திருப்பதியில் ஒரே நாளில் 95,080 பக்தர்கள் தரிசனம்: 3 கி.மீ. வரிசையில் காத்திருந்தனர்

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். இன்று கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்படும் நிலையில், வார விடுமுறையான நேற்று முன்தினம் காலை சுப்ரபாதம் முதல் இரவு 12.30 மணி வரை ஒரே நாளில் 95 ஆயிரத்து 80 பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

தொடர்ந்து 2வது நாளாக நேற்றும் வைகுண்டம் காத்திருப்பு அறைகள் நிரம்பி பக்தர்கள், 3 கிலோ மீட்டர் வரை நீண்ட வரிசையில் காத்திருந்து சுமார் 20 மணி நேரத்துக்கு பிறகு சுவாமி தரிசனம் செய்தனர். இன்று முதல் திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஏழுமலையான் கோயில் மீது விமானம் பறந்ததால் பரபரப்பு
திருப்பதி ஏழுமலையான் கோயில் கருவறை உள்ள ஆனந்த நிலையம் மீது விமானங்கள் செல்வது ஆகம சாஸ்திர விதிகளுக்கு எதிரானது. மேலும் பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதாகவும், இதனால் திருமலை வான்வழியில் விமானங்கள் பறக்க தடை விதிக்க வேண்டும் என மத்திய அரசை தேவஸ்தானம் பலமுறை கேட்டுள்ளது. இந்நிலையில், திருப்பதி ஏழுமலையான் கோயில் வான்வழியில் நேற்று காலை ஒரு விமானம் தாழ்வாக பறந்தது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பாதுகாப்பை கருத்தில் கொண்டு திருமலை வான்வழியில் விமானம் பறக்க தடைசெய்ய வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருப்பதி மலைப்பாதையில் பதுங்கிய சிறுத்தை
திருப்பதி அடுத்த சந்திரகிரி வாரி மெட்டு மலைப்பாதையில் நேற்று காலை 500வது படி அருகே புதரில் சிறுத்தை ஒன்று பதுங்கி இருப்பதை கண்டு பக்தர்கள் அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து உடனடியாக தேவஸ்தான பாதுகாப்பு அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். அங்கு வந்த வனத்துறை மற்றும் விஜிலென்ஸ் அதிகாரிகள் சிறுத்தையை சைரன் ஒலி மூலம் விரட்டினர். பின்னர் வாரி மெட்டுவின் தொடக்கத்தில் உள்ள சோதனைச் சாவடியில் இருந்து பக்தர்களை அதிகாரிகள் கூட்டமாக செல்ல அனுமதித்தனர்.

The post திருப்பதியில் ஒரே நாளில் 95,080 பக்தர்கள் தரிசனம்: 3 கி.மீ. வரிசையில் காத்திருந்தனர் appeared first on Dinakaran.

Related Stories: