பாலக்காடு : பாலக்காடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தென்மேற்குப்பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. இதனால் மலம்புழா உட்பட அனைத்து அணைகளிலும் நீர் மட்டம் உயர்ந்துள்ளது. மலம்புழா அணையின் நான்கு மதகுகள் வழியாக 15 செ.மீ அளவுக்கு உபரிநீர் வெளியேற்றம் செய்யப்பட்டது. மீன்கரை அணையில் இருந்து 5 செமீ அளவிலும் மதகுகள் வழியாக உபரிநீர் வெளியேற்றம் செய்யப்படுகிறது.
நேற்றைய நிலவரப்படி காஞ்ஞிரப்புழா 94.54 மீட்டர், மலம்புழா 111.42 மீட்டர், மங்கலம் 76.85 மீட்டர், போத்துண்டி 103.70 மீட்டர், மீன்கரை 156.11 மீட்டர், சுள்ளியாறு 151.42 மீட்டர், வாளையார் 199.61 மீட்டர், சிறுவாணி 876.05 மீட்டர், மூலத்தரை 181.30 மீட்டர் அளவுக்கு நீர் மட்டம் உயர்ந்தது. இதில் மங்கலம் அணையில் இருந்து 30 செமீ உபரிநீர் வெளியேற்றம் செய்யப்பட்டது. இதனால் வடக்கஞ்சேரி, காவச்சேரி, புதுக்கோடு, மேலார்கோடு மற்றும் கண்ணம்பிரா பகுதிகளில் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சிறுவாணி அணையில் இருந்து 20 செமீ அளவில் உபரிநீர் குழாய்கள் வழியாக தண்ணீரில் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் அட்டப்பாடி சோளையூர், அகழி மற்றும் பவானி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
காஞ்ஞிரப்புழா அணையில் இருந்து உபரிநீர் வெளியேற்றம் காரணமாக காஞ்ஞிரப்புழா, தச்சம்பாறை, கரிம்புழா, குமரம்புத்தூர், வெள்ளினேழி, தச்சநாட்டுக்கரை பகுதிகளில் வசிக்கின்ற மக்களுக்கு உள்ளாட்சி நிர்வாகம் சார்பில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
மலம்புழா அணையில் இருந்து நான்கு மதகுகள் வழியாக உபரிநீர் வெளியேற்றப்பட்டுள்ளது. இதனால் மலம்புழா, அகத்தேத்தரை, பாலக்காடு நகராட்சி, பரளி, மங்கரை, புதுப்பரியாரம் மற்றும் லக்கிடி பரளி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது. மேலும் பாலக்காடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக பட்டாம்பி பாரதப்புழா ஆற்றில் மழை வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது.
The post தென்மேற்குப்பருவமழை தீவிரம் மலம்புழா அணைகளில் நீர் மட்டம் உயர்வு appeared first on Dinakaran.
