ஊட்டி : நீலகிரி மாவட்ட எல்லையோரங்களில் பழங்குடியின மக்கள் வசிக்க கூடிய கிராமங்களில் காவல்துறை சார்பில் குறைதீர்க்கும் முகாம்கள் நடந்தது. இம்முகாம்களில் பழங்குடி மக்களிடம் இருந்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்கள் பெறப்பட்டது.நீலகிரி மாவட்டத்தை எல்லையோரத்தை ஒட்டியுள்ள கேரளா மாநில வனங்களில் கடந்த சில ஆண்டுகளாக மாவோயிஸ்ட்கள் நடமாட்டம் அதிகரித்துள்ளது.
இதனால் நீலகிரி மாவட்ட எல்லையோரத்தில் உள்ள பழங்குடியின மக்கள், மாவோயிஸ்ட்களின் ஆதரவாளர்களாக மாறி விடுவதை தடுக்கும் வகையில் பழங்குடியின மக்களுக்கு பல்வேறு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டு வருகிறது. இவர்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்த சார்பில் பழங்குடியின மக்களின் குழந்தைகளுக்கு கல்வி, சாலை, குடிநீர், மின்சாரம் உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகளை மேம்படுத்த மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
மாவட்ட காவல்துறை சார்பில் மாதம் தோறும் பழங்குடியின கிராமங்களில் குறைதீர்க்கும் முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. கடந்த சில மாதங்களாக குறைதீர் முகாம்கள் நடைபெறாமல் இருந்தது. இந்நிலையில் நீலகிரி மாவட்ட எஸ்பி சுந்தரவடிவேல் உத்தரவின் பேரில் நீலகிரி மாவட்ட எல்லையோர கிராமங்களில் உள்ள பழங்குடியின மக்களின் குறைகளை நிவர்த்தி செய்யும் விதமாக மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து காவல்துறை சார்பில் குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது.
இதன்படி மசினகுடி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட சிறியூர், இந்திராகாலனி பகுதியில் நடந்த குறைதீர் முகாமில் கூடுதல் எஸ்பி., சவுந்தரராஜன், ஊட்டி ஆர்டிஒ., மகராஜ் உள்ளிட்ட அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டு பழங்குடி மக்களிடம் இருந்து மனுக்கள் பெற்றனர். கொலக்கொம்பை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட யானை பள்ளம், பழனியப்பா எஸ்டேட், மூப்பர்காடு, நெடுகல்கொம்பை உள்ளிட்ட கிராம மக்களுக்காக நடத்தப்பட்ட முகாமில் குன்னூர் ஆர்டிஒ., சதீஸ், டிஎஸ்பி., குமார், வட்டாட்சியர் கனிசுந்தரம் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.
இதேபோல் மஞ்சூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கிண்ணக்கொரை, காமராஜர் நகர், ஜேஜே.,நகர் பகுதிகளிலும், கோத்தகிரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட செம்மனாரை, தாளமொக்கை, மேல்கூப்பு, கீழ் கூப்பு பகுதிகளிலும், நியுஹோப் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பாலவாடி, காமராஜர் நகர், குறிஞ்சிநகர் பகுதிகள், சேரம்பாடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட முருக்கம்பாடி, வட்டக்கொல்லி, அத்திச்சால் ஆகிய ஆதிவாசி கிராமங்களில் குறைதீர்க்கும் நாள் முகாம்கள் நடந்தது.
இம்முகாம்களில் சம்பந்தப்பட்ட காவல் நிலைய ஆய்வாளர்கள், வருவாய்த்துறை அதிகாரிகள் உள்ளிட்ட அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர். இதில் பழங்குடியின மக்களின் குறைகள் கேட்டறியப்பட்டது. அவர்களிடம் இருந்து அடிப்படை வசதிகள் நிறைவேற்றி தருதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது.
இம்முகாமில் 365 பழங்குடியின மக்கள் கலந்து கொண்டு, அவர்களிடம் இருந்து 122 மனுக்கள் பெறப்பட்டன. இம்மனுக்கள் பரிசீலிக்கப்பட்டு உடனடியாக நிறைவேற்ற கூடிய கோரிக்கைகளுக்கு சம்பந்தப்பட்ட துறை சார்பில் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும். பிற மனுக்கள் மீது மாவட்ட நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
The post மாவட்ட காவல்துறை சார்பில் எல்லையோர கிராமங்களில் குறைதீர் முகாம்கள் appeared first on Dinakaran.