்தை ஒன்று பக்தர்கள் துரத்தியதால் வனப்பகுதியில் சிறுவனை விட்டு சென்றது.

இதே போல் ஆகஸ்ட் 12ம் தேதி லட்சிதா என்ற 6வயது சிறுமியை மற்றொரு சிறுத்தை கவ்வி சென்ற நிலையில் மறுநாள் இறந்த நிலையில் சிறுமியின் சடலம் வனப்பகுதியில் மீட்கப்பட்டது. இதனால் பக்தர்களை அச்சுறுத்தும் சிறுத்தையை பிடிக்க அளிவிரி நடைபாதையில் ஆங்காங்கே வனத்துறை கூண்டு வைத்தது. இதன் மூலம் அடுத்தடுத்து கூண்டில் சிக்கிய நன்கு சிறுத்தைகளும் திருப்பதி ஸ்ரீ வெங்கடேஸ்வரா வன உயிரியல் பூங்காவில் விடப்பட்டது.

இந்த நிலையில் நடைபாதையில் மேலும் ஒரு சிறுத்தை நடமாடுவது அண்மையில் சிசிடிவி கேமராவில் பதிவானது. இதனை அடுத்து ஏழாவது மைல் அருகே வனத்துறை வைத்த கூண்டில் அதிகாலையில் 5வது சிறுத்தையம் சிக்கியது. 5வது சிறுத்தையும் சிக்கியதால் திருப்பதிக்கு நடைபாதையாக செல்லும் பக்தர்கள் நிம்மதி அடைந்துள்ளனர். இருப்பினும் காலை 6 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மட்டுமே 12 வயதுக்குட்பட்ட சிறுவர், சிறுமிகளை பாதையாத்திரையாக அழைத்து செல்ல கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. மாலை 6 மணிக்கு பிறகு மலை பாதை வழியாக இருசக்கர வாகனங்களில் பக்தர்கள் செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

The post திருப்பதி மலைப்பாதையில் சுற்றித்திரிந்த 5வது சிறுத்தை வனத்துறை வைத்திருந்த கூண்டில் சிக்கியது..!! appeared first on Dinakaran.

Related Stories: