தென்மேற்கு பருவமழை தவறியதால், அணைகளின் நீர்மட்டம் தொடர்ந்து சரிவு: கம்பம் பகுதி பள்ளத்தாக்கு விவசாயிகள் கவலை

தேவாரம்: கம்பம் பள்ளத்தாக்கில் தென்மேற்கு பருவமழை ஏமாற்றி வருவதால், விவசாயம் பெரும் அளவு பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. அணைகளின் நீர்மட்டம் குறைவதால் பொதுப்பணித்துறை அதிகாரிகள் உரிய கவனம் செலுத்திட பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தேனி மாவட்டம் கம்பம் பள்ளதாக்கில் முழுமையான விவசாய ஆதாரமாகவும், குடிநீர் ஆதாரமாகவும் விளங்குவது பெரியாறு அணை. இந்த அணையின் முழு கொள்ளளவான 142 அடியில் நீரை சேமித்து வைக்கப்படும் நீர் குடிநீர் மற்றும் பாசனத்திற்காக பயன்பட்டு வருகிறது. இந்தாண்டு தொடக்கம் முதலே அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் முழுமையாக மழை இல்லை. இதனால் அணை நீர்மட்டம் மிகவும் குறைவாக இருந்தது. இந்நிலையில், அணையில் இருந்து முதல் போக பாசனத்திற்காகவும், குடிநீருக்காகவும் தன்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. இடையில் தண்ணீர் திறப்பு குறைக்கப்பட்டது.

இந்நிலையில், கம்பம் பள்ளதாக்கு பகுதிகளான கூடலுார், கம்பம், உத்தமபாளையம், அனுமந்தன்பட்டி, சின்னமனூர் முதல் வீரபாண்டி வரை முழுமையாக விவசாயத்திற்கு தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. தற்போது கோடையை மிஞ்சும் வெப்பம கொளுத்துவதால், தேவாரம், கோம்பை, பண்ணைப்புரம் சுற்றுப்பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக கம்பம் பள்ளத்தாக்கில் தற்போது முதல் போகம் நெல் சாகுபடி தொடங்கி நாற்று நடவு அனைத்து வயல்களிலும் முடிந்துவிட்டது. பயிர்கள் ஒரு மாதத்திற்கு மேலாக வளர்ந்துள்ளது. ஆனால் முழுமையாக பெரியாறு அணையில் மழை ஏமாற்றி வருவதால் அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென சரிந்து தற்போது நீர் மட்டம் 118க்கும் கீழ் சரிவை நோக்கி சென்று வருகிறது. அணையில் இருந்து விநாடிக்கு 400 கனஅடி குடிநீருக்காகவும் பாசனத்திற்காகவும் திறக்கப்பட்டுள்ளது, இதனால் விவசாயிகள் பெரும் அதிர்ச்சியில் உள்ளனர்.

தேனி மாவட்டத்தை பொறுத்தவரை தென்மேற்கு பருவமழை அதிகமாக பெய்யும். அப்போது பெரியாறு அணை மட்டுமல்லாமல், ராயப்பன்பட்டி, சண்முகா நிதி, வைகை அணை உள்ளிட்ட அணைகளும் நிரம்பி வழியும். இதனால் நிலத்தடி நீர்மட்டம் பெருகி விவசாய பரப்பும் அதிகரிக்கும். தற்போதைய சூழ்நிலையில் விவசாயிகள் நட்ட பயிரை எப்படி காப்பாற்றலாம் என்ற நிலையில் தவித்து வருகின்றனர். உத்தமபாளையத்தில் கம்பம் பள்ளத்தாக்கு அனைத்து விவசாய சங்கங்களின் ஆலோசனைக் கூட்டம் தலைவர் தரவேஷ் மைதீன் தலைமையில் நடைபெற்றது. இதில் பெரியாறு அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரை முதல் போக விவசாயத்திற்கு முறைப்படுத்தி வழங்கிட வேண்டும். தண்ணீர் வீணாக்காமல் அனைத்து விவசாயிகளுக்கும் சென்றடைய வேண்டும். தண்ணீரை பகிர்ந்து அளிப்பதில் முழு கவனம் செலுத்த வேண்டும் என பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு கோரிக்கை வைக்கப்பட்டது.

இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது: பெரியாறு அணை நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தற்போது போதிய மழை இல்லை. இதனால் முதல் போக நெல் விவசாயம் முழுமை அடையுமா என்ற நிலை உள்ளது. கம்பம் பள்ளதாக்கில் குடிநீர் தட்டுப்பாடு என்றுமே வந்ததில்லை. தற்பொது மழை இல்லாத நிலை நீடித்தால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு உள்ளது. அணையில் இருக்கும் தண்ணீரை குடிநீருக்கும் விவசாயத்திற்கும் தேவைக்கேற்ப திறந்து விட வேண்டியது பொதுப்பணித்துறை அதிகாரிகளின் கடமையாகும். முழுமையாக தண்ணீரை திறந்து விட்டு குடிநீர் தட்டுப்பாட்டை ஏற்படாத நிலையை உருவாக்க வேண்டும். பொதுப்பணித்துறை அதிகாரிகள் உரிய கவனம் செலுத்த வேண்டும். இதற்கு தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர்.

The post தென்மேற்கு பருவமழை தவறியதால், அணைகளின் நீர்மட்டம் தொடர்ந்து சரிவு: கம்பம் பகுதி பள்ளத்தாக்கு விவசாயிகள் கவலை appeared first on Dinakaran.

Related Stories: