தாராபுரம் அருகே மர்ம விலங்கு தாக்கி 30 ஆடுகள் பலி

தாராபுரம்: திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை அடுத்துள்ள மூலனூர் ஒன்றியம் கருப்பண வலசு கிராமத்தை சேர்ந்தவர் துரைசாமி (எ) பிரகாஷ் (34), பள்ளக்காட்டு தோட்டம் பகுதியில் தனது விவசாய நிலத்தில் 80க்கும் மேற்பட்ட செம்மறி ஆடுகளை வளர்த்து வருகிறார். நேற்று மாலை ஆடுகளை வழக்கம்போல் ஆட்டுப்பட்டியில் அடைத்து ஆடுகளுக்கு தீவனம் வைத்து விட்டு சென்றார். அப்போது, ஆடுகள் அலறிய சத்தம் கேட்டு வெளியே வந்து பார்த்தபோது பட்டியில் இருந்து ஒரு மர்ம விலங்கு பட்டியின் வேலையை தாண்டி குதித்து ஓடியது.

ஆனால், அது என்ன விலங்கு? என்பது இருட்டில் சரிவர தெரியவில்லை. இதனையடுத்து, பட்டிக்கு சென்று பார்த்தபோது 29 ஆடுகள் கழுத்தில் ரத்த காயத்தோடு இறந்து கிடந்தன. மேலும் 1 ஆடு உயிருக்கு போராடி கொண்டிருந்தது. இதனால், அதிர்ச்சியடைந்த பிரகாஷ் கூச்சலிட்டார். அக்கம்பக்கத்தினர் பிரகாஷ் தோட்டத்தின் முன்பு திரண்டு ஆடுகளை கொன்ற மர்ம விலங்கை நள்ளிரவு வரை தேடிப்பார்த்தும் கிடைக்கவில்லை. மேலும், மூலனூர் பகுதியில் கடந்த ஆண்டு சிறுத்தை நடமாட்டம் இருந்தது. ஊதியூர் முதல் மூலனூர் வரை சிறுத்தை வந்து சென்றதற்கான கால்தடங்கள் கண்டுபிடிக்கப்பட்டது.

பின்னர், வனத்துறையினர் அப்பகுதியில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். கண்காணிப்பு கேமராக்கள் வைக்கப்பட்டு சிறுத்தை நடமாட்டத்தை கண்காணித்து வந்தனர். இதேபோல் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் 5 வயதுடைய சிறுத்தை ஆனைமலை புலிகள் காப்பகம் பகுதியில் இருந்து தப்பி வந்து காதப்புள்ள பட்டி கிராமம் அருகே காற்றாலை மின்மாற்றியில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தது.

இந்நிலையில், வனத்துறையினர் கருப்பண கிராமத்தில் மர்ம விலங்கு குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆட்டுப்பட்டியில் மர்மவிலங்கு கால்தடங்களை ஆய்வு செய்து வருகின்றனர். சிறுத்தை தாக்கி ஆடுகள் இறந்திருக்கலாம் என அப்பகுதியில் உள்ள விவசாயிகள் பீதியில் உள்ளனர்.

The post தாராபுரம் அருகே மர்ம விலங்கு தாக்கி 30 ஆடுகள் பலி appeared first on Dinakaran.

Related Stories: