குண்டர் சட்டத்தை எதிர்க்கும் மனுவை நிராகரித்த உத்தரவை இமெயிலில் அனுப்ப வேண்டும்: ஐகோர்ட் கிளை உத்தரவு

மதுரை: குண்டர் சட்டத்தை எதிர்க்கும் மனுவை நிராகரித்த உத்தரவை, இமெயிலில் அனுப்ப வேண்டுமென ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. பாளையங்கோட்டையைச் சேர்ந்த ஒருவர் மீதான குண்டர் சட்ட நடவடிக்கையை ரத்து செய்யக் கோரி, ஐகோர்ட் மதுரை கிளையில் மனு செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி சி.வி.கார்த்திகேயன், ஜெ.சத்யநாராயண பிரசாத் ஆகியோர் பிறப்பித்த உத்தரவு:

குண்டர் சட்டத்தை எதிர்க்கும் கருணை மனுக்களை, அரசு நிராகரிப்பது தொடர்பான உத்தரவு சம்பந்தப்பட்டோருக்கு தாமதமாகவே கிடைக்கிறது. இதை சாதகமாக்கி குண்டர் சட்ட நடவடிக்கையை ரத்து செய்ய வேண்டியுள்ளது. இதன்படி இந்த மனு ஏற்கப்படுகிறது. மனுதாரரை உடனடியாக விடுவிக்க வேண்டும். இனிவரும் காலங்களில் கருணை மனுக்களை நிராகரிக்கும் உத்தரவை அதே நாளில் சம்பந்தப்பட்ட சிறை அலுவலருக்கு இமெயில் மூலம் அனுப்ப வேண்டும்.

அனுப்பிய தகவலையும் தெரிவிக்க வேண்டும். இமெயில் மூலம் வந்த உத்தரவை சிறை அலுவலர் சான்றொப்பமிட்டு சம்பந்தப்பட்டவருக்கு வழங்கி கையெழுத்து பெற வேண்டும். நிராகரித்த உத்தரவின் உண்மை நகலை பதிவு தபாலில் அனுப்பலாம். இப்படி செய்யும்போது இனி நிராகரித்த உத்தரவு தாமதமாக கிடைத்தது என யாரும் ரத்து செய்ய கோர முடியாது. இதை உடனடியாக சம்பந்தப்பட்டவர்கள் பின்பற்ற வேண்டும். இவ்வாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

The post குண்டர் சட்டத்தை எதிர்க்கும் மனுவை நிராகரித்த உத்தரவை இமெயிலில் அனுப்ப வேண்டும்: ஐகோர்ட் கிளை உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: