பீடி கேட்ட தகராறில் தலையில் கல்லை போட்டு வாலிபர் கொடூர கொலை: கஞ்சா வியாபாரி உட்பட 2 பேர் கைது

பெரம்பூர்:புளியந்தோப்பு பகுதியில் தலையில் கல்லைபோட்டு வாலிபர் கொடூரமாக கொல்லப்பட்டுள்ளார். பீடி கேட்ட தகராறில் நடந்த சம்பவம் தொடர்பாக கஞ்சா வியாபாரி உள்பட 2 பேரை கைது செய்தனர்.சென்னை புளியந்தோப்பு கன்னிகாபுரம் வாசுகி நகர் 4வது தெருவை சேர்ந்தவர் சங்கர் (60). இவரது மனைவி கோமதி (50). இவர்களுக்கு சரவணன் (28), கோபி என்கின்ற கில்லா (27) என்ற மகன்களும் சந்தியா (24) என்ற மகளும் உள்ளனர். கோபி என்கின்ற கில்லா சென்ட்ரிங் வேலை செய்கிறார்.

இந்தநிலையில், நேற்று கொருக்குப்பேட்டையில் உள்ள தனது நண்பர் குமார் வீட்டுக்கு சென்று அங்கு கோபி உள்பட நண்பர்கள் மது குடித்துள்ளனர். போதை ஏறியதும் கோபி அங்கிருந்து தள்ளாடிக்கொண்டே கொடுங்கையூர் வழியாக வீட்டுக்கு நடந்து வந்துள்ளார். மேற்கொண்டு அவருக்கு நடக்க முடியாததால் ஓரிடத்தில் நின்றுக்கொண்டு தங்கை சந்தியாவுக்கு போன் செய்து விவரத்தை தெரிவித்து தன்னை வந்து அழைத்துச் செல்லும்படி கேட்டுள்ளார்.இதனிடையே மெதுவாக அங்குள்ள ஆர்.ஆர்.நகர் மெயின் தெருவில் கோபி வரும்போது எழில் நகர் 1வது தெருவை சேர்ந்த ஜான்சன் என்கின்ற கருப்பு (21), ஆர்ஆர். நகர் 1வது தெருவை சிவா (55) ஆகியோர் சாலை நடுவே நின்று பேசிக் கொண்டிருந்துள்ளனர்.

அப்போது சிவா என்பவர் கோபியிடம் சென்று ‘’பீடி வைத்துள்ளாயா’ என்று கேட்டபோது போதையில் இருந்த கோபி கோபத்துடன், ‘’யாரிடம் பீடி கேட்கிறாய்’’ என்று கேட்டு அவர்களிடம் தகராறு செய்ததுடன் சிவாவை தாக்கியுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த சிவா, ஜான்சன் ஆகியோர் சேர்ந்து கோபியை சரமாரியாக அடித்து உதைத்துள்ளனர். இதன்பிறகு தங்களது பைக்கில் கோபியை தூக்கி வைத்துக்கொண்டு அதே தெரு வழியாக வேகமாக சென்றபோது வேகத்தடையில் ஏறியதால் பைக்குடன் கோபி, ஜான்சன், சிவா ஆகியோர் சாலையில் விழுந்ததும் அங்கு மூவரும் சரமாரியாக அடித்துக்கொண்டனர். அப்போது கோபியை சாலையில் தூக்கி வீசியதுடன் ஜான்சன், சிவா ஆகியோர் அங்கு கிடந்த ஆட்டுக்கல்லை எடுத்து கோபி தலையில் தூக்கி போட்டுவிட்டு தப்பிவிட்டனர். இதில் சம்பவ இடத்திலேயே கோபி உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவல் கிடைத்ததும் கொடுங்கையூர் போலீசார் சென்று கோபி உடலை பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையிலான போலீசார் ஜான்சன் என்கின்ற கருப்பு, சிவா ஆகியோரை கைது செய்தனர். ஜான்சன் மீது ஏற்கனவே 6 வழக்குகள் உள்ளன. கஞ்சா பொட்டலங்களை விற்பனை செய்து அடிக்கடி போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறைக்கும் சென்றுள்ளார். சிவா மீதும் கஞ்சா வழக்கு உட்பட 5 வழக்குகள் உள்ளன.

The post பீடி கேட்ட தகராறில் தலையில் கல்லை போட்டு வாலிபர் கொடூர கொலை: கஞ்சா வியாபாரி உட்பட 2 பேர் கைது appeared first on Dinakaran.

Related Stories: