தொண்டை கரகரப்பு நீங்க…

நன்றி குங்குமம் டாக்டர்

தொண்டை கரகரப்பு, சளி, தொண்டைக்கட்டு நீங்க மா இலையைச் சுட்டு தேனில் குழைத்து சாப்பிட வேண்டும்.

*பொடித்த பனங்கற்கண்டு, அதிமதுரப்பொடி, தேன் மூன்றையும் சூடான பாலில் கலந்து பருகினால், தொண்டைக்கட்டுக்கு இதமாக இருக்கும். குரல்வளம் பெருகும்.

*நெல்லிக்காய்ச் சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டு வர தொடர் விக்கலையும் விரட்டிவிடலாம்.

*இஞ்சிச்சாறு, துளசிச்சாறு, தேன் மூன்றையும் சம அளவில் கலந்து குடித்தால் சளி, இருமல் மற்றும் நெஞ்சில் கபம் சேருவது இருக்காது.

*சுக்கு, மிளகு, திப்பிலியை வறுத்துப் பொடித்து தேனில் கலந்து சாப்பிட, தொண்டை கரகரப்பு குணமாகும்.

*ஒரு நாளைக்கு 4 வேளை உப்புத் தண்ணீரால் வாய் கொப்பளித்து துப்பினால் தொற்று சரியாகும். வெதுவெதுப்பான நீரில் உப்பு கலந்து தொண்டையில் படும்படி கொப்பளித்து துப்ப வேண்டும்.

*வெங்காயத்தை சிறிய துண்டுகளாக நறுக்கி ஒரு பாத்திரத்தில் போட்டு சிறிது தேன் ஊற்றி, மூடி நன்றாக ஊறும்வரை வைத்து சாப்பிட்டு வர தொண்டைப் புண்கள் குறையும்.

*மிளகு, சீரகம் சேர்த்து ரசம் வைத்து சாப்பிட்டால் இருமல், காய்ச்சல் குணமாகும். இஞ்சியுடன் தேன், லவங்கப்பட்டை, துளசி மூன்றையும் சேர்த்து கொதிக்க வைத்துக் குடித்தால் தொண்டை கரகரப்பு நீங்கும்.

*தண்ணீரில் நான்கு துளசி இலையை தினமும் போட்டுக் குடிக்கத் தொடர் இருமல் நீங்கும்.

*சுடுதண்ணீரில் துளசி, கற்பூரவல்லி இலை, நொச்சி இலை என ஏதாவது ஒன்றைப் போட்டு ஆவி பிடிக்க சளி, தலைபாரம், தலைவலி குணமாகும்.

*விளாம் மரப்பட்டையைப் பொடித்து தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து அந்த கஷாயத்தை வடிகட்டிக் குடிக்க வறட்டு இருமல், மூச்சு இரைப்பு, வாய்க் கசப்பு நீங்கும்.

*புதினாவில் மெந்தோல் சத்து அதிகமாக இருப்பதால், கட்டியிருக்கும் சளியை கரைத்து வெளியே தள்ளும் தன்மை இதற்கு உண்டு. இதனால் தொண்டை கரகரப்பு சரியாகும்.

*வெந்தயம் தொண்டைத் தொற்றுக்கு சிறந்த நிவாரணியாகும். வெந்தயத்தை ஊறவைத்து மென்று சாப்பிடலாம். உணவுகளில் சேர்த்து சாப்பிடலாம் அல்லது நீரில் சேர்த்து கொதிக்க வைத்து வெதுவெதுப்பான சூட்டில் அருந்த தொண்டைக்கு இதமாக இருக்கும்.

தொகுப்பு: மகாலட்சுமி சுப்பிரமணியன்

The post தொண்டை கரகரப்பு நீங்க… appeared first on Dinakaran.

Related Stories: