சைக்கிளில் சென்று மக்களிடம் குறைகளை கேட்ட திமுக எம்பி

கம்பம்: தேனி தொகுதி திமுக எம்பி தங்க தமிழ்ச்செல்வன் இன்று காலை கூடலூர் பைபாஸ் சாலை வழியாக கம்பம் உழவர்சந்தைக்கு சைக்கிளில் சென்றார். பின்னர் அங்கிருந்த அதிகாரிகளிடம் சந்தை குறித்த விபரங்கள் மற்றும் சந்தையில் கடை வைத்துள்ளவர்கள், பொதுமக்களிடம் காய்கறிகள் விலை நிலவரம் குறித்து கேட்டறிந்தார். தொடர்ந்து கம்பம் சிக்னல் அருகே சென்ற அவர், அங்கு துப்புரவு பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.

பின்னர் நிருபர்களிடம் அவர் கூறுகையில், ‘‘பதவி ஏற்றதும் முதல் பணியாக திண்டுக்கல்லில் இருந்து சபரிமலைக்கு ரயில் பாதை அமைக்கக்கோரி ரயில்வே வாரிய தலைமை நிர்வாக அதிகாரி ஜெயவர்மா சின்காவிடம் கோரிக்கை விடுத்தேன். முதற்கட்டமாக திண்டுக்கல்லில் இருந்து தேனிக்கு ரயில்பாதை அமைக்கப்படும்.

அதன்பின் சபரிமலை வரை ரயில் பாதையை நீட்டிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். தேனி, போடி, ஆண்டிபட்டி மற்றும் உசிலம்பட்டி ஆகிய ஊர்களில் புறவழிச்சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கும்படி ஒன்றிய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரியிடம் கோரிக்கை விடுத்தேன். திட்ட அறிக்கை தயார் செய்து தரும்படி கேட்டுள்ளார். விரைவில் அதற்கான பணிகள் தொடங்கும்’’ என்றார்.

The post சைக்கிளில் சென்று மக்களிடம் குறைகளை கேட்ட திமுக எம்பி appeared first on Dinakaran.

Related Stories: