தாய்லாந்து நாட்டில் இருந்து சென்னைக்கு 1 கோடி ரூபாய் போதை பொருள் கடத்தல்: கும்பல் தலைவனுக்கு லுக் அவுட் நோட்டீஸ்

அண்ணாநகர்: தாய்லாந்தில் இருந்து விமானத்தில் சென்னைக்கு கடத்திவரப்பட்ட 1.51 கிலோ உயர் ரக கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து இதுதொடர்பாக 3 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். தாய்லாந்தில் இருந்து விமானம் மூலம் ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான 1.51 கிலோ உயர்ரக கஞ்சா திருச்சி வழியாக சென்னை அண்ணாநகர் பகுதிக்கு காரில் கடத்தப்படுவதாக கிடைத்த தகவல்படி, மேற்கு இணை ஆணையர் விஜயகுமார், அண்ணாநகர் துணை ஆணையர் சீனிவாசன் ஆகியோரின் தலைமையில் தனிப்படை அமைத்து கடத்தல் கும்பலை தேடி வந்தனர்.

அண்ணாநகர் நியூ ஆவடி சாலையில், கடந்த 10ம் தேதி தனிப்படை போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு ஒரு காரில் வந்த 3 பேரை மடக்கி பிடித்தனர். அவர்கள் வந்த காரில் சோதனை செய்தபோது உயர்ரக கஞ்சா இருந்தது. இதுபற்றி நடத்திய விசாரணையில் சிக்கியவர்கள் சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த யாசர் அராபத்,(34), ராயப்பேட்டையைச் சேர்ந்த முகமது ஜைனுல் ரியாஸ்(30), சென்னை அருகே மாங்காட்டை சேர்ந்தவர்சண்முகராஜ், (65) என்று தெரிந்தது. இவர்களிடம் இருந்து ஒரு கோடி மதிப்பிலான 1.51 கிலோ உயர ரக ஒரிஜினல் கஞ்சா மற்றும் கார், 3 செல்போன்களை பறிமுதல் செய்தனர்.

போலீசாரிடம் சண்முகராஜ் கூறுகையில், ‘’சென்னை மாங்காடு பகுதியில் வசித்துவருகிறேன். எனது மகன் கார்த்திக் பி.இ., படித்துவிட்டு வேலை தேடி தாய்லாந்துக்கு சென்றார். அங்குள்ள உயர்ரக கஞ்சாவுக்கு மவுசு அதிகம் என்பதால் எனது மகனின் நண்பர் இப்ராகிமுடன் சேர்ந்து தாய்லாந்தில் இருந்து விமானம் மூலம் மாங்காடு பகுதியில் உள்ள வீட்டிற்கு கஞ்சாவை கடத்திவந்து ஒரு கிராம் 5 ஆயிரம் என்றும் ஒரு பொட்டலம் ஒரு லட்சம் வரை விற்பனை செய்தோம். செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் வியாபாரம் செய்து வந்தோம். கடந்த ஓராண்டாக சுற்றுலா பயணிகள் போல சிலரை தாய்லாந்துக்கு வரவைத்து, அவர்கள் வாயிலாக கஞ்சாவை கடத்தியுள்ளோம். இந்த முறை யாசர் அராபத்தை சுற்றுலா பயணியாக்கி, கஞ்சாவை கடத்தி வந்தோம்’ என்றார்.

இதையடுத்து கஞ்சா கடத்தலுக்கு முக்கிய நபராக செயல்படும் கார்த்திக், கஞ்சாவை அனுப்பிவைத்தபிறகு சென்னைக்கு வந்து தந்தை சண்முகராஜுடன் சேர்ந்து விற்பனை செய்துள்ளார். இதையடுத்து தேடப்படும் முக்கிய குற்றவாளியான கார்த்திக் வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்லாமல் இருப்பதற்காக இந்தியாவின் அனைத்து விமான நிலையங்களிலும் லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. ‘’அண்ணாநகர் புதிய துணை ஆணையர் சீனிவாசன் தலைமையில் தனிப்படை போலீஸ் அமைத்து கஞ்சா குட்கா, போதை மாத்திரைகள் விற்பனை செய்வதை தடுக்கும் வகையில் சுழற்சி முறையில் தனிப்படை போலீசார் ரோந்து வருகின்றனர். இதன்காரணமாக அண்ணாநகர் காவல் மாவட்டத்தில் கஞ்சா குட்கா, போதை பொருட்கள் விற்பனை குறைந்துள்ளது.

கல்லூரி, பள்ளி அருகே உள்ள பெட்டிக்கடை, டீ கடைகளில் குட்கா, போதை பொருட்கள் விற்பனை செய்வது அறிந்தால் உடனடியாக அண்ணா நகர் துணை அலுவலகத்துக்கு தகவல் கொடுக்கலாம். பெயர், விவரம் பாதுகாக்கப்படும்’ என்று போலீசார் தெரிவித்தனர். அண்ணாநகர் பகுதியில் போதை பொருட்களை தடுக்க தீவிர ரோந்துபணி மேற்கொள்ள வேண்டும். பெட்டிக் கடை, குளிர்பான கடைகளை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். சந்தேகப்படும்படியாக சுற்றித்திரியும் நபர்களை பற்றி தகவல்களை உடனடியாக தெரிவிக்க வேண்டும் என்று போலீசாருக்கு சமூகநல ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

The post தாய்லாந்து நாட்டில் இருந்து சென்னைக்கு 1 கோடி ரூபாய் போதை பொருள் கடத்தல்: கும்பல் தலைவனுக்கு லுக் அவுட் நோட்டீஸ் appeared first on Dinakaran.

Related Stories: