“தமிழ்நாட்டில் பாஜ பப்பு வேகாது’’ மதுரையில் இன்று நடப்பது முருகன் மாநாடு அல்ல… அரசியல் மாநாடு… அமைச்சர் பி.கே.சேகர்பாபு அட்டாக்

பெரம்பூர்: சென்னை அயனாவரத்தில் உள்ள காசிவிஸ்வநாதர் கோயிலில் 96.30 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் திருக்குள திருப்பணிகளை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு இன்று துவக்கிவைத்தார். இதில், இந்து சமய அறநிலையத்துறை ஆணையாளர் ஸ்ரீதரன் உள்பட பலர் கலந்துகொண்டனர். இதன்பின்னர் நிருபர்களிடம் அமைச்சர் சேகர்பாபு கூறியதாவது; இந்த காசி விஸ்வநாதர் கோயில் 200 ஆண்டுகள் பழமைவாய்ந்தது. இந்த கோயில் குளம் மாநகராட்சியின் கீழ் இருந்தது. தற்போது தங்களது துறை சார்ந்த இந்த குளத்தை மறுசீரமைப்பு பணிகளை மேற்கொள்ள இருக்கிறோம். இந்து சமய அறநிலையத்துறையில் 3,119 குடமுழுக்குகள் நடத்துள்ளது. இந்தாண்டு இறுதிக்குள் 3,500 கோயிலில் குடமுழுக்கு நடத்த திட்டமிட்டுள்ளோம். திமுக ஆட்சி ஆன்மிக ஆட்சி என்பது நிரூபிக்கும் வகையில் 1365 கோடி ரூபாய் உபயதாரர் நிதியாக கொடுத்துள்ளனர். மீண்டும் திமுக ஆட்சி தொடரும். இவ்வாறு கூறினார்.

மதுரையில் நடைபெறும் முருக பக்தர்கள் மாநாடு திருப்புமுனை ஏற்படுத்தும் என்று பாஜக கூறுகிறார்களா என்ற கேள்விக்கு அமைச்சர் சேகர்பாபு, ‘’ஒரு திருப்புமுனையும் ஏற்படுத்தாது. ஏற்கனவே வேலை தூக்கி அலைந்து அலைந்து பார்த்துவிட்டனர். இன்றைக்கு வாக்குப்பதிவா? அல்லது தேர்தலுக்கான முடிவை அறிவிக்கிறார்களா? ஒண்ணுமில்லை. ஏற்கனவே இதையெல்லாம் கையில் எடுத்து சுழற்றிப் பார்த்தார்கள். தமிழ்நாட்டில் பப்பு வேகாது’ என்றார். திமுக ஆட்சியை பொறுத்தவரை முருகனுக்கு பெருமை சேர்க்கக்கூடிய ஆட்சி. இந்த ஆட்சியைப்போல் முருகனுக்கு வரலாற்றில் எந்த ஆட்சியும் செய்ததில்லை. அனைத்து உலக முருக பக்தர் மாநாடு, திருச்செந்தூர் முருகன் கோயிலில் குடமுழுக்கு, 400 கோடி ரூபாய் அளவுக்கு திருப்பணிகள் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.

திருப்பரங்குன்றத்தில் குடமுழுக்கு நடைபெற உள்ளது. முருகர் எங்களது முதலமைச்சர் பக்கத்தில் இருக்கிறார். எது ஆன்மீகம், எது அரசியல் என்பதை ஆண்டவன் பார்த்துக்கொண்டிருக்கிறார். அவர்கள் நடத்தக்கூடிய மாநாடு முழுக்க முழுக்க அரசியல் மாநாடு. ஒவ்வொரு தேர்தலிலும் ஆன்மிகத்தை பாஜக கையில் எடுத்து வருகிறது. ராமர் கோயிலில் குடமுழுக்கு நடத்தினார்கள். ஆயிரம் கோடி அளவிற்கு திருவிழா நடத்தினார்கள். அந்த தொகுதியில் தேர்தல் முடிவு என்ன என்பது அவர்களுக்கு தெரியும். இவ்வாறு கூறினார்.

The post “தமிழ்நாட்டில் பாஜ பப்பு வேகாது’’ மதுரையில் இன்று நடப்பது முருகன் மாநாடு அல்ல… அரசியல் மாநாடு… அமைச்சர் பி.கே.சேகர்பாபு அட்டாக் appeared first on Dinakaran.

Related Stories: