பலத்த சூறாவளி காற்றால் ஊட்டியில் 50 மரங்கள் விழுந்தன: மஞ்சூர் வழித்தடத்தில் போக்குவரத்து பாதிப்பு

ஊட்டி: நீலகிரி மாவட்டத்தில் கடந்த 15 நாட்களாக நீடித்து வந்த மழை முற்றிலும் குறைந்த நிலையில் பலத்த சூறாவளி காற்று வீசியதால் ஊட்டி சுற்று வட்டார பகுதிகளில் 50க்கும் மேற்பட்ட மரங்கள் விழுந்தன. நீலகிரி மாவட்டத்தில் காலநிலையில் மாற்றம் ஏற்பட்டு இம்மாதம் கடந்த 13ம் தேதி முதல் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்தது. ஊட்டி, குந்தா, கூடலூர், பந்தலூர் பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. இதுதவிர நீர்பிடிப்பு பகுதிகளான அப்பர் பவானி, அவலாஞ்சி, எமரால்டில் கனமழை கொட்டியது. பலத்த சூறாவளி காற்றுடன் பெய்த கன மழை காரணமாக ஊட்டி-கூடலூர், ஊட்டி-இத்தலார் சாலை உள்பட முக்கிய சாலைகளில் மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிப்பு, மின் துண்டிப்பு போன்றவைகள் ஏற்பட்டன. சிறு சிறு மண் சரிவுகள் ஏற்பட்டன.

கூடலூர் பகுதியில் குடியிருப்பு சுவர்களில் விரிசல் உள்பட பாதிப்புகள் ஏற்பட்டன. கடும் குளிர் நிலவி வருவதால், தேயிலை தோட்டங்கள், காய்கறி தோட்டங்கள் போன்றவற்றிற்கு வேலைக்கு செல்லும் கூலி தொழிலாளர்கள் பாதிப்படைந்து வருகின்றனர். குளிர் காரணமாக சுற்றுலா பயணிகளின் வருகையும் குறைந்தது. இந்நிலையில் கடந்த 15 நாட்களாக பெய்த கனமழை நேற்று முன்தினம் மதியம் முதல்குறைந்தது. நேற்று காலை முதல் முற்றிலும் மழையின்றி மேக மூட்டமாக காணப்பட்டது. அதே சமயம் பலத்த சூறாவளி காற்று வீசியது.

இதனால் நேற்று முன்தினம் மதியம் முதல் ஊட்டி எட்டின்ஸ் சாலை, கூடலூர் சாலை, கோத்தகிரி சாலை என சுமார் 20க்கும் மேற்பட்ட இடங்களில் மரங்கள் விழுந்தன. இவற்றை தீயணைப்புத்துறையினர் வெட்டி அகற்றினர். நேற்று அதிகாலை ஊட்டி-மஞ்சூர் சாலையில் லவ்டேல் அருகே ரைட்டர் கடை பகுதிகளில் ஒன்றன் பின் ஒன்றாக 5 கற்பூர மரங்கள் சாலையில் விழுந்தன. இதனால் இச்சாலையில் 3 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதித்தது. இவற்றை நெடுஞ்சாலைத்துறை மற்றும் தீயணைப்புத்துறையினர் வெட்டி அகற்றினர். இதேபோல் கீழ் கைகாட்டி பகுதியில் மரம் விழுந்து போக்குவரத்து பாதித்தது. இவற்றை வாகன ஓட்டிகளே சீர் செய்தனர்.

நேற்று மதியம் ஊட்டி-இத்தலார் சாலையில் பர்ன்ஹில் பகுதியிலும், பஸ் நிலையம் அருகேயுள்ள மீன்வளத்துறை கட்டிடத்தின் மீதும் ராட்சத கற்பூர மரங்கள் விழுந்தன. இவற்றை தீயணைப்பு துறையினர் வெட்டி அகற்றினர். பலத்த காற்று வீசி வருவதால் பல இடங்களில் மின் துண்டிப்புகள் ஏற்பட்டு வருகின்றன. இதனால் பல பகுதிகளும் இருளில் மூழ்கி உள்ள நிலையில், மக்கள் அவதியடைந்து வருகின்றனர். மேலும் பலத்த சூறாவளி காற்று காரணமாக ஊட்டி சுற்று வட்டார பகுதிகளில் நேற்று முன்தினம் முதல் நேற்று மாலை வரை 50க்கும் மேற்பட்ட மரங்கள் விழுந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

மலை ரயில் சேவை ரத்து
லவ்டேல் பகுதியில் மலை ரயில் தண்டவாளத்திலும் மரம் விழுந்தது. இதேபோல தண்டவாளத்தில் பல இடங்களிலும் மரங்கள் விழுந்தன. இதனால் பாதுகாப்பு கருதி ஊட்டி-குன்னூர் இடையே மலை ரயில் சேவை நேற்று ரத்து செய்யப்பட்டது.

The post பலத்த சூறாவளி காற்றால் ஊட்டியில் 50 மரங்கள் விழுந்தன: மஞ்சூர் வழித்தடத்தில் போக்குவரத்து பாதிப்பு appeared first on Dinakaran.

Related Stories: