புதுச்சேரி பிரெஞ்சு துணை தூதரகத்தில் பிரான்ஸ் தேசிய சட்டமன்ற தேர்தலுக்கான 2ம் கட்ட வாக்குப்பதிவு துவங்கியது

புதுச்சேரி: புதுச்சேரியில் உள்ள பிரெஞ்சு துணை தூதரகத்தில் பிரான்ஸ் தேசிய சட்டமன்ற தேர்தலுக்கான இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கியது. பிரெஞ்சு குடியுரிமை பெற்ற வாக்காளர்கள் வாக்களித்தனர். பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோனால் தேசிய சட்டமன்றம் கலைக்கப்பட்டதைத் தொடர்ந்து ஐந்தாவது பிரெஞ்சு குடியரசின் 17வது தேசிய சட்டமன்றத்தின் 577 உறுப்பினர்களையும் தேர்வு செய்வதற்காக ஜூன் 30 மற்றும் ஜூலை 7ம் தேதிகளில் 2 கட்டங்களாக பிரான்சில் முன்கூட்டியே தேசிய சட்டமன்றத் தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இதில் பிரான்ஸ் தனது குடிமக்களுக்கு, பிரான்ஸ் நாட்டுக்கு வெளியே வசிக்கும் பிரெஞ்சு குடிமக்கள் தங்கள் பிரதிநிதிகளை நியமிக்க குடியிருக்கும் நாட்டிலிருந்து தூதரக வாக்காளர் பட்டியலில் வாக்களிக்கும் வாய்ப்பை வழங்கி உள்ளது. அதன்படி முதற்கட்ட வாக்குப்பதிவு கடந்த ஜூன் மாதம் 30ம் தேதி நடந்தது. தொடர்ந்து இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 8 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெறுகிறது.

இதில் பிரெஞ்சு குடியுரிமை பெற்றுள்ள 4,550 பேர் வாக்களிக்க உள்ளனர். ஆசிய நாடுகளின் தொகுதிக்கு முதல் சுற்று தேர்தலில் 15 வேட்பாளர்கள் இருந்த நிலையில் தற்போது 2 பேர் மட்டும் 2வது சுற்றில் உள்ளனர். தற்போதைய அதிபர் இமானுவேல் மக்ரோனின் வேட்பாளர் முதல் சுற்றிலேயே தோல்வி அடைந்த நிலையில் 2வது சுற்றில் அவர் வெளியேற்றப்பட்டுள்ளார். வாக்குப்பதிவு இன்று மாலை 6 மணிக்கு முடிவடைந்தவுடன் வாக்கு எண்ணிக்கை இன்று இரவு 8 மணிக்கு நடைபெறும். தொடர்ந்து நள்ளிரவே தேர்தல் முடிவுகள் வெளியிடப்படும்.

The post புதுச்சேரி பிரெஞ்சு துணை தூதரகத்தில் பிரான்ஸ் தேசிய சட்டமன்ற தேர்தலுக்கான 2ம் கட்ட வாக்குப்பதிவு துவங்கியது appeared first on Dinakaran.

Related Stories: