3 புதிய குற்றவியல் சட்டங்கள்.. எதற்காக இந்த சட்டங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன?: காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கேள்வி

சென்னை: ஒன்றிய அரசு கொண்டு வந்து இருக்கும் 3 புதிய குற்றவியல் சட்டங்களை கண்டித்து திமுக சட்டப்பேரவை சார்பில் ஒருநாள் அடையாள உண்ணாவிரத போராட்டம் நடைபெற்று வருகிறது. சென்னை எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் மைதானம் அருகே ஒன்றிய அரசின் 3 குற்றவியல் சட்டங்களை எதிர்த்து திமுக சட்டப்பேரவை சார்பில் மாபெரும் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்று வருகிறது. திமுக சட்டத்துறை செயலாளர் என்.ஆர்.இளங்கோ எம்.பி. தலைமையில் நடைபெறும் போராட்டத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் துவங்கி வைத்தார்.

போராட்டத்துக்கு நேரில் சென்று ஆதரவு தெரிவித்த பேசிய காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம்; பழைய சட்டங்களை காப்பியடித்து ஒன்றிய அரசு கொண்டுவந்துள்ள 3 புதிய குற்றவியல் சட்டங்கள் தேவையற்றது என்றார். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் உள்ளிட்டோரும் போராட்டத்திற்கு நேரில் ஆதரவு தெரிவித்தனர்.

அரசாங்கத்திற்கு எதிராக உண்ணாவிரத போராட்டம் செய்தால் தேச விரோத செயல் என்றும், ஒருவர் கைது செய்யப்பட்டால் அவரது சொத்துக்களை பறிமுதல் செய்யலாம் என்றும் ஒன்றிய அரசு கொண்டுவந்துள்ள சட்டம் ஆபத்தானது என்றும் முத்தரசன் எச்சரித்தார். ஒன்றிய அரசு அமல்படுத்தி இருக்கும் குற்றவியல் சட்டங்களால் நீதித்துறையில் ஏற்படும் குழப்பங்கள் மற்றும் மக்களுக்கு ஏற்படும் பாதிப்புகளையும் போராட்டத்தில் பேசியவர்கள் எடுத்துரைத்தனர். திமுக மட்டுமின்றி கூட்டணி கட்சி நிர்வாகிகள், வழக்கறிஞர்கள், மூத்த பத்திரிகையாளர்கள் உட்பட பல்வேறு தரப்பினரும் போராட்டத்தில் பங்கேற்றனர்.

The post 3 புதிய குற்றவியல் சட்டங்கள்.. எதற்காக இந்த சட்டங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன?: காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கேள்வி appeared first on Dinakaran.

Related Stories: