தமிழ் மொழிக்கு ஏன் தர வரிசையில் முக்கியத்துவம் கொடுப்பதில்லை? தஞ்சை தமிழ் பல்கலை கேள்விக்கு கவர்னர் மழுப்பல் பதில்

சென்னை: தமிழ்நாடு உயர்கல்விச் சிறப்பு குறித்த மாநாடு மற்றும் தேசிய உயர்கல்வி நிறுவனங்களின் தரவரிசைப் பட்டியலில் இடம் பெற்ற பல்கலைக் கழகங்கள், கல்லூரிகளுக்கு பாராட்டு விழா ஆகியவை சென்னையில் உள்ள தமிழ்நாடு ஆளுநர் மாளிகையில் நேற்று நடந்தது. தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமை தாங்க, சென்னை ஐஐடியின் இயக்குநர் காமகோடி முன்னிலை வகித்தார். இதில் தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக பேராசிரியர் செல்வகுமார் பேசியதாவது: வெளியீடுகளின் தரத்தை பராமரிக்கும் அமைப்பு ஆங்கிலத்தில் தான் இருக்கிறது. தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் அனைத்தும் தமிழில் தான் இருக்கிறது. ஆங்கில இதழ்களை வைத்தே மதிப்பீடுகள் செய்யப்படுகிறது. இந்நிலையில் 50 சதவீத இதழ்கள் தமிழில் இருக்கும்போது தர வரிசைக்கு வருவதில் சிக்கல் இருக்கிறது. அதனால் தமிழ் மொழியில் உள்ளவை வர வாய்ப்பில்லை. தமிழ்ப் பல்கலைக்கழகத்துக்கும் தமிழ் மொழியில் உள்ள இதழ்களை தரவரிசைக்கான இணைய மென்பொருள் ஏற்பதில்லை. ஆங்கில மொழிக்கே அதிக அளவில் முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது.

அதிக அளவில் தமிழ் மொழியில் பேராசிரியர்கள் கட்டுரைகள் சமர்ப்பிக்கும் போது, சிலரின் வெளியீடுகள்தான் வருகின்றன. பெரும்பாலானவர்களின் இதழ்கள் வருவதில்லை. தரவரிசைப் பட்டியலில் இடம் பெற விண்ணப்பிக்கும் போது தமிழ் மொழியில் உள்ள இதழ்களை இணைய மென்பொருள் ஏற்க மறுக்கிறது. அதனால் தமிழ் மொழிக்கு ஏன் தரவரிசையில் முக்கியத்துவம் கொடுப்பதில்லை. இவ்வாறு பேராசிரியர் செல்வகுமார் பேசினார். ஆனால், தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் இந்த கேள்விக்கு ஆளுநரும், ஐஐடி இயக்குநரும் மழுப்பலாக பதிலளித்தனர். இதனால் பேராசிரியர்கள் ஏமாற்றம் அடைந்தனர். தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி பேசுகையில், ‘‘நீங்கள் தமிழ் மொழியில் மென்பொருளை உருவாக்க முன்வர வேண்டும். தமிழ் பல்கலைக் கழகமே அதை செய்யலாம். ஆராய்ச்சிகளை மேற்கொள்ள பல்வேறு நிதி திரட்டும் வழிகள் உள்ளன. அதை பயன்படுத்த பல்கலைக் கழகங்கள் முன்வர வேண்டும். உயர்கல்வி நிறுவனங்கள் பரஸ்பரம் தொடர்பில் இருந்தால் தான் சிறந்து விளங்க முடியும்’’ என்றார்.

The post தமிழ் மொழிக்கு ஏன் தர வரிசையில் முக்கியத்துவம் கொடுப்பதில்லை? தஞ்சை தமிழ் பல்கலை கேள்விக்கு கவர்னர் மழுப்பல் பதில் appeared first on Dinakaran.

Related Stories: