தமிழகத்தில் 12ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வரும் 12ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் நேற்றிரவு முதல் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. எழும்பூர், சென்ட்ரல், புரசைவாக்கம், கிண்டி, ஆலந்தூர், ஈக்காட்டுத்தாங்கல், அசோக் நகர், வடபழனி, அரும்பாக்கம், கோயம்பேடு, முகப்பேர் உள்பட நகரின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தது. இந்த நிலையில், வரும் 12ம் தேதி வரை மிதமான மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கை:
மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வருகின்ற 12ம்தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் மாலை மற்றும் இரவு வேளையில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது மழை பெய்ய வாய்ப்புள்ளது.

தமிழக கடலோர பகுதிகளில் 9ம் தேதி வரை மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய தென்தமிழக கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். வங்கக்கடல் பகுதிகளில் இன்று மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். தெற்கு, மத்திய மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் வடக்கு ஆந்திர கடலோர பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

மேலும் வரும் 9ம்தேதி வரை மத்திய அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். தென்கிழக்கு அரபி கடலின் வடக்கு பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். எனவே இந்த பகுதிகளுக்கு மீனவர்கள் செல்லவேண்டாம். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post தமிழகத்தில் 12ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: