மெரினா சாலையில் லாரி மோதி மாநில கல்லூரி மாணவி பலி: மற்றொருவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி

சென்னை: மெரினா காமராஜர் சாலையில் ஸ்கூட்டரில் சென்ற போது, டேங்கர் லாரி மோதி மாநில கல்லூரி முதுநிலை பட்டதாரி மாணவி ஒருவர் உயிரிழந்தார். மற்றொரு மாணவி ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சென்னை திருவல்லிக்கேணி டி.பி.கோயில் தெருவை சேர்ந்தவர் ரேணுகாதேவி(23). இவர் மாநில கல்லூரியில் பிஎச்டி கெமிஸ்ட்ரி இறுதி ஆண்டு படித்து வருகிறார். இவர் வழக்கம் போல், நேற்று கல்லூரிக்கு தன்னுடன் படிக்கும் ஆர்த்தி(24) என்பவருடன் ஸ்கூட்டரில் வந்துள்ளார். மெரினா காமராஜர் சாலையில் உள்ள லேடி வெலிங்டன் கல்லூரி அருகே வரும் போது, முன்னால் சென்ற கார் ஒன்று திடீரென இடதுபுறம் திரும்பியதை கண்ட ரேணுகாதேவி பதற்றத்துடன் வலது புறம் திரும்ப முயன்ற போது, எதிர்பாராத விதமாக ரேணுகாதேவி மற்றும் ஆர்த்தி ஆகியோர் ஸ்கூட்டரில் இருந்து நிலை தடுமாறி கீழே விழுந்தனர்.

அப்போது பின்னால் அமர்ந்து இருந்த ஆர்த்தி மீது டேங்கர் லாரி மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே ஆர்த்தி தலையில் பலத்த காயமடைந்து துடிதுடித்து உயிரிழந்தார். ஸ்கூட்டரை ஓட்டி வந்த ரேணுகாதேவி காயங்களுடன் உயிர்தப்பினார். விபத்து குறித்து தகவல் அறிந்த அண்ணாசதுக்கம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உயிரிழந்த ஆர்த்தி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், காயமடைந்த ரேணுகாதேவியை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்தனர். பின்னர் விபத்து குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், டேங்கர் லாரியை ஓட்டிய தாம்பரத்தை சேர்ந்த மாடசாமி(45) என்பவரை கைது செய்தனர். இந்த விபத்தால் சிறிது நேரம் மெரினா காமராஜர் சாலையில் பரபரப்பு ஏற்பட்டது.

 

The post மெரினா சாலையில் லாரி மோதி மாநில கல்லூரி மாணவி பலி: மற்றொருவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி appeared first on Dinakaran.

Related Stories: