பலமாகும் பழங்கள்…

நன்றி குங்குமம் டாக்டர்

ஃப்ரூட்டேரியன் டயட்!

‘பழங்களை மட்டும் சாப்பிட்டு ஒருவர் உயிர்வாழ முடியுமா?’ என்று கேட்டால் ஆம் என்கிறார்கள், ஃப்ரூட்டேரியன் டயட்காரர்கள். காந்தியடியகள் சில காலம் ஃப்ரூட்டேரியன் டயட்டைப் பின்பற்றி இருக்கிறார். ஃப்ரூட்டேரியன் டயட் பல நூற்றாண்டுகள் பழமையானது. டாவின்சி, ஸ்டீவ் ஜாப்ஸ் உட்பட எண்ணற்ற பிரபலங்கள் இதைப் பின்பற்றி இருக்கிறார்கள்.

ஃப்ரூட்டேரியன் டயட்

ஃப்ரூட்டேரியன் டயட்டில் பலவகை உள்ளன. இந்த டயட்டை வீகன் டயட்டின் ஒரு அங்கம் என்று சொல்பவர்களும் உள்ளனர். 100 சதவிகிதம் பழங்கள் மட்டுமே சாப்பிடுபவர்கள், பழங்களுடன் காய்கறிகள் மட்டும் சேர்த்துக்கொள்பவர்கள், பருப்புவகைகள், நட்ஸ் சேர்த்துக்கொள்பவர்கள் பழங்களையும் நட்ஸ்களையும் மட்டும் சாப்பிடுபவர்கள் என ஃப்ரூட்டேரியன் டயட்டைப் பின்பற்றுபவர்கள் பலவகையினராக உள்ளனர். பொதுவாக, அனைத்துவகையான பழங்கள், நட்ஸ்கள் மட்டும் சாப்பிடுவது ஃப்ரூட்டேரியன் டயட் என்று சொல்லலாம். கார்போஹைட்ரேட், கொழுப்புச்சத்து, புரதச்சத்தை நீக்க வேண்டும் என்பது ஃப்ரூட்டேரியன் டயட்டின் நோக்கம். எனவே, காய்கறிகள், அசைவம் போன்றவை தவிர்க்கப்படுகின்றன.

என்ன மாதிரியான பழங்கள் சாப்பிடலாம்?

அமிலச்சத்துள்ள பழங்கள் (Acid fruits) : எலுமிச்சை, ஆரஞ்சு, சாத்துக்குடி, கமலா ஆரஞ்சு போன்ற சிட்ரஸ் பழங்கள், ஆப்பிள், அன்னாசி, ஸ்ட்ராபெர்ரி, மாதுளை, கிவி, பேரிக்காய்.

துணை அமிலச்சத்து உள்ள பழங்கள் (Subacid fruits) : செர்ரி, ராஸ்பெர்ரி, நெல்லிக்காய், பிளாக்பெர்ரி, ப்ளூபெர்ரி, பீச், பியர்ஸ், நாவல் பழம், பப்பாளி, அத்தி, ஆப்ரிகாட்ஸ், மாம்பழம்.

இனிப்புப் பழங்கள் (Sweet fruits): வாழைப்பழம், திராட்சை, முலாம் பழம், கிர்ணிப்பழம், தர்பூசணி, பலாப்பழம்.

நட்ஸ்கள்: முந்திரி, பாதாம், வால்நட், வாதாங்கொட்டை, பிஸ்தா, பைன் நட், ஹிக்கரி.

விதைகள்: சூரியகாந்தி விதைகள், எள்ளு, பூசணி விதைகள், பருத்தி விதை, பலாப்பழக் கொட்டைகள்.

உலர் பழங்கள்: பேரீச்சை, அத்தி, ஆப்ரிகாட், செர்ரி, கிரேன் பெர்ரி, உலர் திராட்சை.

எண்ணெய்ப் பழங்கள்: அவகோடா, தேங்காய், ஆலிவ்.

எப்படிச் சாப்பிடலாம்?

பொதுவாக, பூச்சிகொல்லிகள், உரங்கள் சேர்க்கப்படாமல் இயற்கைமுறையில் விளைவிக்கப்பட்ட பழங்கள் சாப்பிடுவது மிகவும் நல்லது. ஆனால், நடைமுறையில் இது சாத்தியம் இல்லை என்பதால், பழங்களை நன்கு கழுவி, சுத்தமாக்கியபின் சாப்பிடலாம்.

ஃப்ரூட்டேரியன் டயட்டில் ஒரு குறிப்பிட்ட வகை பழத்தை உண்டபின் 45 – 90 நிமிடங்களுக்கு வேறு வகை பழங்களைச் சாப்பிடக் கூடாது. பசி அடங்கவில்லை என்றால் பசி தீரும் வரை அதே வகை பழத்தைச் சாப்பிடுவது நல்லது. தொடர்ந்து ஒரேவகையான பழத்தைச் சாப்பிடும்போது சாப்பிடுவதற்கான ஆர்வம் குறையும் என்பதால் பசி தானாகவே மட்டுப்படும். பழங்கள்தான் பிரதான உணவு என்பதால் இந்த டயட்டில் தண்ணீர் அதிகமாகப் பருக வேண்டிய தேவை இருக்காது. ஆனால், பழங்களுடன் காய்கறிகள் அதிகமாக எடுத்துக்கொள்ளும்போது தண்ணீர் போதுமான அளவு பருக வேண்டியது அவசியம்.

ஃப்ரூட்டேரியன் டயட்டின் ஒரு நாள் மெனு:

காலை 6:00 – 9:00

காலை எழுந்தவுடன் மூன்று முதல் ஐந்து எலுமிச்சைகள் சேர்த்த ஜூஸ். தர்பூசணி பழம் மற்றும் ஜூஸ் வயிறு நிரம்பும் அளவு எடுத்துக்கொள்ள வேண்டும். இதனுடன் நட்ஸ்கள், விதைகள் எடுத்துக்கொள்வதால் உடலுக்குத் தேவையான கொழுப்பு கிடைக்கும்.

மிட் மார்னிங் 9:00 – 12:00

வயிறு நிரம்பும் அளவு ஆப்பிள், அன்னாசி, அத்தி, திராட்சை, பிளம்ஸ், கிவி, வெள்ளரிக்காய் எடுத்துக்கொள்ள
வேண்டும்.

மதியம் 12:00-3:00

ஆரஞ்சு, சாத்துக்குடி, கமலா ஆரஞ்சு, ஆப்ரிகாட், பப்பாளி ஆகியவை வயிறு நிரம்பும் அளவு எடுத்துக்கொண்டு, நட்ஸ்கள், விதைகள், எண்ணெய் பழங்கள் எடுத்துக்கொண்டால் உடலுக்குத் தேவையான கொழுப்புச்சத்து கிடைக்கும்.

பின் மதியம் 3:00-6:00

மாம்பழம், செர்ரி, ஸ்ட்ராபெர்ரி, சிவப்பு பிளம்ஸ், மாதுளம் பழம், தர்பூசணி, வாழைப்பழம்.

மாலை 6:00-9:00

திராட்சை, பிளாக் பெர்ரி, ராஸ்பெர்ரி.

இரவு 9:00-12:00

மாம்பழம், செர்ரி, ஸ்ட்ராபெர்ரி, பிளம்ஸ், தர்பூசணி, மாதுளம் பழம் ஆகியவற்றை எடுத்துக்கொள்ள வேண்டும். இதனுடன் வாழைப்பழம், உலர் பழங்கள் சாப்பிடுவதால், நார்ச்சத்து கிடைக்கும். செரிமானம் எளிதாகும்.

மேலே உள்ள மெனு ஒரு மாதிரிக்காக வழங்கப்பட்டுள்ளது. மருத்துவரை அணுகி உங்களின் உடல்நிலை, குறைக்க வேண்டிய எடையின் அளவு ஆகியவற்றைக் கணக்கிட்டு அவர் சொல்லும்
அறிவுரையைப் பின்பற்ற வேண்டும்.

தொகுப்பு: ஆர். மோனிகா

The post பலமாகும் பழங்கள்… appeared first on Dinakaran.

Related Stories: