சல்மான் கான்-ஃபிட்னெஸ் சீக்ரெட்ஸ்!

நன்றி குங்குமம் டாக்டர்

சல்மான்கான் பாலிவுட்டில் செல்லமாக சல்லு பாய் என அழைக்கப்படுகிறார். அன்று முதல் இன்று வரை தனது தேர்ந்த நடிப்பால் தனக்கென ஒரு ரசிகர் வட்டத்தை உருவாக்கிக் கொண்டு ஹிந்தி திரையுலகில் முன்னணி நட்சத்திரமாக திகழ்பவர். தற்போது, விஷ்ணுவர்தன் இயக்கத்தில் தி புல், ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிக்கந்தர், பிரபு தேவா இயக்கத்தில் தபாங் 2, இது தவிர கிக் 2, நோ என்டரி 2, இன்ஷா அல்லா, பவன் புத்ரா பைஜன் ஆகிய படப்பிடிப்புகளில் பிசியாக இருக்கும் சல்மான், தனது உடலை கட்டுக்கோப்பாக பேணிக்காப்பதிலும் தவறுவதில்லை. இதனால், பல இளம் நடிகர்களுக்கு இவர் முன்மாதிரியாக இருந்து வருகிறார். சல்மானின் ஃபிட்னெஸ் ரகசியங்களைப் பற்றி தெரிந்து கொள்வோம்.
ஒர்க்கவுட்ஸ்:

கடந்த 25 வருடங்களாக நான் தினமும் இரண்டு மணிநேரத்தில் இருந்து மூன்று மணி நேரம் வரை உடற்பயிற்சி செய்வதை விடாமல் பின்பற்றி வருகிறேன். அதில் ஒருமணிநேரம் கார்டியோ பயிற்சியும் ஒருமணிநேரம் புஷ் அப்ஸ் அல்லது ஷிட் அப்ஸ் பயிற்சியும் மேற்கொள்வேன். குறைந்தது ஆயிரம் புஷ் அப்ஸ் அல்லது 2000 ஷிட் அப்ஸ் எடுப்பேன். இது தவிர கால்கள், தோள், முதுகு போன்றவைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் பயிற்சிகளான பைசப்ஸ், ட்ரைசப்ஸ் போன்றவற்றை மேற்கொள்வேன்.

மேலும் நேரம் கிடைக்கும் போதெல்லாம் சைக்கிளிங் செய்வதையும் வழக்கமாக வைத்திருக்கிறேன். அதாவது பாந்த்ரா முதல் பன்வெல் வரை. 50 கி.மீ தூரம் சைக்கிளில் சென்று வருவேன். சில நேரங்களில் நாங்கள் வசித்து வரும் பகுதியிலேயே சாலைகளிலே சைக்கிளிங் செய்வேன். சைக்கிளிங் செய்வது உடல் தசைகளை மிக உறுதியாக்கும். இது தவிர, எனது ஃபிட்னஸ் பயிற்சியாளர் கூறும் பயிற்சிகளையும், டயட்டையும் ஒருபோதும் மீறாமல் கடைபிடித்து வருகிறேன்.

அதுபோன்று, வாரத்தில் ஆறு நாட்கள் மட்டுமே நான் ஜிம் சென்று பயிற்சிகளை மேற்கொள்கிறேன். ஞாயிற்றுக்கிழமை ஒருநாள் ஜிம்முக்கு செல்வதை தவிர்த்துவிட்டு முழுக்க முழுக்க ரெஸ்ட் எடுத்துக் கொள்வேன். அதுபோன்று முழு உடலுக்குமான பயிற்சிகள் அனைத்தையும் தினமும் செய்வதில்லை. ஒருநாள் கைகளுக்கான பயிற்சி என்றால் மறுநாள் கால்களுக்கு வலு சேர்க்கும் பயிற்சிகள் என பிரித்துக் கொள்வேன். இதனால் அதிகமாக உடலை வருத்திக் கொள்வது போல் இல்லாமல் ரிலாக்ஸாக பயிற்சிகளை மேற்கொள்ள முடிகிறது.

டயட்:

தினமும் இரண்டிலிருந்து மூன்று மணி நேரம் வரை உடற்பயிற்சி செய்ய நிறைய உடற்சக்தி தேவைப்படும். இதனால், எனது டயட்டிலும் அதிகம் கவனம் செலுத்தி வருகிறேன். உடலுக்கு தேவையான எனர்ஜி கிடைப்பதற்காக அதிகம் புரதச்சத்து நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்வேன். அதில், முட்டையின் வெள்ளைக் கரு, மீன் உணவுகள், ரெட் மீட் என்று சொல்லக் கூடிய இறைச்சி வகைகள், பால் போன்றவை எடுத்துக் கொள்வேன். இது தவிர, முருங்கைக் கீரை சூப் அல்லது முருங்கைக் கீரைப் பொடியை உணவில் தினசரி சேர்த்துக் கொள்கிறேன். முருங்கைக் கீரையில் ஏராளமான சத்துக்கள் அடங்கியிருக்கிறது.

இரும்புச்சத்தும் அதிகளவில் காணப்படுகிறது. இது உடலுக்கு வலு சேர்க்கிறது. இது தவிர எனக்கு மிகவும் பிடித்த உணவுகள் என்றால் சிக்கன், முட்டை, பிரியாணி ஆகியவை மிகவும் பிடிக்கும். நான் விரும்பி சாப்பிடும் உணவுகளில் இவை முக்கியமானவை. மேலும், ரிலாக்ஸாக இருக்க தினமும் கிரீன் டீ பருகுவேன். உடலை நீரேற்றமாக வைத்துக் கொள்ள அவ்வப்போது தண்ணீர் நிறைய குடிப்பேன். அதுபோன்று துரித உணவுகள் மற்றும் சர்க்கரை சேர்த்த உணவுகளை முற்றிலுமாக தவிர்த்து விடுவேன். மேலும், உடல்நலத்தின் காரணத்திற்காக ஆரம்பத்தில் இருந்த புகை மற்றும் மதுப்பழக்கம் போன்றவற்றை முடிந்தளவு தவிர்த்து விடுகிறேன்.

தொகுப்பு: ஸ்ரீதேவிகுமரேசன்.

The post சல்மான் கான்-ஃபிட்னெஸ் சீக்ரெட்ஸ்! appeared first on Dinakaran.

Related Stories: