நெல்லை, தென்காசி, தூத்துக்குடியில் 15 மையங்களில் வழக்கமான கெடுபிடிகளுடன் நீட் தேர்வு

*அணிகலன்கள், கைக்கடிகாரங்களுக்கு அனுமதியில்லை

நெல்லை : நெல்லை, தென்காசி, தூத்துக்குடியில் 15 மையங்களில் வழக்கமான கெடுபிடிகளுடன் நீட் தேர்வை மாணவ, மாணவிகள் எழுதினர். அணிகலன்கள், கைக்கடிகாரம் உள்ளிட்டவைகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. பலத்த பரிசோதனைக்கு பிறகே தேர்வு எழுத மாணவர்கள் அனுமதிக்கப்பட்டனர். நடப்பு கல்வியாண்டில் மருத்துவம், பல் மருத்துவம், ஆயுஸ் படிப்புகளில் சேருவதற்கான நீட் தகுதி தேர்வு நேற்று நாடு முழுவதும் நடந்தது. நெல்லை மாவட்டத்தில் 11 மையங்களிலும், தென்காசி மாவட்டத்தில் ஒரு மையத்திலும் தேர்வு நடத்தப்பட்டது.

மொத்தம் 6,879 பேர் தேர்வு எழுத அழைக்கப்பட்டிருந்தனர். இதில் 6,744 பேர் தேர்வு எழுதினர். 135 பேர் தேர்வு எழுத வரவில்லை. அதிகபட்சமாக மகாராஜநகர் பள்ளி மையத்தில் 19 பேர் தேர்வு எழுத வரவில்லை. தென்காசி மாவட்டத்தில் சங்கரன்கோவில் பள்ளி மையத்தில் நடந்த தேர்வை 17 பேர் எழுதவில்லை.

தூத்துக்குடி மாவட்டத்தில் 3 மையங்களில் நீட் தேர்வு எழுத 1,888 பேர் விண்ணப்பித்து இருந்தனர். இதில் 1,844 பேர் தேர்வு எழுதினர். 44 பேர் தேர்வு எழுத வரவில்லை.
நீட் தேர்வு எழுத வந்த மாணவ- மாணவிகளிடம் வழக்கமான பரிசோதனை, கெடுபிடிகள் மேற்கொள்ளப்பட்டன. தேர்வு மையங்களுக்கு சென்ற மாணவிகள் காதணிகள் அணிய தடை என்பதால் உடன் வந்த பெற்றோரிடம் அவற்றை கழற்றி கொடுத்தனர். தலையில் கிளிப் அணிய தடை விதிக்கப்பட்டிருந்தது. ரப்பரால் ஆன பேன்ட் அணிய அனுமதிக்கப்பட்டனர்.

துப்பட்டா அணியவும் அனுமதிக்கப்படவில்லை. ஹால் டிக்கெட்டில் ஒட்டப்பட்டிருந்த புகைப்படத்தை பரிசோதனையாளர்கள் படம் பிடித்ததுடன் மாணவர்களையும் செல்போனில் படம் பிடித்து தேர்வுக்குரிய ஆப்கள் மூலம் சரிபார்த்தனர். அவர்களது விரல் ரேகைகளும் பதிவு செய்யப்பட்டன. ஆள்மாறாட்டம் செய்து மோசடி செய்வதை தவிர்ப்பதற்கான இந்த நடைமுறை மேற்கொள்ளப்பட்டது.தேர்வுக்கூடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டது. மதியம் 2 மணி முதல் மாலை 5.20 மணி வரை தேர்வு நடந்தது.

வேதியியல் வினாக்கள் சவாலானதாக இருந்தது-மாணவர்கள் பேட்டி

நீட் தேர்வு முடிந்து வெளியே வந்த மாணவ, மாணவிகள் பலர், தேர்வு ஓரளவு எளிதாக இருந்ததாக தெரிவித்தனர். ஷைனி (பாளை): வினாக்கள் ஓரளவு சுலபமாக இருந்தது. இயற்பியல் பாட வினாக்கள் எளிதாக இருந்தது. வேதியியல் பாட வினாக்கள் சவாலானதாக இருந்தது. தேர்ச்சிக்கான நம்பிக்கை இருக்கிறது.

ஆண்டோ (கீழநீலிதநல்லூர்): முதல்முறையாக இந்த தேர்வை எழுதியுள்ளேன். பள்ளியில் பெற்ற பயிற்சி காரணமாக தேர்வை அச்சமின்றி தெளிவாக எழுத முடிந்தது. வேதியியல் பாட வினாக்கள் மாடரேட்டாக இருந்தது.

நிதிஷ்கண்ணா (பாளை): முதல்முறையாக நீட் தேர்வை எழுதியுள்ளேன். வேதியியல் பாட வினாக்கள் சற்று கடினமாக இருந்தது. தேர்ச்சிக்கு தேவையான எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது.
அபிஷேக் (பெருமாள்புரம்): முதல் முறையாக நீட் தேர்வை சந்தித்தேன். வினாக்கள் எதிர்பார்த்தபடி இருந்தது. வேதியியல் பாட வினாக்கள், யோசித்து எழுதும் வகையில் இருந்தது. நன்கு பயிற்சி பெற்றவர்களுக்கு இந்த சவால் சுலபமானதாக இருந்தது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

The post நெல்லை, தென்காசி, தூத்துக்குடியில் 15 மையங்களில் வழக்கமான கெடுபிடிகளுடன் நீட் தேர்வு appeared first on Dinakaran.

Related Stories: