ஆசிரியையுடன் ஆசிரியர் மாயமான வழக்கில் அலட்சியம் 2 எஸ்.எஸ்.ஐ.க்கள் சஸ்பெண்ட்

பெரம்பலூர்: ஆசிரியையுடன் ஆசிரியர் மாயமான வழக்கில் அலட்சியமாக செயல்பட்ட 2 சிறப்பு சப் இன்ஸ்பெக்டர்களை சஸ்பெண்ட் செய்து பெரம்பலூர் மாவட்ட எஸ்பி நேற்று உத்தரவிட்டுள்ளார். பெரம்பலூர் அருகே உள்ள குரும்பலூர் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் வெங்கடேசன்(44). வேப்பந்தட்டை தாலுகா வி.களத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் அறிவியல் ஆசிரியராக பணிபுரிந்து வந்தார். பெரம்பலூர் அருகே வேப்பந்தட்டை கிராமத்தில் வசித்து வரும் இன்ஜினியர் பாலமுருகன் மனைவி தீபா (42). இவர் வெங்கடேசன் பணியாற்றி வரும் அதே பள்ளியில் கணித ஆசிரியராக வேலைபார்த்து வந்தார்.

கடந்த மாதம் 15ம் தேதி வழக்கம் போல் பள்ளிக்கு சென்ற இவர்கள் இருவரும், வீடு திரும்பவில்லை. இதனால் வெங்கடேசன் மனைவி காயத்ரி பெரம்பலூர் போலீஸ் நிலையத்திலும், தீபாவின் கணவர் பாலமுருகன் வி.களத்தூர் போலீஸ் நிலையத்திலும் புகார் அளித்தனர். இதையடுத்து போலீசார் தனித்தனியாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், கோவை நகரில் நின்ற தீபாவின் காரில் வி.களத்தூர் போலீசார் கடந்த நவ.29ம் தேதி சோதனை நடத்தினர். அதில் தீபாவின் தாலி, 2 குண்டு மற்றும் தீபா, வெங்கடேசன் ஆகியோரது செல்போன்கள், ஏடிஎம் கார்டுகள், ரத்தக்கரை படிந்த சுத்தியல், அரிவாள் போன்ற ஆயுதங்கள் கண்டறியப்பட்டன. ஆனால் மாயமான 2 பேர் பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை.

இந்த சம்பவம் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு 2 பேரையும் தேடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டது. ஆனாலும் மாயமான 2 ஆசிரியர்கள் பற்றி எந்தவித துப்பும் இதுவரை கிடைக்கவில்லை. இந்நிலையில் குரும்பலூரை சேர்ந்த அவரது உறவினர்கள் பிரபு, ராஜா, நண்பரான ஆசிரியர் ஆனந்தன் ஆகியோர் தேனிக்குசென்று வெங்கடேசனை சொந்த ஊரான குரும்பலூருக்கு அழைத்து வந்தனர். பின்னர் பெரம்பலூர் எஸ்எஸ்ஐ பாண்டியனுக்கு ரகசியமாக தகவல் கொடுத்து குரும்பலூருக்கு அழைத்தபோது, மறுநாள் ஸ்டேசனுக்கு அழைத்து வரும்படி எஸ்ஐ அலட்சியமாக பதில் தெரிவித்துள்ளார்.

இந்த தகவல் தெரியவந்த வெங்கடேசன், குரும்பலூரில் இருந்து தப்பி சென்றார். அதேபோல் இன்ஜினியர் பாலமுருகன், தனது மனைவியை காணவில்லை என நவ.18ம் தேதி புகார் கொடுத்தும், வி.களத்தூர் எஸ்எஸ்ஐ முஹமது ஜியாவுதீன் வழக்குப்பதிவு மட்டும் செய்துவிட்டு தேடும் பணியை துரிதப்படுத்தாமல் மெத்தனமாக இருந்தது தனிப்படை போலீசாருக்கு தெரியவந்தது. இந்த சம்பவம் தொடர்பாக எஸ்பி ஷ்யாம்ளாதேவி கவனத்துக்கு தனிப்படை போலீசார் கொண்டு சென்றனர். இதையடுத்து, பணியில் அலட்சியமாக இருந்ததாக பெரம்பலூர் எஸ்எஸ்ஐ பாண்டியன், வி.களத்தூர் எஸ்எஸ்ஐ முஹமது ஜியாவுதீன் ஆகியோரை சஸ்பெண்ட் செய்து எஸ்.பி அதிரடியாக நேற்று உத்தரவிட்டார்.

The post ஆசிரியையுடன் ஆசிரியர் மாயமான வழக்கில் அலட்சியம் 2 எஸ்.எஸ்.ஐ.க்கள் சஸ்பெண்ட் appeared first on Dinakaran.

Related Stories: