கர்ப்பிணிகளுக்கு ஆரோக்கிய வாழ்க்கையை அளிக்கும் யோகாசனம்!

நன்றி குங்குமம் டாக்டர்

5000 ஆண்டுகளுக்கு முன் இந்தியாவில் தோன்றிய உடற்பயிற்சி தியான முறைதான் யோகாசனம். இது உடல் மற்றும் மனதினை ஒருநிலைப்படுத்த உதவக்கூடிய உடற்பயிற்சி நிலை. நம் உடலினை இயங்க வைக்கும் தசை, எலும்பு போன்றவை சீராக இயங்க யோகாசனம் மிகவும் உதவி செய்யும். ரத்த ஓட்டம், சுவாசத்தை சீர்படுத்தவும் தனிப்பட்ட யோகாசனங்கள் உள்ளன. அதன் வரிசையில் கர்ப்ப காலத்தில் செய்யக்கூடிய ஆசனங்களையும் இப்போது கர்ப்பிணிகளுக்கு மருத்துவர்கள் பரிந்துரை செய்து வருகிறார்கள்.

இதன் மூலம் குழந்தை சுகப்பிரசவத்தில் பிறக்க வாய்ப்புகள் அதிகம். மேலும் பிரசவ காலத்தில் ஏற்படும் முதுகு, கழுத்து மற்றும் இடுப்பு வலிகளை குறைக்கவும், கைகால் வீக்கம், தசைப்பிடிப்புகள் போன்ற பிரச்னைகளுக்கும் நல்ல தீர்வாக அமையும். கர்ப்ப காலத்தில் யோகாசன பயிற்சி எடுப்பதன் மூலம் உடல் எடை சீராக இருக்க உதவுகிறது. மேலும் குழந்தைக்கும் அம்மாவிற்குமான நெருக்கம் அதிகரிக்கிறது. இவை நாம் சாதாரணமாக செய்யக்கூடிய யோகாசன பயிற்சிகள் போல் இல்லாமல் மாறுபடும் என்பதால் அதற்கு முறையாக பயிற்சியாளரின் ஆலோசனை பெற வேண்டும். அப்படிப்பட்ட ஆலோசனைகளை வழங்கி வருகிறார் புவனா செல்வராஜ்.

‘‘சுகப்பிரசவத்திற்கு மட்டுமில்லாமல், குழந்தை பிறந்த பிறகும் அதற்கான பாதிப்பில் இருந்து விடுபட யோகாசனங்கள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்’’ என்று பேசத் துவங்கினார் புவனா. ‘‘பொதுவாகவே யோகாசன பயிற்சிகளை நாம் முறையாக ஒரு பயிற்சியாளர் மூலமாகத்தான் கற்றுக் கொள்ள வேண்டும். தற்போது சமூக வலைத்தளங்களில் பலர் அவர்கள் செய்யும் ஆசனங்கள் குறித்து பதிவினை வெளியிடுகிறார்கள். அவர்கள் ஏற்கனவே முறையாக பயின்று அதன் வீடியோவினை வெளியிடுவார்கள்.

அதைப் பார்த்து நாம் செய்தால் தேவையற்ற தசைப்பிடிப்புகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. அதனால் முதலில் யோகாசனம் செய்யும் போது, அவர்கள் அதற்கான பயிற்சினை முறையாக பயிற்சியாளர் கொண்டு எடுப்பது அவசியம். குறிப்பாக கர்ப்பிணிகள் யூடியூப், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளங்களில் உள்ள வீடியோ மூலம் பயிற்சியாளர் இல்லாமல் செய்வது மிகவும் தவறு.

முன்பு இது போன்ற யோகா, தியான முறைகளை கற்றுக் கொள்ள குருகுல முறை இருந்தது. ஆனால் இன்று இதற்கான பயிற்சி மையங்கள் உள்ளன. ஆன்லைன் மூலமாகவும் பயிற்சி அளிக்கிறார்கள். அதே போல் கர்ப்பிணி பெண்களுக்கு வீட்டில் உள்ள பெரியவர்கள் கருத்தரித்த காலத்தில் முறையான அறிவுரைகளை சொல்லி அவர்களை வழிநடத்துவார்கள். ஆனால் இப்போது பெரும்பாலானவர்கள் வேலை காரணமாக வெளிநாட்டில் வசிக்கிறார்கள் அல்லது தனியாக இருக்கிறார்கள்.

அப்படி உள்ளவர்களுக்கு இந்த யோகாசன பயிற்சி மிகவும் பயனுள்ளதாக அமையும். அப்படிப்பட்ட பெண்கள்தான் பெரும்பாலும் என்னிடம் பயிற்சியில் ஈடுபடுகிறார்கள். கர்ப்பிணிகள் ெபாறுத்தவரை அவர்கள் இந்தப் பயிற்சியினை மேற்கொள்ளலாம் என்று தங்களின் மருத்துவரிடம் ஆலோசனை பெற்ற பிறகுதான் பயிற்சியினை மேற்கொள்ள வேண்டும். மேலும் இந்தப் பயிற்சி முறைகள் ஒரு பெண்ணின் உடல் அமைப்புக்கு ஏற்ப அவர்களுக்கு சுகப்பிரசவம் ஏற்படுவதற்காக முறையாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஒரு பெண் கருவுற்றதும், அவர்களை நாம் எந்த வேலையும் செய்ய அனுமதிப்பதில்லை. அவர்கள் விரும்பும் உணவுகளை வாங்கி கொடுக்கிறோம். இதனால் அவர்களின் உணவு முறை, பழக்க வழக்கங்கள் எல்லாம் மாறுகிறது. குறிப்பாக உடற்பயிற்சி செய்யாத காரணத்தால் பிரசவத்தின் போது அறுவை சிகிச்சை மேற்கொள்ளும் நிலை ஏற்படுகிறது. மேலும் அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பிறக்கும் போது, அவர்களின் உடல் அமைப்பில் பல மாற்றங்களை சந்திக்கிறார்கள்.

குறிப்பாக ‘மம்மிபவுச்’ ஏற்படுகிறது. அதாவது, வயிறு பகுதி சுருங்காமல் தொப்பை போன்ற வடிவம் பெறுகிறது. மேலும் முதுகு வலி போன்ற பிரச்னைகளையும் அவர்கள் பிரசவத்திற்குப் பிறகு சந்திக்கிறார்கள். இதில் இருந்து விடுபட வேண்டும் என்ற நோக்கத்தில்தான் நான் இந்த யோகாசன பயிற்சி முறைகளை அவர்களுக்கு சொல்லிக் கொடுக்க ஆரம்பித்தேன்’’ என்றவர், யோகாசன பயிற்சி முறைகள் குறித்து விவரித்தார்.

‘‘நான் கருத்தரித்த போது, யோகாசன பயிற்சி எடுத்துக் கொண்டேன். விளைவு சுகப்பிரசவம். மேலும் பிரசவத்திற்குப் பிறகு ஆரோக்கிய மனநிலையை கொடுத்தது. அதனால் நான் இந்தப் பயிற்சியினை முறையாக கற்றுக் கொண்டேன். தொடர்ந்து நான் பெற்ற பலனை மற்றவர்கள் பெற வேண்டும் என்று விரும்பினேன். என் தோழிகளுக்கு கற்றுக்கொடுத்தேன். அதுவே இப்ேபாது என்னுடைய முழு நேர வேலையாக மாறிவிட்டது. பெண்களின் பிரசவ காலத்தை 3 டிரைமிஸ்டர் என்று மூன்றாகப் பிரிக்கலாம். கர்ப்பம் உறுதி செய்யப்பட்ட பிறகு முதல் டிரைமிஸ்டர் தொடங்குகிறது. அந்த கால கட்டத்தில் வாந்தி, மயக்கம் காரணமாக அவர்களுக்கு உடலில் சத்துக் குறைபாடு ஏற்படும்.

அதற்கு மருத்துவர்கள் சொல்லும் அறிவுரைகளை பின்பற்றுவது அவசியம். இவர்கள் இந்த காலக்கட்டத்தில் மூச்சுப்பயிற்சி, தடா ஆசனம், விருச்சிகாசனம், வஜ்ராசனம், ரிலாக்சேஷன் போன்ற எளிய ஆசனங்களை செய்யலாம். இரண்டாவது டிரைமிஸ்டரின் போது பக்தகோணாசனம், திரிகோண ஆசனம், சேதுபந்தாசனம், மாலாசனம் ஆகிய ஆசனங்களை செய்யவேண்டும். கடைசி டிரைமிஸ்டர் வரும்போது குழந்தையை பெற்றெடுக்கும் கட்டத்திற்கு வந்துவிடுவார்கள்.

அந்த சமயத்தில் ஸ்குவாட், சக்கிச்சலாசனம், ஜானுசிரசாசனம், காளியாசனம் போன்றவை செய்யலாம். மேலும் குழந்தை பேற்றை எளிதாக்கும் birth ballலினை பயன்படுத்தி சில பயிற்சிகளை செய்யலாம். முடிந்த அளவு கீழே உட்கார்ந்து எழுந்திரிக்க வேண்டும். மாடிப்படி ஏறி இறங்க வேண்டும். பலர் வீட்டு வேலை செய்தால் போதும். எதற்கு இது போன்ற பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்று கேட்பார்கள்.

நாம் இன்று என்ன வேலை செய்கிறோம். துணி துவைக்க, வீட்டை சுத்தம் செய்ய என அனைத்திற்கும் இயந்திரங்கள் உள்ளது. அதனால் இது போன்ற பயிற்சிகள் செய்வதால், வலியில்லா பிரசவத்திற்கு வழிவகுக்கும். எல்லோருடைய உடல்நிலையும் மனநிலையும் ஒரே மாதிரி இருக்காது. அதனால் பயிற்சியின் போது, உடலில் சின்ன அசவுகரியம் ஏற்பட்டாலும் உடனடியாக பயிற்சியாளரிடம் ஆலோசனை பெறுவது அவசியம். மேலும் அவரவரின் மகப்பேறு மருத்துவரின் ஆலோசனைகளையும் பின்பற்ற வேண்டும்.

என்னுடைய பயிற்சி மையத்தில் கர்ப்பிணிகளுக்கு மட்டுமில்லை அவர்களின் கணவருக்கும் சேர்த்து பயிற்சி அளிக்கிறேன். இந்த ஒன்பது மாதம் அவர்களுக்குள் ஏற்படும் மாற்றங்களை புரிந்து கொண்டு அதற்கு ஏற்ப கணவன்மார்கள் தங்களின் மனைவிக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என்பதற்காகவே இந்தப் பயிற்சி. உதாரணத்திற்கு சில சமயம் பெண்களுக்கு கை, கால்களில் வலி ஏற்படும். அந்த சமயம் மனைவியின் கை, கால்களை பிடித்துவிடும் போது அவர்களுக்கு மசாஜ் செய்வது போல் ஆறுதலாக இருக்கும். சுகப்பிரசவம் ஏற்படவும் வாய்ப்புள்ளது. இந்தப் பயிற்சிகளை மேலும் விரிவுப்படுத்தி, பல கர்ப்பிணிகளுக்கு சுகப்பிரசவம் ஏற்படுத்தி, ஆரோக்கிய வாழ்க்கையை கொடுக்க வேண்டும் என்பதுதான் என் நோக்கம்’’ என்றார்

தொகுப்பு: புவனா.

 

The post கர்ப்பிணிகளுக்கு ஆரோக்கிய வாழ்க்கையை அளிக்கும் யோகாசனம்! appeared first on Dinakaran.

Related Stories: