தமிழ் உள்பட மாநில மொழிகளில் வனப்பாதுகாப்பு சட்ட மசோதா: மதுரை எம்பி வலியுறுத்தல்

மதுரை: வனப்பாதுகாப்புச் சட்டத் திருத்த மசோதாவை தமிழ் உட்பட மாநில மொழிகளில் வெளியிட வேண்டுமென நாடாளுமன்ற கூட்டுக்குழு தலைவருக்கு மதுரை எம்பி சு.வெங்கடேசன் வேண்டுகோள் விடுத்துள்ளார். மதுரை எம்பி சு.வெங்கடேசன் அறிக்கை: நாடாளுமன்றத்தில் கடந்த மார்ச் 29ம் தேதி வனப்பாதுகாப்பு சட்டம் 1980ஐ திருத்துவதற்கான பாரஸ்ட் (கன்சர்வேசன்) அமெண்ட்மென்ட் பில்-2023 எனும் மசோதா அறிமுகப்படுத்தப்பட்டது. காட்டையும், காட்டுவளங்களையும் வணிக நலன் கருதி தனியாருக்குத் திறந்துவிடும் நோக்கத்தோடு கொண்டு வரப்பட்ட இம்மசோதாவிற்கு எதிர்ப்பு கிளம்பிய நிலையில் அம்மசோதா நாடாளுமன்ற கூட்டுக்குழுவின் பரிசீலனைக்கு அனுப்பப்பட்டது. இம்மசோதாவின் மீது மே 18க்குள் பொதுமக்கள் கருத்துகளை தெரிவிக்குமாறு, நாடாளுமன்ற கூட்டுக்குழுத்தலைவர் ராஜேந்திர ஆக்ரவால் எம்பி அறிவித்துள்ளார். ஆங்கிலம் அல்லது இந்தியில் மட்டுமே கருத்து தெரிவிக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மசோதாவும் ஆங்கிலத்தில் மட்டுமே கிடைக்கப் பெறுகிறது.

நாடு முழுவதிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் ஒரு மசோதாவை, இந்தியாவின் அனைத்து மொழிகளிலும் வெளியிட்டு, தங்கள் தாய்மொழியில் கருத்து தெரிவிக்க அனுமதிப்பதே ஜனநாயக நடைமுறை. பல மாநில உயர்நீதிமன்ற உத்தரவுகளின்படி வரைவு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிவிக்கை 2020 தமிழ் உள்ளிட்ட பிற மொழிகளில் வெளியானது குறிப்படத்தக்கது. ஆகவே, இந்த வனப்பாதுகாப்பு சட்டத்திருத்த மசோதாவை தமிழ் உள்ளிட்ட அங்கீகரிக்கப்பட்ட மொழிகளில் வெளியிட வேண்டும். அதன் மீதான கருத்துகளையும் அனைத்து மொழிகளிலும் பெறவேண்டும் என்பதை வலியுறுத்தி நாடாளுமன்ற கூட்டுக் குழுத் தலைவருக்கும், ஒன்றிய அமைச்சர் பூபேந்தர் யாதவிற்கும் கடிதம் எழுதியுள்ளேன். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

The post தமிழ் உள்பட மாநில மொழிகளில் வனப்பாதுகாப்பு சட்ட மசோதா: மதுரை எம்பி வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Related Stories: