நாடாளுமன்றத்தில் கன்னிப் பேச்சு 5 முக்கிய பிரச்னைகளை முன்னெடுத்து பேசினேன்: மதிமுக எம்.பி. துரை வைகோ அறிக்கை

சென்னை: மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி எம்.பி.யுமான துரை வைகோ நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் பங்கேற்று எனது கன்னிப் பேச்சை பதிவு செய்தேன். திருச்சி நாடாளுமன்றத் தொகுதியைச் சேர்ந்த 10 லட்சத்துக்கும் அதிகமான மக்களின் எதிர்பார்ப்பையும் நம்பிக்கையையும் என்னுடன் கொண்டு வந்திருக்கிறேன்.. பெல் தொழிற்சாலை, ஓஎப்டி, கோல்டன் ராக் ரயில்வே பணிமனை மற்றும் ஹப் ஆகிய பொதுத்துறை நிறுவனங்களில் வேலை வாய்ப்பை அதிகப்படுத்தவும், இதை நம்பியிருக்கும் சிறு, குறு நிறுவனங்களுக்கு பணி வாய்ப்புகளை அதிகப்படுத்தி திருச்சி நகரத்தின் பொருளாதார வளத்தை உயர்த்தவும் கோரிக்கை வைக்கிறேன்.

இரண்டாவதாக, இலங்கை கடற்படையால் பாதிக்கப்படும் பெரும்பாலான மீனவர்கள் பின்தங்கிய மாவட்டங்களான ராமநாதபுரம் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களைச் சேர்ந்தவர்களாக இருக்கிறார்கள். இதுவரை 3020 மீனவர்கள் கைது செய்யப்பட்டு 340 மீன்பிடி படகுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இப்பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும். 3வதாக மகாநதி, கோதாவரி, கிருஷ்ணா, பெண்ணாறு, காவிரி, வைகை, குண்டாறு ஆகிய தென்னக நதிகளை இணைப்பது முழு தீபகற்பப் பகுதிக்கும் வரப்பிரசாதமாக அமையும் எனக் கூறி, காவிரி – வைகை – குண்டாறு இணைப்புத் திட்டத்திற்கு மாநில சுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீட்டு ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது.

இதற்கு ரூ.7000 கோடி தேவைப்படும் நிலையில், தமிழக அரசு தனது சிறிய ஆதாரங்களுடன் இப்பணியை ஏற்கனவே முன்னெடுத்துள்ளது. எவ்வாறாயினும் தீபகற்ப நதிகளை இணைக்கும் முழுத் திட்டத்தை தொடங்கவும், நிதி அளிக்கவும் ஒன்றிய அரசு முன் வரும் என நம்புகிறேன். 4வதாக தேசிய தேர்வு முகமையால் நடத்தப்படும் நீட் மற்றும் இதர தேர்வுகளில் நடைபெற்றுள்ள முறைகேடுகள் மற்றும் குளறுபடிகளை நீக்குவதற்கு உண்டான வழிமுறைகள் எதுவும் குடியரசு தலைவர் உரையில் இடம்பெறாததற்கு வருந்துகிறேன். அடுத்ததாக, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழக சட்டமன்றத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு மசோதா 2022க்கு குடியரசு தலைவர் ஒப்புதல் அளிக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன். நீட் தேர்வின் பாதிப்புகளை குறிப்பிட்டு, ஏழை, எளிய அடித்தட்டு மாணவர்களின் நலன் கருதி நீட் தேர்வை முழுமையாக தடை செய்ய வலியுறுத்துகிறேன்.

மேற்கண்டவாறு உரையை தயாரித்து இருந்தேன். ஆனால் உரையாற்றுவதற்கு 5 நிமிடங்கள் வாய்ப்பு தரப்படும் என தெரிவித்து இருந்த நிலையில், 2 நிமிடங்கள் மட்டுமே வழங்கப்பட்டன. இதனால் நான் தயாரித்து வைத்திருந்ந உரையின் பல பகுதிகளை விட வேண்டியதாயிற்று. முழுமையாக பேச முடியவில்லை. உரையை நிறைவு செய்வதற்கு உள்ளாகவே பேச்சை நிறுத்தும்படி ஆயிற்று. எனவே, எனக்கு நிறைவு இல்லை என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோவிடம் கூறினேன். ஆனால் அவர் எனது கன்னிப் பேச்சை வெகுவாகப் பாராட்டினார். திட்டமிட்டபடி உரையாற்ற முடியாவிட்டாலும் அனைவரின் நம்பிக்கையையும், எதிர்பார்ப்பையும் பூர்த்தி செய்ய முயன்று இருக்கிறேன்.
இவ்வாறு துரை வைகோ அறிக்கையில் கூறியுள்ளார்.

The post நாடாளுமன்றத்தில் கன்னிப் பேச்சு 5 முக்கிய பிரச்னைகளை முன்னெடுத்து பேசினேன்: மதிமுக எம்.பி. துரை வைகோ அறிக்கை appeared first on Dinakaran.

Related Stories: