விளையாட்டுத்துறை கட்டமைப்பை மேம்படுத்த ஏராளமான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது அரசு: கேலோ இந்தியா விளையாட்டு போட்டி துவக்க விழாவில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு

சென்னை: கேலோ இந்தியா இளைஞர் போட்டிகள்-2023 துவக்க விழா, இலச்சினை, சின்னம், சுடர் நிகழ்வுகளின் துவக்க விழா சென்னை கலைவாணர் அரங்கில் நேற்று நடந்தது. விழாவிற்கு தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக ஒன்றிய இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டு துறை, தகவல் ஒளிபரப்புத்துறை அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர் கலந்து கொண்டார். இதில் கவுரவ விருத்தினர்களாக விஸ்வநாதன் ஆனந்த், அர்ஜுனா விருது பெற்ற ஒலிம்பிக் வீராங்கனை பவானி தேவி, ஜோஷ்னா சின்னப்பா, ஹாக்கி ஆசிய கோப்பை வெண்கல பதக்கம் வென்ற ச.மாரீஸ்வரன் பங்கேற்றனர்.

விழாவில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது: விளையாட்டில் சாதித்து வருவோருக்கு புதிய புதிய களங்களை அமைத்துக் கொடுப்பதுடன், புதிய திறமையாளர்களை அடையாளம் கண்டு, அவர்களுக்கு வாய்ப்புகளை உருவாக்கித் தர வேண்டும் என்பதில் தமிழ்நாடு அரசு உறுதியுடன் உள்ளது. சமீபத்தில் நடைபெற்ற கேலோ இந்தியா பாரா யூத் கேம்ஸில் கூட 20 தங்கப்பதக்கம் 8 வெள்ளிப்பதக்கம் மற்றும் 14 வெண்கலப்பதக்கங்களை பெற்று தமிழ்நாடு மூன்றாவது இடத்தை பிடித்தது. மேலும், ஜெர்மனியில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான தடகளப்போட்டி, சீனாவில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான ஆசிய தடகள போட்டி போன்றவற்றிலும் தமிழ்நாட்டு வீரர்கள் பதக்கங்களை குவித்து பெருமைத் தேடித்தந்தனர். கடந்த ஓராண்டில் விளையாட்டுத்துறை கட்டமைப்பை மேம்படுத்த ஏராளமான நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது. தமிழ்நாட்டில் நடத்தும் இந்தப் போட்டியை கேலோ இந்தியா யூத் கேம்ஸ் என்று சொல்லும் போது, சிலருக்கு புரியவில்லை. வெளி மாநிலங்களில் கேலோ இந்தியா போட்டிகளை நடத்தும் போது, அந்த மாநில மொழிகளில், அதற்கான பெயரை இட வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.

The post விளையாட்டுத்துறை கட்டமைப்பை மேம்படுத்த ஏராளமான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது அரசு: கேலோ இந்தியா விளையாட்டு போட்டி துவக்க விழாவில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு appeared first on Dinakaran.

Related Stories: