தமிழ்நாடு வாலிபால் லீக் ஜன.3ல் தொடக்கம்

சென்னை: தமிழ்நாடு மாநில வாலிபால் சங்கம் சார்பில் முதல் முறையாக 6 அணிகள் பங்கேற்கும் ‘தமிழ்நாடு வாலிபால் லீக்’ கைப்பந்து போட்டி ஜன.3ம் தேதி தொடங்குகிறது. இப்போட்டிக்கான அணிகளின் பெயர்களையும், உரிமையாளர்களையும் தேர்வு செய்வதற்கான கூட்டம், எழும்பூர் ஹாக்கி அரங்கில் நேற்று நடந்தது. அதில் சங்கத்தின் தலைவர் அர்ஜூன் துரை, செயலாளர் செல்வ கணேஷ், நிர்வாகிகள் மார்டின் சுதாகர், துரைசிங், ஸ்ரீகேசவன் ஆகியோருடன், பல்வேறு நிறுவனங்களின் உரிமையாளர்கள் பங்கேற்றனர். முடிவில் 6 அணிகளின் பெயர்கள் முடிவு செய்யப்பட்டதுடன், அதன் உரிமையாளர்களும் தேர்வு செய்யப்பட்டனர்.

அதன்படி சென்னை ராக்ஸ்டார்ஸ் (ஆர்விஎம்ஏ ராஜன், ரோமா குழுமம்), கடலூர் வித் அஸ் (ஜி.வெங்கடேன், வெங்கடேஸ்வரா கல்வியல் கல்லூரி), விருதுநகர் கிங் மேக்கர்ஸ் (எம்.பி.செல்வகணேஷ், மூகாம்பிகா இன்ஃபோ சொலுயூஷன்ஸ்), கிருஷ்ணகிரி புல்ஸ் (ஏ.டி.கமலாசன், எக்ஸ்-பேக்டர்), குமரி போனிக்ஸ் (ஏ.சிவரமேஷ், போனிக்ஸ் குழுமம்), விழுப்புரம் சூப்பர் கிங்ஸ் (டாக்டர்.பொன் கவுதம் சிகாமணி, நாடாளுமன்ற உறுப்பினர்) ஆகிய அணிகள் போட்டியில் களமிறங்குகின்றன.

ஒவ்வொரு அணியும் 2 லிபரோ உட்பட 14 வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்கள், மருத்துவ உதவியாளர்கள் கொண்ட அணியை தேர்வு செய்வார்கள். அணி தேர்வுக்கு பின் டிச.26 முதல் ஜன.2 வரை அணி வாரியாக பயிற்சி முகாம்கள் நடைபெறும். ரவுண்டு ராபின் முறையில் லீக் சுற்று ஆட்டங்களும், தொடர்ந்து நாக் அவுட் சுற்று ஆட்டங்களும் நடக்கும். சாம்பியன் பட்டம் பெறும் அணிக்கு கோப்பையுடன் ரூ.5 லட்சம் ரொக்கப் பரிசு வழங்கப்படும். 2வது இடம் பிடிக்கும் அணிக்கு ரூ.3 லட்சம், 3வது இடம் பிடிக்கும் அணிக்கு ரூ.2 லட்சம் வழங்கப்படும். போட்டிகள் ஜன.3-12 வரை மயிலாப்பூர், சாந்தோம் மேனிலைப் பள்ளி வளாகத்தில் உள்ள உள்விளையாட்டு அரங்கில் நடத்தப்படும்.

The post தமிழ்நாடு வாலிபால் லீக் ஜன.3ல் தொடக்கம் appeared first on Dinakaran.

Related Stories: