செந்தில் பாலாஜி கைது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் கண்டனம்..!!

சென்னை: செந்தில் பாலாஜி கைது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் கண்டனம் தெரிவித்துள்ளார். அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறையில் பணி நியமனம் செய்த விவகாரம் தொடர்பாக அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத் துறையினரால் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டார். அப்போது அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. நெஞ்சுவலியால் செந்தில் பாலாஜி கதறி அழுத நிலையில் அவரை ஓமந்தூரார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அனுமதித்தனர்.

அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான கைது நடவடிக்கைக்கு அமைச்சர்கள், அரசியல் கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜி அனுமதிக்கப்பட்டுள்ள ஒமந்தூரர் மருத்துவமனைக்கு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வருகை தந்தனர். அவரைத் தொடர்ந்து மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு, அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு உள்ளிட்டோரும் சென்றனர்.

இந்நிலையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசனும், அமைச்சர் செந்தில்பாலாஜி கைதுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். இது ஒரு அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்றும் தலைமை செயலகத்தில் சோதனை நடத்த செல்லும் போது தலைமைச் செயலாளருக்குக் கூட தெரியப்படவில்லை என்றும் கூறினார். முழு ஒத்துழைப்பு தருகிறேன் என்று கூறியும் செந்தில் பாலாஜியை கைது செய்திருக்கிறார்கள். ஜனநாயகத்துக்கு விரோதமான அதிகாரத்தை தவறாக பயன்படுத்துகிறார்கள் என்றும் கண்டனம் தெரிவித்தார். மேலும் அமலாக்கத்துறையை தவறாக பயன்படுத்துகிறார்கள் என்றும் கூறினார்.

The post செந்தில் பாலாஜி கைது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் கண்டனம்..!! appeared first on Dinakaran.

Related Stories: