தேர்வு எழுத சொன்னதால் ஆத்திரம் மாணவன் தாக்கியதில் ஆசிரியர் படுகாயம்: போலீசார் விசாரணை

திருவொற்றியூர்: திருவொற்றியூர் அரசு பள்ளியில் தேர்வு எழுத சொன்ன ஆசிரியரை மாணவன் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருவொற்றியூர் சக்திபுரத்தை சேர்ந்தவர் சேகர் (45). திருவொற்றியூர் ஜெயகோபால் கரோடியா அரசினர் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இதே பள்ளியில் பாரதியார் நகரை சேர்ந்த 12ம் வகுப்பு படிக்கும் மாணவன், கடந்த 21ம் தேதியில் இருந்து பள்ளிக்கு வரவில்லை. இதனால் வகுப்பு ஆசிரியரான சேகர், அந்த மாணவனிடம் தந்தையை அழைத்து வருமாறு கூறியுள்ளார். இதையடுத்து, கடந்த 30ம் தேதி மாணவன், தந்தையுடன் பள்ளிக்கு வந்துள்ளார்.

அப்போது ஆசிரியர் சேகர், மாணவனின் தந்தையிடம், ‘‘உங்களது மகன் அடிக்கடி விடுமுறை எடுத்து, பள்ளிக்கு தொடர்ந்து வரவில்லை என்றால், தேர்வு சரியாக எழுத முடியாது. அதனால் தொடர்ந்து பள்ளிக்கு வரவேண்டும் எனவும், நன்றாக படிக்க வேண்டும்,’’ என்று அறிவுரை கூறியுள்ளார். அப்போது, ‘‘இனிமேல் எனது மகன் ஒழுங்காக பள்ளிக்கு வருவான்,’’ என வருத்தம் தெரிவித்த மாணவனின் தந்தை, இனிமேல் இப்படி நடக்காது, என எழுதிக் கொடுத்துவிட்டு சென்றார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் வணிகவியல் இரண்டாம் கட்ட தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வில் சம்பந்தப்பட்ட அந்த மாணவன் தேர்வு எழுதாமல் தூங்கியுள்ளான். இதைப்பார்த்து ஆசிரியர் சேகர், மாணவனை எழுப்பி தேர்வு எழுத வகுப்புக்கு செல்லுமாறு கூறியுள்ளார். அப்போது, ஆசிரியரிடம் வாக்குவாதம் செய்த அந்த மாணவன், ஒரு கட்டத்தில் ஆசிரியரை சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் கண்ணில் காயமடைந்த ஆசிரியர் சேகரை, சக ஆசிரியர்கள் மீட்டு, ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து திருவொற்றியூர் போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

The post தேர்வு எழுத சொன்னதால் ஆத்திரம் மாணவன் தாக்கியதில் ஆசிரியர் படுகாயம்: போலீசார் விசாரணை appeared first on Dinakaran.

Related Stories: