பதிவுத்துறை ஐஜி அலுவலகத்தில் இருந்து மண்டல டிஐஜிக்கள், மாவட்ட பதிவாளர்களுக்கு ஒரு சுற்றறிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதில், சார்பதிவாளர்களின் தன் விவரங்கள் மற்றும் தங்களது மண்டலத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட சார்பதிவாளர்களின் எண்ணிக்கை, காலியிடங்களின் எண்ணிக்கை ஆகிய விவரங்களை தங்கள் பதிவு மண்டலத்திற்கு உட்பட்ட மாவட்ட பதிவாளர்களிடம் இருந்து கோரி பெற்று வருகிற 30ம் தேதிக்குள் அனுப்பிட கேட்டுக் கொள்ளப்படுகிறது. விடல்கள் ஏதுமின்றி சரியான விவரங்கள் அனுப்ப கேட்டுக் கொள்ளப்படுகிறது என சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
அதில், சார்பதிவாளர்களின் தனிப்பட்ட விவரங்கள் கேட்கப்பட்டுள்ளது. அதிகாரியின் பெயர், பிறந்த தேதி, பணியில் சேர்ந்த தேதி, ஓய்வு பெறும் தேதி, சாதி, சொந்த மாவட்டம், தாலுகா, தங்களின் கிரேடு ஆகிய தகவல்கள் கேட்கப்பட்டுள்ளன. இந்த தகவல்கள் அனைத்தும் பணியில் சேரும்போது அரசிடம் முறையாக சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. தற்போது அதிகாரிகள் காலி பணியிடங்களின் விவரங்களை தெரிந்து கொள்வதற்கு என்று வெளியில் கூறிவிட்டு, சாதி உள்ளிட்ட விவரங்களை கேட்டு வாங்குவது சார்பதிவாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இவ்வாறு சாதி விவரங்களை வாங்குவதால் உயர் அதிகாரிகளுக்கு தனிப்பட்ட விருப்பு, வெறுப்புகள் ஏற்பட வாய்ப்புகளை உயர் அதிகாரிகளே ஏற்படுத்திக் கொடுப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. பல அதிகாரிகளுக்கு அவர் யார், எந்த ஊர், என்ன சாதி என்பது உள்ளிட்ட முழு தகவல்கள் தெரியாது. அவர்கள் வேலையை மட்டும் பார்த்து விட்டுச் செல்வார்கள். தற்போது பதிவுத்துறை ஐஜி அலுவலகம் இந்த தகவல்களை கேட்டுள்ளதால்தான் அவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
பலர் தன் விவர குறிப்பில் சாதியை தவிர மற்ற தகவல்களை குறிப்பிட்டு அனுப்பியுள்ளனர். ஆனால் முழு தகவல்களும் வேண்டும் என்று அந்த சுற்றறிக்கையில் கூறியுள்ளதால், அவர்களின் சாதி விவரங்களை அறிவதற்காக அவர்கள் பணியில் சேர்ந்த போது கொடுக்கப்பட்ட தனிப்பட்ட தகவல்களை சேகரித்து உயர் அதிகாரிகள் அதில் நிரப்பி வருவதாகவும் கூறப்படுகிறது. மேலும், சொந்த ஊரில் பணி நியமனம் கூடாது என்பதற்காக மற்ற விவரங்களை கேட்கலாம், சாதி கேட்பதுதான் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
The post தமிழக அரசிடம் முழு தகவல்கள் இருக்கும் நிலையில் சாதியுடன் சேர்த்து ஊழியர்களின் விவரங்களை கேட்கும் பதிவுத்துறை: ஊழியர்கள் அதிர்ச்சி appeared first on Dinakaran.
