அமைச்சருடன் நடந்த பேச்சுவார்த்தைக்கு பிறகு டிட்டோ ஜாக் போராட்டம் தற்காலிகமாக ஒத்தி வைப்பு

சென்னை : பள்ளி கல்வித்துறை அமைச்சருடன் டிட்டோஜாக் நடத்திய பேச்சு வார்த்தைக்கு பிறகு கோட்டை முற்றுகை போராட்டம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக டிட்டோஜாக் அறிவித்துள்ளது. தமிழ்நாடு ஆசிரியர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு (டிட்டோஜாக்) சார்பில் சென்னை தலைமை செயலகத்தில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மற்றும் பள்ளி கல்வித்துறை முதன்மை செயலாளர் மதுமதி, மற்றும் கல்வி அதிகாரிகளுடன் பேச்சு வார்த்தை நடந்தது. இதுகுறித்து டிட்டோஜாக் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர்கள் கூறியதாவது:

தமிழ்நாடு ஆசிரியர் சங்கங்களின் சார்பில் அறிவிக்கப்பட்ட 31 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்று கேட்டு பல கட்ட போராட்டங்களை அறிவித்த நிலையில், சென்னையில் 30ம் தேதி கோட்டை முற்றுகை போராட்டம் நடத்த போவதாக அறிவித்தோம். இது குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் பார்வைக்கும் கொண்டு சென்றோம். அதைத் தொடர்ந்து சென்னை தலைமை செயலகத்தில் இன்று பேச்சு வார்த்தைக்கு அழைத்தனர். அப்போது பணிசார்ந்த மற்றும் நிதி சார்ந்த கோரிக்கைகள் இரண்டாக பிரிக்கப்பட்டு 1 லட்சம் ஆசிரியர்கள் எதிர்பார்க்கும் அரசாணை 243 பற்றி விரிவாக விவாதிக்கப்பட்டது. அதில் இருக்கும் பாதகங்களை எடுத்து கூறினோம். அதை புரிந்து கொண்ட அமைச்சர் விரைவில் ஒரு நல்ல முடிவை எடுப்பதாக தெரிவித்தார். நிதி சார்ந்த ஆசிரியர்களின் பிரச்னைகள் குறித்து தர ஊதியம், பிலிட் ஆசிரியர்கள், இடைநிலை ஆசிரியர்கள் ஊதிய விஷயத்தில் ஒன்றிய அரசுக்கு இணையாக வழங்க வேண்டும் என்றும் கேட்டு வருகிறோம்.

கலைஞர் ஆட்சி காலத்தில் வழங்கப்பட்ட ஊதிய விகிதத்தை வழங்க வேண்டும் என்று கேட்டோம். 27ம் தேதி முதல்வர் பிரதமரை சந்திக்க போவதாக தெரிவித்துள்ளார். நமது மாநிலத்துக்கான கல்வி நிதியைப்பெற போவதாக தெரிவித்துள்ளார். நிதி பிரச்னை நமக்கு இருக்கிறது என்பதை நாங்கள் அறிவோம். அதனால் முதல்வருக்கு உறுதுணையாக இருப்போம். 243 அரசாணையை ரத்து செய்ய வேண்டும். ஒன்றிய அரசின் நிதியை பெற்று எங்களுக்கு வழங்குவதாக தெரிவித்துள்ளார். அதனால் முதல்வரின் அறிவுரையின்பேரில் நல்ல முடிவு அறிவிக்கப்பட உள்ளது. அதனால் அனைத்து சங்கங்களின் முடிவுகளின்படி தற்காலிகமாக இந்த போராட்டம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த பேச்சு வார்த்தை குறித்த விஷயங்களை முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்வதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். மேலும், ஆசிரியர்களின் நலன் காக்க வேண்டி 243 அரசாணையை ரத்து செய்வார்கள் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது. தேசிய கல்வி கொள்கையை ஏற்கவில்லை என்ற காரணத்தை காட்டி நிதியை ஒன்றிய அரசு நிறுத்தி வைத்துள்ளது. அதனால் மாணவர்களின் நலன் கருதி அந்த நிதியை ஒன்றிய அரசு வழங்க வேண்டும்.

The post அமைச்சருடன் நடந்த பேச்சுவார்த்தைக்கு பிறகு டிட்டோ ஜாக் போராட்டம் தற்காலிகமாக ஒத்தி வைப்பு appeared first on Dinakaran.

Related Stories: