கந்தனுக்கு அரோகரா.. வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா: திருச்செந்தூர் முருகன் வழிபாடு முறைகள் மற்றும் பலன்கள்!!

“திருச்செந்தூர்” கோவிலில் வழிபடுவதால் என்னென்ன நன்மைகள் ஏற்படுகின்றன என்பதை இங்கு காண்போம். அஞ்ஞானத்தில் இருப்பவர்களுக்கு நிரந்தர உண்மையை போதித்து மெய்ஞ்ஞான பாதைக்கு வழிகாட்டுபவர் தான் “குரு”. தந்தைக்கு ஞானத்தை போதித்து “சிவகுருநாதன்” என்று பெயர் பெற்ற முருகப்பெருமானும், ஒரு மனிதனுக்கு மெய்ஞ்ஞானத்தையும், இன்ன பிற நன்மைகளையும் அளிக்கும் நவகிரகங்களில் ஒருவராகிய “வியாழன்” அல்லது “குருபகவானும்” ஒரே அம்சமாக இருக்கும் “திருச்செந்தூர்” கோவிலில் வழிபடுவதால் என்னென்ன நன்மைகள் ஏற்படுகின்றன என்பதை இங்கு காண்போம்.

“சூரபத்மன்” எனும் அரக்கனை அழிப்பதற்காக சிவ பெருமானால் தோற்றுவிக்கப்பட்டவர் “செந்திலாண்டவராகிய” முருகபெருமான். சூரபத்மனையும், அவனது அராஜக ஆட்சியையும் அகற்ற அவனுடன் போர்புரிய தொடங்கினார் முருகன். இப்போரில் முருகப்பெருமானுக்கு பல ஆலோசனைகளை வழங்கியவர் “தேவர்களின் குருவான” “குரு பகவான்”.

போரின் இறுதியில் சூரபத்மனை வதம் புரிந்த முருகன், இப்போரில் தன்னுடைய வெற்றிக்கு சிறந்த ஆலோசனைகளை வழங்கிய குரு பகவானை கவுரவிக்கும் விதமாக, இந்த திருச்செந்தூர் கோவிலில் வீற்றிருக்கும் தனக்கு நிகரான வழிபாட்டு மரியாதை குரு பகவானுக்கும் தரப்படும் என அருள்புரிந்தார். எனவே இத்தல முருகனே குரு பகவானாக கருதி வழிபடப்படுகிறார்.

ஜோதிடத்தில் குரு பகவான் மட்டுமே முழு சுபகிரகம். ஜாதகத்தில் குருவின் கோட்சாரம் சரியில்லாதவர்கள், குரு கிரக பெயர்ச்சியால் பாதகமான பலன்களை பெறுபவர்கள், இந்த திருச்செந்தூர் கோவில் கடற்கரையில் வியாழக் கிழமையன்று காலையில் நீராடி, பின்பு அங்கிருக்கிருக்கும் நாழி கிணற்று தீர்த்த நீரிலும் நீராடி, கோவிலுக்குச் சென்று செந்திலாண்டவருக்கு அர்ச்சனை செய்து வழிபட குரு பகவானால் நன்மைகள் ஏற்படும். குரு கிரக பெயர்ச்சியால் கெடுதலான பலன் ஏற்பட இருந்தவர்களுக்கும் அந்த பாதிப்பு ஏற்படாமல் காக்கும்.

புத்திரப்பேறு, உயர்பதவிகள், பொன் சேர்க்கை போன்றவற்றிற்கும் குரு பகவானே காரணமாகிறார். எனவே முன்பு கூறப்பட்டது போலவே இக்கோவிலின் கடல் மற்றும் தீர்த்தத்தில் நீராடி, பின்பு இறைவனுக்கு அர்ச்சனை செய்து வழிபட்டு இக்கோவிலில் இருந்தவாறே முருகன் மற்றும் குரு பகவானுக்குரிய மந்திரத்தை கூறி வழிபட்டு, கோவிலை 9 முறை வலம் வந்து வழிபட வேண்டும்.

இதனால் ஒருவர் எத்துறை சார்ந்த பணிகளில் ஈடுபட்டிருந்தாலும், அதில் உயர்ந்த நிலைக்கு வருவார்கள். குறிப்பாக அரசியலில் இருப்பவர்கள் இந்த வழிபாட்டை செய்ய அவர்களுக்கு நல்ல யோகம் உண்டாகும். நீண்ட நாட்களாக குழந்தைகள் இல்லாமல் தவித்தவர்களுக்கு குழந்தைகள் பிறக்கும். பொன் ஆபரணங்களின் சேர்க்கையும் ஏற்படும்.

The post கந்தனுக்கு அரோகரா.. வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா: திருச்செந்தூர் முருகன் வழிபாடு முறைகள் மற்றும் பலன்கள்!! appeared first on Dinakaran.

Related Stories: