‘தமிழ்நாடு நாள்’ கொண்டாட்டம் பள்ளி மாணவர்களுக்கு கட்டுரை, பேச்சுப்போட்டி: நாளை நடக்கிறது

திருவள்ளூர் : தமிழ்நாடு நாள் கொண்டாட்டத்தை முன்னிட்டு, நாளை பள்ளி மாணவர்களுக்கு கட்டுரை, பேச்சு போட்டிகள் நடக்கிறது. தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தாய்த்தமிழ்நாட்டிற்கு ‘தமிழ்நாடு’ என அண்ணா பெயர் சூட்டிய ஜூலை 18ம் நாள் ‘தமிழ்நாடு நாளாக’ கொண்டாடப்படும் என அறிவித்தார். அதனடிப்படையில், திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் 6 முதல் 12ம் வகுப்புவரை பயிலும் மாணவர்களுக்கு மாவட்ட அளவிலான கட்டுரை, பேச்சுப் போட்டிகளை நடத்தி, வெற்றி பெறும் மாணவர்களுக்கு முதல்பரிசு ரூ.10 ஆயிரம், 2ம் பரிசு ரூ.7 ஆயிரம், 3ம் பரிசு ரூ.5 ஆயிரம் மற்றும் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட உள்ளன.

திருவள்ளூர் மாவட்டத்தில் பள்ளி மாணவர்களுக்கான கட்டுரை, பேச்சுப் போட்டிகள் வருகிற 10ம் தேதி காலை 10 மணிக்கு நடக்கிறது.  கட்டுரைப்போட்டி ஆட்சி மொழித் தமிழ் என்ற தலைப்பிலும், பேச்சு போட்டி குமரித்தந்தை மார்சல் நேசமணி, தென்னாட்டு பெர்னாட்ஷா பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதி என்ற தலைப்புகளில் திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள கூட்ட அரங்கில் நடைபெற உள்ளன.

இந்த போட்டிகளுக்கு திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கல்வி மாவட்டத்திற்கு ஒரு போட்டிக்கு 30 பேர் வீதம் 2 கல்வி மாவட்டத்திற்கு 60 பேர் என இரண்டு போட்டிகளுக்கு கட்டுரை போட்டி 60 பேர், பேச்சுப் போட்டி 60 என 120 பேரை தேர்வு செய்து மாவட்ட அளவிலான போட்டிகளில் பங்கேற்க அனுப்பி வைக்க வேண்டும். திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகள் கலந்துகொண்டு பயன்பெறுமாறு மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் தெரிவித்துள்ளார்.

The post ‘தமிழ்நாடு நாள்’ கொண்டாட்டம் பள்ளி மாணவர்களுக்கு கட்டுரை, பேச்சுப்போட்டி: நாளை நடக்கிறது appeared first on Dinakaran.

Related Stories: