தமிழ்நாட்டில் கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி 100 இடங்களில் சிறப்பு பட்டா முகாம்: அரசு அறிவிப்பு

சென்னை: கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி தமிழகம் முழுவதும் 100 இடங்களில் சிறப்பு பட்டா முகாம் நடத்தப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து வருவாய்த்துறை அரசு கூடுதல் தலைமைச்செயலாளர் குமார் ஜெயந்த், அனைத்து மாவட்ட ஆட்சியருக்கும் எழுதியுள்ள கடிதம்: மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞரின் நூற்றாண்டு விழா கொண்டாட்டங்கள் 2023 ஜூன் மாதம் முதல் 2024 ஜூன் மாதம் வரை நடைபெறுவதையொட்டி தமிழகம் முழுவதும் 100 இடங்களில் சிறப்பு பட்டா முகாம்கள் நடத்துவது குறித்து அரசால் ஆய்வு செய்யப்பட்டது. அதன்படி, வீடற்ற ஏழை எளிய மக்கள் அனைவருக்கும் சொந்தமாக குடியிருப்பு வசதியினை உறுதி செய்யும் வகையில், வருவாய் துறையின் மூலம் தகுதியான பயனாளிகளுக்கு கீழ்க்கண்ட வழிமுறைகளை பின்பற்றி இலவச வீட்டுமனைப்பட்டாக்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

* நத்தம் புறம்போக்கு நிலங்களில் வீட்டுமனைப்பட்டா: கிராம நத்தமாக ஒதுக்கப்பட்ட நிலங்களிலிருந்து தகுதியுடைய, வீடற்ற ஏழை மக்களுக்கு இலவச வீட்டுமனைகள் ஒப்படை செய்யப்படுகின்றன. அந்தவகையில், நத்தம் வகைப்பாடு கொண்ட நிலங்கள் போதுமானதாக இல்லாத நேர்வுகளில், பிற ஆட்சேபனையற்ற அரசு புறம்போக்கு நிலங்களை தேர்வு செய்து வருவாய் கோட்டாட்சியர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆகியோர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தை பயன்படுத்தி நத்தமாக வகைப்பாடு மாற்றம் செய்தும் பட்டாக்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

* சிறப்பு இணையவழிப்பட்டா: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையால் ஏற்கனவே கடந்த காலங்களில் நிலஎடுப்பு செய்யப்பட்ட நிலங்களில் வீடுகட்டி வசித்து வரும் பயனாளிகளுக்கு இணையவழியில் வீட்டுமனைப்பட்டாக்கள் வழங்கப்பட்டு வருவதுடன், அந்நிலங்களில் காலியாக உள்ள மனைகள் குறித்த விவரங்கள் கணக்கெடுக்கப்பட்டு, அவற்றில் தகுதியான பயனாளிகளுக்கும் பிரத்யேக மென்பொருள் வாயிலாக இணையவழி பட்டாக்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

* விளிம்புநிலை மக்களுக்கு இலவச வீட்டுமனைப்பட்டா: வீடற்ற மற்றும் ஆட்சேபகரமான புறம்போக்கு நிலங்களில் வசித்து வரும் விளிம்பு நிலை மக்களுக்கு தகுதியான அரசு புறம்போக்கு நிலங்கள் கண்டறிந்து, அவை நத்தமாக வகைப்பாடு மாற்றம் செய்து இலவச வீட்டுமனைப்பட்டாக்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

* நகர மற்றும் நத்தம் நிலவரித்திட்டப் பட்டா:
மாநிலம் முழுவதும் நிலவரி திட்ட பணிகள் நிறைவு பெறாத நகரங்கள் மற்றும் விடுபட்டுள்ள சில கிராமங்களில் தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் நிலவரி திட்டப் பணிகள் அடிப்படையில் நீண்ட காலமாக குடியிருந்து வரும் மக்களுக்கு அனுபவம் மற்றும் ஆவணங்களின் அடிப்படையில் பட்டாக்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

* பட்டா மாறுதல் ஆணைகள்: தனிநபர்களுக்கு சொந்தமான பட்டா நிலங்களில் மேற்கொள்ளப்படும் சொத்து பரிமாற்றங்களின் அடிப்படையில் இணையவழியில் (இ- சேவை மூலம் பெறப்படும் மனுக்கள் மற்றும் சார் பதிவாளர்களிடமிருந்து இணையவழியில் பெறப்படும் மனுக்கள்) பெறப்படும் உட்பிரிவுடன் கூடிய உட்பிரிவற்ற பட்டா மாறுதல் மனுக்களின் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு இணைய வழியில் பட்டா மாற்ற ஆணைகள் வழங்கப்பட்டு வருகின்றன.

* வன உரிமைச் சட்டத்தின் கீழான பட்டாக்கள்: பாதுகாக்கப்பட்ட வனங்களில் நீண்டகாலமாக குடியிருந்து, வேளாண்மை செய்துவரும் மலைவாழ் மக்கள் மற்றும் பழங்குடியினருக்கு அவர்கள் வசிக்கும் மற்றும் வேளாண்மை செய்து வரும் இடத்திற்கான நில உரிமைப் பட்டாக்கள் வழங்கப்பட்டு வருகின்றன. அதேபோல, கலைஞரின் நூற்றாண்டு விழா கொண்டாட்டங்கள் 2023 ஜூன் மாதம் முதல் 2024 ஜூன் மாதம் வரை நடைபெறுவதை முன்னிட்டு தமிழகம் முழுவதும் 100 இடங்களில் சிறப்பு பட்டா முகாம்கள் நடத்த அரசால் முடிவு செய்யப்பட்டுள்ளது. அதனடிப்படையில், மாவட்டந்தோறும் மேற்குறிப்பிட்ட சிறப்பு பட்டா முகாம்களை நடத்துவது தொடர்பாக பல்வேறு வழிகாட்டுதல்கள் மாவட்ட நிர்வாகத்துக்கு வழங்கப்படுகிறது. அதன்படி, சிறப்பு பட்டா முகாம்களில் மேற்கொள்ளப்பட உள்ள நடவடிக்கைகள் பின்வருமாறு:

* வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்குதல்: இந்த சிறப்பு முகாமில், பல்வேறு வகையான வழிமுறைகளின் கீழ் வீட்டுமனை பட்டாக்கள் மற்றும் பட்டா மாறுதல் ஆணைகள் பெற தகுதியான பயனாளிகளுக்கு பட்டா வழங்க வேண்டும்.

* பட்டா மாறுதல் பொதுமக்களிடமிருந்து மனுக்கள் பட்டா மாற்றம் பெறுதல்: முகாமில் பட்டா தொடர்பான மனுக்களை பெற்று அவற்றை இணையவழியில் பதிவுசெய்து தகுதியான மனுக்களுக்கு உடனுக்குடன் நடவடிக்கை மேற்கொண்டு பட்டா மாற்ற ஆணைகள் இணையவழியில் பயனாளிகளுக்கு வழங்க வேண்டும்.

* வருவாய் ஆவணங்களில் பிழைத் திருத்தம் மேற்கொள்ளுதல்: பல்வேறு வருவாய்த்துறை ஆவணங்களிலுள்ள பிழைகளை திருத்தம் செய்வது தொடர்பான மனுக்களை பொதுமக்களிடமிருந்து பெற்று அவற்றின் மீது விசாரணை மேற்கொண்டு உடனுக்குடன் இறுதி ஆணைகள் பிறப்பிக்க வேண்டும். அத்தகைய ஆணைகளின் அடிப்படையில், தமிழ் நிலம் மென்பொருளில் ஒரு வார காலத்திற்குள் சம்பந்தப்பட்ட வருவாய் கோட்டாட்சியரால் உரிய மாறுதல்கள் மேற்கொள்ள வேண்டும்.

* வருவாய்த்துறை தொடர்பான பிற மனுக்கள் மற்றும் இதர துறை சார்ந்த மனுக்கள்: மேற்படி சிறப்பு முகாம்களில் பெறப்படும் வருவாய்த்துறை தொடர்பான பிற மனுக்கள் மற்றும் இதர துறைச் சார்ந்த மனுக்களை தக்க நடவடிக்கைக்காக உரிய அலுவலர்களுக்கு அனுப்ப வேண்டும். மேற்கண்ட முகாமில் பெறப்படும் அனைத்து வகையான மனுக்களையும் ஒரு மாத காலத்திற்குள் விதிகளுக்குட்பட்டு தீர்வு காண வேண்டும். இவ்வாறு அவர் கடித்தில் தெரிவித்துள்ளார்.

The post தமிழ்நாட்டில் கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி 100 இடங்களில் சிறப்பு பட்டா முகாம்: அரசு அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: