பழைய குற்றாலத்தில் போக்குவரத்திற்கு இடையூறாக உள்ள டாஸ்மாக் மதுபான கடைகள் அகற்றப்படுமா?

*சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் எதிர்பார்ப்பு

தென்காசி : பழைய குற்றாலத்தில் போக்குவரத்திற்கு இடையூறாக உள்ள டாஸ்மாக் மதுபான கடையை அகற்ற வேண்டும் என்று சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பழைய குற்றாலம் சாலையில் ஆயிரப்பேரி ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் டாஸ்மாக் மதுபான கடை அமைந்துள்ளது. இந்த கடை தென்காசி சாலையும், பழைய குற்றாலம் சாலையும் சந்திக்கும் நான்கு முக்கு சந்திப்பில் உள்ளது. டாஸ்மாக் கடை முன்பு மதுபிரியர்கள் வாகனங்களை ஒழுங்கின்றி நிறுத்திவிட்டு மது குடிக்க செல்கின்றனர்.

மதுக்கடையுடன் இணைந்த பார் ஒன்றும் உள்ளது. பழைய குற்றாலம் சாலையில் அதிகளவில் வாகன போக்குவரத்துள்ள சாலையாகவும், சீசன் காலம் மட்டுமின்றி சாதாரண சமயத்திலும் பகல் மற்றும் இரவு வேளைகளில் கனிம வளங்களை கொண்டு செல்லும் ராட்சத லாரிகள் செல்லும் சாலையாகவும் உள்ளது. இத்தகைய சாலையில் 4 முக்கு சந்திப்பு பகுதியில் அமைந்துள்ள மதுபான கடை காரணமாக பாதசாரிகளும், இரு சக்கர வாகன ஓட்டிகளும் அடிக்கடி பிரச்னைக்குள்ளாக நேருகிறது.

விபத்துகளும், காயங்களும், உயிரிழப்பும் கூட ஏற்பட்டுள்ளது. சந்திப்பு பகுதியில் விதிகளுக்கு புறம்பாக வாகனங்களை நிறுத்துவதால் அடிக்கடி வாக்குவாதமும் ஏற்படுகிறது. இதுவும் பல்வேறு சமூக பிரச்சனைகளை உருவாக்கி விட வாய்ப்பு உள்ளது. அத்துடன் அப்பகுதி பள்ளி மாணவ, மாணவிகள், பெண் விவசாய தொழிலாளர்கள் செல்லும் பகுதியாகவும், தென்காசி மற்றும் சுற்றுவட்டாரப்பகுதிகளை சேர்ந்த பெண்கள் குடும்பத்துடன் பழைய குற்றாலம் அருவிக்கு குளிக்கச் செல்லும் பகுதியாகவும் உள்ளது. இப்பகுதியில் காவல்துறை உள்ளிட்ட பாதுகாப்பு அம்சங்கள் குறைவாக உள்ளதாலும் பல சமயங்களில் அச்சத்துடன் கடையை கடந்து செல்கின்றனர்.

எனவே நான்கு முக்கு சந்திப்பு பகுதியில் இடையூறான இடத்தில் இருக்கும் அந்த மதுபான கடையை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஏற்கனவே டாஸ்மாக் மதுபான கடைகள் தொடர்பான புகார் விஷயங்களில் மாவட்ட நிர்வாகம் துரித நடவடிக்கை எடுத்து வருகிறது. குறிப்பாக தென்காசி பழைய மற்றும் புதிய பேருந்து நிலையங்கள் அருகில் பொதுமக்கள் அதிகளவில் கூடும் இடங்களில் அமைந்துள்ள கடைகளையும், அதேபோன்று தென்காசி அரசு போக்குவரத்து கழகப் பணிமனை முன்புள்ள கடையையும் மாற்றுவதற்கு நடவடிக்கை எடுத்து வருவது பொதுமக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.

இந்நிலையில் பழைய குற்றாலம் நான்கு மூக்கு சந்திப்பில் உள்ள கடையை அகற்றினால் பெண்கள் அச்சமின்றி செல்வதுடன், அப்பகுதியில் போக்குவரத்து இடையூறு இல்லாமல் வாகன ஓட்டிகள் செல்ல முடியும் என்று பொதுமக்கள் தெரிவித்தனர்.

The post பழைய குற்றாலத்தில் போக்குவரத்திற்கு இடையூறாக உள்ள டாஸ்மாக் மதுபான கடைகள் அகற்றப்படுமா? appeared first on Dinakaran.

Related Stories: