ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு 2222 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள்: நவ.1 முதல் விண்ணப்பிக்கலாம்

சென்னை: அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள பட்டதாரி ஆசிரியர்கள், வட்டார வள மைய ஆசிரியர் பயிற்றுநர்கள் பதவிகளை நிரப்ப போட்டித் தேர்வு நடக்க இருப்பதால் நவம்பர்1ம் தேதி முதல் 30ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. இது குறித்து ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று தகுதியுள்ள நபர்கள் பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் வட்டார வள மைய ஆசிரியர் பயிற்றுநர் பணிக்கு விண்ணப்பக்கலாம். இதற்காக விண்ணப்பிக்கும் போது மேற்கண்ட தகுதியுள்ள நபர்கள் தங்களின் சான்றுகளை, ஆவணங்களை ஆன்லைன் விண்ணப்பத்துடன் சேர்த்து அனுப்ப வேண்டும். பட்டதாரி ஆசிரியர்கள், வட்டார வள மைய ஆசிரியர் பயிற்றுநர்களுக்கான காலிப் பணியிடங்கள் தற்போது 2222 உள்ளன. விண்ணப்பங்களை நவம்பர் 1ம் தேதி முதல் 30ம் தேதி வரை ஆன்லைன் மூலம் பதிவேற்றம் செய்ய வேண்டும். இதற்கான போட்டித் தேர்வு 2024 ஜனவரி 7ம் தேதி நடக்கும்.

மேற்கண்ட காலிப்பணியிடங்களில் பள்ளிக் கல்வியில் 2171 இடங்களும், மிகவும் பிற்பட்டோர் நலத்துறையில் 23, ஆதிதிராவிடர் நலத்துறையில் 16, மாற்றுத் திறனாளிகள் நலத்துறையில் 12 இடங்கள் உள்ளன. மேற்கண்ட பணியிடங்கள் துறை வாரியாகவும், பாட வாரியாகவும், இட ஒதுக்கீடு வாரியாகவும் கூடிய விவரங்கள் ஆசிரியர் தேர்வு வாரிய இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது.மேலும் வெயிட்டேஜ் மதிப்பெண்கள் குறித்த விவரங்களும் இந்த அறிவிப்பின்படி தெரிவிக்கப்பட்டுள்ளது. போட்டித் தேர்வு எழுதும் ஆசிரியர் தகுதித் தேர்வில் தகுதி பெறுவோருக்கு சலுகை வழங்கும் வகையில் வெயிட்டேஜ் மதிப்பெண் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, தகுதித் தேர்வில் பெறும் மதிப்பெண்களுடன் வெயிட்டேஜ் மதிப்பெண்ணும் கணக்கில் சேர்த்து பணி நியமனத்துக்கான மொத்த மதிப்பெண்கள் கணக்கிடப்படும். பள்ளிக்கல்வித்துறை அரசாணையின்படி ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் 2 எழுதி பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு தகுதி பெறும் நபர்களுக்கு அவர்கள் தகுதி பெற்ற ஆண்டில் இருந்து ஒரு ஆண்டுக்கு 0.5 மதிப்பெண்கள் வெயிட்டேஜ் வழங்கப்படும். இதன்படி தகுதித் தேர்வில் 2012ல் தேர்ச்சி பெற்றிருந்தால் 2023ம் ஆண்டு வரை 11 ஆண்டுகள் ஆகிறது. அதற்கு 5.5 வெயிட்டேஜ், 2013க்கு 5 வெயிட்டேஜ் மதிப்பெண் வழங்கப்படும். 2014க்கு 4.5, 2017க்கு 3 மதிப்பெண்ணும், 2019க்கு 2 மதிப்பெண்ணும் , 2022க்கு 0.5 மதிப்பெண்ணும், வெயிட்டேஜ் வழங்கப்படும். 2023ல் தேர்ச்சி பெற்றவர்களுக்கு வெயிட்டேஜ் இல்லை.

The post ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு 2222 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள்: நவ.1 முதல் விண்ணப்பிக்கலாம் appeared first on Dinakaran.

Related Stories: